Friday, March 29, 2024 04:03 am

Subscribe to our YouTube Channel

268,000SubscribersSubscribe
Home Blog Page 4

ஊடக முதலாளியும் ஊழல் பெருச்சாளியும்- சேவற்கொடி செந்தில்

கட்டுரையின் தலைப்பை பார்த்த உடனே பலத்த கண்டனங்களை பலரும் தெரிவிக்க காத்திருக்கிறீர்கள் என தெரிகிறது. இந்த தலைப்பின் கருத்தை படிக்காமல் எப்படி நீங்கள் தலைப்பை வைத்து மட்டுமே கருத்து கூற முடியும்.அதனால் கட்டுரையை முழுவதும் படிக்கவும் பிறகு உங்களது மேலான கருத்துகளை அள்ளி தெளிக்கவும்.

சரி இப்போது விஷயத்திற்கு வருவோம். பத்திரிகையாளர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர். வெகு ஜன பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவரும் மாத சம்பளத்திற்கு ஒரு நிறுவனத்திடம் வேலை பார்த்து தான் தனது பொருளாதார தேவைகளை தீர்த்துகொள்கிறார்கள். ஆனால் இங்கு வலதுசாரிகள் மட்டுமின்றி நடுநிலை சாமானியர்கள் கூட பத்திரிகையாளர்களை ‘காசுக்கு தான இவ்வளவு போராட்டம், கொடுக்குற காச வாங்கிட்டு போங்கப்பா’, ‘ அதான் ஆயிரகணக்குல சம்பளம் வாங்குறீங்க அப்புறம் எதுக்கு எம்.எல்.ஏ. மினிஸ்டர் பின்னாடி சுத்துறீங்கனு’ அப்படி இப்படினு அவங்க டீ குடிக்கிற 10 நிமிடம் , டிவி பார்க்குற 10 நிமிடத்தில் போகிற போக்கில் ஒரு முத்திரை குத்திவிட்டு சென்று விடுகின்றனர். ஆனால் நீங்கள் பத்து நிமிடம் வாசிக்க கூடிய செய்தி பேப்பர் , செய்தி ஊடகத்திற்கு தான் நாங்கள் நாள் முழுவதும் உழைத்துக்கொண்டிருக்கிறோம். இங்குள்ள பத்திரிகையாளர்கள் ஊடகவியலாளர்கள் வாழ்க்கை கட்டமைப்பை சினிமா வேறு விதமாக காட்டிவிட்டது. நம்ம ஊரு மக்கள் தான் சினிமா வருவதையும், வாட்ஸ்அப்பில் வருவதையும் அப்படி நம்பி விடுகின்றனர்.

உண்மை நிலை என்னவென்று யாருக்கும் தெரியாது. பலர் தங்களது வாழ்க்கையை கத்தியின் மேல் நடப்பது போல தான் நடந்து கொண்டிருகின்றனர். நீங்கள் விமர்சனம் செய்யகூடிய அனைவரும் பெரிய அச்சு ஊடகம் காட்சி ஊடகத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.அவர்கள் மீது விமர்சனம் வைக்கலாம் தவறு கிடையாது, யாரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் கிடையாது.ஆனால் விமர்சனம் என்ற பெயர் சகட்டுமேனிக்கு பேசுவதை எப்படி சகித்து கொள்வது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முன்னணி ஊடகவியலாளர்கள் பலர் ஒரு குறிப்பிட்ட ஊடகத்தில் இருந்து தூக்கப்பட்டனர்.அதற்கு எந்த சாமானியராவது குரல் கொடுத்தார்களா அவர்கள் எங்களுக்காக தான் அங்கு பேசுகின்றனர் என்று கேள்வி எழுப்பினார்களா ????.

கண்ணுக்கு நேரே நடக்கும் இந்த தவறையே மக்களால் உணர முடியவில்லை என்ற போது, கடைநிலை பத்திரிகையாளர்கள் ஊடகவியாலாளர்கள் குறித்து நீங்கள் எப்படி அறிவீர்கள். ஆனால் இங்கு தான் ஒரு மீடியா மாபியா நடக்கிறது. அதனையும் நாம் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். ஆனால் இது போன்று செய்பவர்களை கட்டாயம் அடையாளபடுத்துவோமே தவிர இவர்களை எல்லாம் பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் என்று வக்காலத்து வாங்க மாட்டோம். சரி இந்த மீடியா மாபியாக்களால் சாதாரண பத்திரிகையாளர்கள் எப்படி பாதிக்கிறார்கள் என்று எடுத்து கூறினார்கள் முதலாளி பெருச்சாளி ஆன கதை தெரியவரும்.

இங்கு கருத்து சுதந்திரம் அனைவருக்கும் இருக்கும் போது மூலைக்கு ஒரு பத்திரிகை நிறுவனம் மன்னிக்கவும் நிறுவனம் என்ற பெயரில் ஒரு ஒன் மேன் ஷோ என்று வைத்து கொள்ளலாம்.ஒரு பத்திரிகையை தங்களது பெயரில் வைத்துகொள்கின்றனர். வார பத்திரிகையை தினசரி பேப்பர் போல நான்கு பக்கத்தில் வெளியில் உள்ள அச்சகத்தில் நூறு காப்பி அடிகின்றனர். இப்போது பத்திரிகைக்கு கன்டென்ட் கிடைக்க வேண்டும் அதே நேரத்தில் நாமும் சம்பாதிக்க வேண்டும். வி.ஏ.ஓ, தாசில்தார் ,பியூன் ,கார்பரேஷன் அதிகாரி, பிரைவேட் காண்ட்ரேக்டர்களை மிரட்டுவது. அதனை செய்தியாக்கி விட்டுவிடுவோம் மானம் போய்விடும், மரியாதை போய் விடும் என்று பேரம் பேசுவது. அந்த விலைக்கு ஒத்து வரவில்லை என்றால் செய்தியை பப்ளீஷ் செய்துவிட்டு விலையை ஏற்றி வாங்குவது.

இதனால் தான் பாருங்கள் பெரிய நிறுவனத்தில் வேலை பார்த்தும் இ.எம்.ஐ கட்ட முடியாமல் திணறும் பத்திரிகையாளர்கள் மத்தியில் சொகுசு கார் , மடிப்பு கலையாத வெள்ளை சட்டை என தன்னை மற்றவர்களிடம் இருந்து தணித்து காட்டிக்கொண்டு வசூல் வேட்டை நடத்திக்கொண்டிருகின்றனர். இதில் ஒரு உண்மை சம்பவத்தை நாம் இப்போது பார்க்கலாம்.
மதுரையை சேர்ந்த ஒரு நபர். பெயர் குறிப்பிட விரும்ப வில்லை. மேற்கூறிய சொகுசு கார், வெள்ளை சட்டை அடையாளம் எல்லாம் மதுரையில் அனைத்து பத்திரிகையாளர்களுக்கு அத்துப்படி. அந்த நபருக்கு எழுத படிக்க தெரியாது.ஒரு பெரிய சிபாரிசு பேரில் பெரிய ஊடகத்தில் நிருபராக சேர்கிறார்.ஆனால் தனக்கு செய்தி எழுத வராது என்பதை அங்கு வெளிபடுத்த விரும்ப வில்லை. பெரிய நிறுவனம் என்பதால் நாம் கட்டப்பஞ்சாயத்து நடத்தலாம் என்று எண்ணி வசூல் வேட்டையை தொடங்குகிறார். இதில் லஞ்சம் வாங்கும் போது மாட்டிக்கொள்ளக்கூடாது என உடந்தைக்கு அவரது மனைவியையும் சேர்த்துக்கொள்கிறார். அவர் தான் லஞ்சபணத்தை வாங்கி வருவார்.

சரி இப்படி இருக்க முடியாது நிறுவனத்துக்கு செய்தி அனுப்ப வேண்டும்.அப்போது செய்தியை எழுதி அனுப்பும் முறை என்பதால் செய்தியை எழுதி அனுப்புகிறார்.செய்தியில் ஒரு கோர்வை இல்லாமல் , எழுத்துப்பிழை என அனைத்திலும் தவறு நடக்கிறது. இதனை தொடர்ந்து முதல் செய்தி என்று அந்த நிறுவனமும் கண்டுகொள்ள வில்லை. ஆனால் அந்த நபர் அதனை சாக்காக பயன்படுத்திக்கொண்டு வசூல் வேட்டையை ஆரம்பிக்கிறார் . செய்தியை தான் எழுதாமல் வேறு ஒரு நபரை எழுதி சொல்லி அதனை நிறுவனத்திற்கு அனுப்புகிறார்.

செய்தி எழுதுபவர் கம்யூனிஸ்ட் சிந்தனை கொண்டவர் என்பதால் எழுத்தில் இருக்கும் செய்திக்கும் அந்த நபரின் செய்கைக்கும் சம்பந்தம் இல்லாமல் இருப்பதை நிறுவனம் கண்டுபிடிக்கிறது.அவரை வேலையை விட்டு தூக்குகிறது. தற்போது இதே நபர் அரசியல் பெயர் கொண்ட ஒரு பத்திரிகையில் இணைகிறார். இதே வசூல் வேட்டையை நடத்தி சம்பாதித்து விடுகிறார். நாமும் எத்தனை நாள் தான் இப்படி இருப்பது என்று தன்னை தானே ஆசிரியர் என்று கூறிவிட்டு ஒரு இணைய பத்திரிகையை (எந்த ஒரு அடிப்படை விஷயமும் தெரியாமல் )ஆரம்பிக்கிறார். அதே வசூல் வேட்டை தான் இங்கும் ஆனால் ஒரு சிறு வித்தியாசம் என்னவென்றால் அப்போது நடந்து சென்று 1000 வாங்கிவிட்டு இப்போது காரில் சென்று 5000 வாங்குகிறார். ஒரு செய்தி எழுத தெரியாது , எந்த செய்திக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று தெரியாது. சோசியல் மீடியா குறித்தும் எதுவும் தெரியாது.இதனால் தற்போது நிலை என்னவென்றால் இது போன்ற ஊழல் பெருச்சாளிகள் பணம் சம்பாதிக்க பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் ஒளிந்துகொண்டு மற்றவர்களுக்கு அவமானமாக உள்ளனர்.

தற்போது உள்ள இளையதலைமுறையுடன் மோத முடியவில்லை.அதனால் தான் இத்தனைஆயிரம் பார்வையாளர்களை வைத்துள்ளேன். இணைய செய்தி தளம் வைத்துள்ளேன் என்று கூறி கட்டப்பஞ்சாயத்து நடத்தி கொண்டு வருகிறார். இவர் கட்டப்பஞ்சாயத்து நடத்த பத்திரிகையை பயன்படுத்துகிறார். இது இட்டுகட்டப்பட்ட கதை அல்ல உண்மை சம்பவம். தற்போதும் அந்த மனிதர் பத்திரிகையாளர் என்று கூறிக்கொண்டு உலாவிக்கொண்டு தான் உள்ளார். இதனை நாம் தட்டிக்கேட்க முடியுமா??? இவர்கள் தங்களது தோற்றத்தை ஆன்மீகவாதியாக மாற்றிகொள்கின்றனர். எதாவது அரசியல் ரீதியாக பிரச்னை என்றால் அப்படியே வலதுசாரி அமைப்புகளுடன் ஒன்றி விடுவது. இது தான் இவர்களின் கேவலமான பிழைப்பு.

ஒரு அமைச்சர் அல்லது எம்.எல்.ஏ செய்தியாளர் சந்திப்பு நடத்துகிறார் என்றால் இது போன்ற நபர்கள் தான் கவருக்காக செய்தி சேகரிக்க செல்கின்றனர். பெரிய நிறுவனத்தில் பணி புரிபவர்கள் வாங்குவது இல்லை. காரணம் வேலை நிரந்தரம் இல்லை உடனடியாக வேலையை நீக்கிவிடுவார்கள் என்ற பயம் இருக்கும்.ஆனால் இவர்களுக்கு அப்படி இல்லை , இவர்கள் எல்லாம் தனி நபர் கொண்ட பத்திரிகைகள் தான். கொஞ்சம் காசு பணம் இருப்பவர்கள் தங்களது தொழிலுக்கு ஒரு ஆயுதமாக பயன்படுத்திக்கொள்ள பத்திரிகை நடத்திக்கொண்டு இருகின்றனர்.அவர்கள் பத்திரிகையாளர்களுக்கு சம்பளம் கொடுப்பது இல்லை விளம்பரம் வாங்கி கொடுத்து அதில் வரும் கமிஷன் மட்டும் தான் எடுத்துகொள்ள முடியும். அப்படி இருக்கும் நிலையில் அப்படிப்பட்ட பத்திரிகையாளர்கள் அமைச்சர்கள் செய்தியாளர் சந்திப்பின் போது அந்த 200,500 வாங்கி தான் ஆக வேண்டும்.அதனை வாங்கிகொண்டு செய்தி போட வேண்டும் அப்படி அந்த செய்தி வரவில்லை என்றால் மறு தடவை அவருக்கு செய்தியாளர் சந்திப்பின் போதுஅழைப்புவிடுக்கப்படாது. அந்த 500 வாங்குவதற்கும் அடிதடி சண்டை நடக்கும்.

அதனை பார்த்து தான் அமைச்சர்கள் முதல் சாமானியர்கள் வரை பத்திரிகையாளர்களை இழிவாக பார்க்கின்றனர்.காட்சி ஊடகம், அச்சு ஊடகம் நடத்தக்கூடியவர்கள் தங்களது பத்திரிகையாளர்களுக்கு சம்பளம் கொடுத்திருந்தால் அவர்கள் இப்படி 500 ரூபாய்க்கு அடித்துகொள்வார்களா ??? அப்படி சம்பளம் கொடுக்க முடியாது என்றால் எதற்கு அந்த நிறுவனம் நடத்த வேண்டும் உங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் பத்திரிகையாளருக்கு குடும்பம் ஏதும் இருக்காதா ?? அவர்களுக்கு குடும்ப செலவு கல்வி செலவு மருத்துவ செலவு இருக்காதா ??? . இவ்வளவு ஏன் வேலை பார்த்த சம்பளத்தை கேட்ட ஒரு பத்திரிகையாளரிடம் ஒரு ஊடகத்தின் நிறுவனர் ஆசிரியர் சொல்லிகொள்ளும் ஒரு முதலாளி கூறிய பதில் நான் சம்பளம் கொடுக்காமல் இருப்பதால் நீங்க தினமும் சோறு சாப்பிடாமலா இருப்பீர்கள் ” என எகத்தாளமாக பதில் கூறுகிறார். இப்படி ஊழல் செய்தியை மறைக்க காசு , அரசு ஊழியரை மிரட்ட காசு , அரசு பத்திரிகையாளர் அட்டைக்கு காசு , செய்தியாளர் சந்திப்பில் காசு என இப்படி ஒரு மீடியா மாபியா பிழைப்பு நடத்திக்கொண்டிருக்க பலி விழுவதோ ஒட்டு மொத்த பத்திரிகையாளர்கள் மீது தான். இங்கு தென்தமிழகத்தில் இருந்து ஊடகத்துறைக்குள் நுழைய முயற்சிக்கும் இளையதலைமுறையினர் சிலர் இது போன்ற மாபியாக்களில் சிக்கி ஏமாந்துள்ளனர். ஏன் அரசு அடையாள அட்டையை விற்பனை செய்கிறீர்கள் என்று கேட்டால் ஊரில் யாரும் செய்யாததையா நாங்கள் செய்கிறோம் என்று நம்மிடமே வியாக்கியானம் பேசுவர்.

ஆக கார்ப்பரேட் பாட்டாளி பத்திரிகையாளரும், கடைநிலை பாட்டாளி பத்திரிகையாளரும் கடைசி வரை சம்பளத்தை நம்பி நடுத்தர வாழ்க்கையை தான் வாழ்ந்துகொண்டிருக்கிறான்.
கருத்து சுதந்திரத்திற்காக பேசும் ஒரு ஊடகவியலாளரால் தனது சொந்த கருத்தை சமூக வலைத்தளத்தில் எழுத முடியாது.காரணம் இங்குள்ள அறிவு ஜீவிகள் அந்த கருத்தை தனிப்பட்ட நபரின் கருத்தாக எடுத்துக்கொள்ளாமல் செய்தி நிறுவனத்தின் கருத்து இவர்கள் ஜால்ரா அடிக்கும் அஜண்டாவை கொண்டவர்கள் என்று முத்திரை குத்துவார்கள். இப்படி இருக்க ஊடகவியலாளர், பத்திரிகையாளர் எப்படி கருத்தியல் ரீதியாக பேச முடியும். இங்குள்ள ஊடக நிறுவனங்களை செய்தியாளர் சந்திப்பில் சென்றோமா மைக் போட்டோமா என்று இருங்கள் உங்கள் சித்தாந்த கருத்தை அங்கே காட்டாதீர்கள் என்கின்றனர். இன்னும் ஒரு சிலர் நீங்கள் பேப்பர் படித்து அறிவினை வளர்த்துக்கொள்ள வேண்டும்,ஆனால் நிறுவனத்தில் பேப்பர் கிடையாது, குறிப்பிட்ட இரண்டு செய்தி தாள்கள் தான் படிக்க வேண்டும் என்றெல்லாம் கூறுகின்றனர். இவையும் கட்டுக்கதையல்ல கண்ணால் கண்ட உண்மை சம்பவங்கள்.

இப்போதாவது பத்திரிகையாளர் நியாயம் என்று நீங்கள் நம்புவீர்கள் என்று நினைக்கிறேன். காரணம் இங்கு நான் மேற்கோள் காட்டிய அனைத்து சம்பவங்களும் இங்குள்ள ஒவ்வொரு பத்திரிகையாளருக்கு ஊடகவியலாளருக்கும் நடந்திருக்கும் அதனை வெளிக்காட்ட முடியாது.ஆனால் அவர்கள் உள்ளத்தில் இருக்கும் கனத்தை நான் கொஞ்சம் இறக்கி வைத்திருப்பதாக உணர்கிறேன்.

சேவற்கொடி செந்தில்

பெண்ணடிமைத்தனமும், சுயசாதிப் பற்றும்- சுபத்ரா

பெண் அடிமைத்தனத்தின் வழியாகவும், ஆணாதிக்கம் வழியாகவும், சாதி என்ற கற்பனையை வாழ வைக்கிறோம்.
ஒவ்வொரு முறையும் அங்கே போகாதே, இங்கே போகாதே என்று பெண்ணை வீட்டில் கட்டிப்போட்டு வைக்க காரணம்? யாரையாவது வேற சாதி பையனை லவ் பண்ணிட்டா? வேற சாதி பையன் இவள் மனதை கெடுத்துட்டா, போன்ற ‘கவலைகள்’ . அந்த கவலைகளின் அடிப்படை தனது சாதியை பாதுகாப்பது ஒன்றே!

பெண்ணுக்கு சின்ன வயதில் இருந்தே சுதந்திரத்தை பழக்கிவிட்டு ஒரு நாள் அந்த பெண் வேற்று சாதி காதலோடு வந்து நிற்கும் போது திடீரென அந்த சுதந்திரத்தை பறிப்பது கடினம் என்பதால் சிறு வயது முதலே கட்டுப்பாடு அடிமைத்தனம் கல்வி கடினம், சுதந்திரமாக வெளியே எங்கும் போக முடியாது, பேச முடியாது, பெற்ற மகளையும் கூடப்பிறந்த சகோதரியையும் இப்படி சிறை போல வாழ வைத்து அதை நியாயப்படுத்துவது இந்த சாதி என்ற கற்பனைக்காக. எங்கும் வியாபித்து இருக்கும் ஆணாதிக்கம் சாதியை சேவகம் செய்ய மட்டுமே!

காதல் என்பது யார் மீது வேண்டுமானாலும் திடீரென வரலாம், அதற்கு முன் நட்பு வரும். ஆக வேற்று சாதி நட்பு பேச்சுக்கள் பழக்கம் அத்தனையையும் கட்டுப்பாடுத்தி இயற்கையாகவே ஒரு உயிருக்கும் இன்னொரு உயிருக்கும் நிகழும் அன்பை கட்டுப்படுத்தி, நீ இவர்களுடன் தான் அன்பாக இருக்க வேண்டும், இவர்களுடன் அன்பாக இருக்க கூடாது என்று விதிப்பது. முன்பின் தெரியாத யாரோ ஒருவரை சுயசாதி என்பதால் நாங்கள் ஆணையிடும்போது, உனது அன்பு எங்கள் ஆணைக்கு கட்டுப்பட்டு அந்த கணவர் மீது சீறி பாய வேண்டும். கட்டுப்பாடு, பயத்தின் மூலமே சாத்தியம் என்பதால் பெண்ணின் மீது வன்முறை.

எதற்கு எடுத்தாலும் குற்றம் கண்டுபிடித்து பெண் மீது வன்முறை செய்த வண்ணமே இருந்தால் தானே அவளை கட்டுப்படுத்த முடியும்?
இப்படி எல்லா ஒடுக்கு முறையும் வீட்டிற்குள் செய்து, தலித் மீது வன்முறையை வீட்டுக்கு வெளியே செய்து, அதுவும் பல தலைமுறைகளாக செய்து, சாதிப்பது பத்து பைசா பிரயோசனம் இல்லாத சாதி மட்டுமே!

சாதி காணாமல் போக ஒரேயொரு தலைமுறை தான் வேண்டும். எந்த தலைமுறை இந்த அன்பை கட்டுப்படுத்தும் கொடுமையை தனக்குத்தானே நிகழ்த்த மறுக்கிறதோ அந்த தலைமுறையோடு இந்தியா, சாதி எனும் முட்டாள்தனமான கற்பனையில் இருந்து வெளியே வரும்.
அதுவரை 400 பெரியார் வந்தாலும், கண்ணுக்கு தெரியாத சாதி, எந்த மெடிக்கல் டெஸ்ட்டிலும் நிரூபிக்க முடியாத சாதி, இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் வாழும்!

சுபத்ரா

சென்னைப் பல்கலைக்கழக தொல்லியல் துறையில் நீண்ட வருடமாக நடந்து வரும் மோசடி! நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?

சென்னைப் பல்கலைக்கழக சேப்பாக்கம் வளாகத்தில் முதுகலை பட்டத்திற்கான பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை கடந்த 1960ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. தமிழக வரலாற்றில் மிக முக்கிய பங்கு வகித்த T.V மகாலிங்கம், K.V.இராமன் போன்றோரால் வளர்த்தெடுக்கப்பட்ட இந்த துறையினரால் காஞ்சிபுரம், அரிக்கமேடு,ஆற்பாக்கம், திருவக்கரை, அதியமான் கோட்டை, திருவாமாத்தூர், பாலூர் போன்ற பகுதிகளில் அகழாய்வுகள் செய்யப்பட்டு அறிக்கைகள் வெளியாகியுள்ளன. கடந்த காலங்களில் பல்வேறு ஜாம்பவான்களை உருவாக்கி பெருமை சேர்த்த இத்துறையில் இன்று பாடமெடுக்க பேராசிரியர்கள், துணைப் பேராசிரியர்கள் போன்ற எந்த பணியிடங்களும் நிரப்பப்படாமலேயே உள்ளது. குறிப்பாக நிரந்தர துறைத்தலைவர் நியமிக்கப்பட்டு பல காலங்கள் ஆகிறது. தற்போது பொறுப்பு துறைத்தலைவராக பணியில் இருக்கும் இணைப் பேராசிரியர் சௌந்தரராஜன் மீது பல்வேறு ஊழல் புகார்கள் நிரம்பி வழிகிறது.

கடந்த 62ஆண்டுகளாக பெரும்பாலும் தொல்லியல் குறித்த விழிப்புணர்வு வெகுசன மக்கள் மத்தியில் குறைவாக இருந்த காலத்தில் இத்துறையில் மாணவர் சேர்க்கையும் ஒற்றை இலக்கத்திலேயே இருந்து வந்தது. ஆனால் பேராசிரியர்கள், துணைப் பேராசிரியர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் பெருமளவு இருந்தனர். ஆனால் கடந்த 5ஆண்டுகளின் நிலைமையே வேறு‌‌. தமிழகத்தில் வெகுசன மக்கள் மத்தியில் தொல்லியல் குறித்த விழிப்புணர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றைய ஆளும் அரசு தமிழக தொல்லியலுக்கு ஒதுக்கிடும் நிதி உயர்ந்திருக்கிறது. அறிவியல் ஆய்வுகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. ஆனால் தமிழ்நாட்டிலேயே முதன்மையான பல்கலைக்கழகமாக விதந்தோதப்படும் சென்னைப் பல்கலைக்கழக தொல்லியல் துறையில் பேராசிரியர் பற்றாக்குறைகள், மலிந்து கிடக்கும் ஊழல்கள். மக்களுக்கு அதிகளவில் சென்று சேரும் தொல்லியல் விழிப்புணர்வையும், தமிழக மாணவர்களுக்கு வரலாறு மற்றும் தொல்லியல் மீதான பற்றினையும் பயன்படுத்தி கொள்ளையடிக்க திட்டமிடும் சென்னைப் பல்கலைக்கழக தொல்லியல் துறையும் பல்கலைக்கழக நிர்வாகமும் இவ்வாண்டு முதல் சுயநிதி படிப்பை துவங்கியிருக்கிறார்கள்.

மெரிட்டில் சேரும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 7500ரூ கட்டணம் என இரண்டு ஆண்டுக்கு 15000ரூபாயில் வாங்கும் பட்டத்திற்கு ஆண்டுக்கு 67,000ரூ என இரண்டு ஆண்டுக்கு ஏறத்தாழ 1,34,000ரூ சுயநிதி படிப்பு கட்டணம். மெரிட் மாணவர்களுக்கு 40இருக்கைகள். சுயநிதி படிப்பிற்கு 20இருக்கைகள். ஆக வருடத்திற்கு முதுகலை படிப்பில் மட்டும் 60மாணவர்களுக்கான இடங்கள் தரப்பட்டாலும் அமர்வதற்கு போதுமான வகுப்பறைகள் கிடையாது. நாற்காலிகள் கிடையாது. பாடமெடுக்க பேராசிரியர்கள் கிடையாது. தற்காற்லிகமாக நியமிக்கப்படும் வருகை பேராசிரியர்களுக்கு மாதம் ஒழுங்காக சம்பளமும் தரப்படுவதில்லை. ஆகையால் ஆண்டுதோறும் வருகை பேராசிரியர்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். கடந்த ஆண்டு இத்துறையில் பட்டம் பெற்றவர்கள் இந்த ஆண்டு தொல்லியல் வாத்தியார் ஆகிவிடுகிறார்கள். வகுப்பு எல்லாருக்கும் ஒன்று தான். பாடம் எல்லாருக்கும் ஒன்று தான். ஆனால் நிரந்தர துறைத்தலைவரோ, பேராசிரியர்களோ, துணைப் பேராசிரியர்களோ கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாக நியமிக்கப்படாமல் இருக்கிறார்கள்.

அதுபோக மெரிட்டில் அப்ளிகேஷன் போட்ட மாணவர்களுக்கு போன் மூலம் அழைப்பு விடுத்து, ‘உங்களுக்கு மெரிட்டில் கிடைப்பது கடினம். ஆகையால் சுயநிதி திட்டத்தில் ஒரு அப்ளிகேஷனை போடுங்க’ என மறைமுகமாக மிரட்டி பயம்காட்டி, மாணவர்களின் தொல்லியல் ஆர்வத்தை தூண்டி சுயநிதியில் சேர்க்கையினை நடத்தி முடித்த பின்னரே மெரிட்டுக்கான தேர்வினையே நடத்தினார் என கூறுகிறார்கள் தற்போது படித்துவரும் துறைசார் மாணவர்கள். மெரிட்டில் சேர்ந்திருந்தாலும் சரி, சுயநிதி படிப்பில் சேர்ந்திருந்தாலும் சரி, ஆண்டுக்கு ஒரு மாதம் மட்டும் பயிற்சிக்காக மாணவர்களுக்கு அளிக்கப்படும் அகழாய்வுக்கான செலவினங்களை பல்கலைக்கழகம் முன்கூட்டியே ஆண்டு கட்டணத்தில் பெற்றுக்கொண்டாலும் கூட பொறுப்பு துறைத் தலைவர் சௌந்தரராஜன் ஒரு மாணவனுக்கு 4000ரூ என படிக்கும் அத்தனை மாணவர்களிடமும் வசூலித்தே அகழாய்விற்கு அனுப்புகிறார். ஆக அகழாய்வு எனும் பெயரில் ஆண்டுக்கு பல்கலைக்கழகத்தில் இருந்து பெறும் நிதி ஒரு பக்கம், மாணவர்களிடம் வசூலிக்கும் நிதி ஒரு பக்கம். ஆனால் அகழாய்வு செய்யும் இடத்தில் தங்கும் வசதியோ உணவோ கூட நேர்மையாக செய்து தருவதில்லை. ஒரேயொரு வீட்டில் 15,20 நபர்களை தங்க வைப்பது. சமையல் என்கிற பெயரில் மலிவான பொருட்கள், எண்ணெய்களை மார்க்கெட்டில் பேரம் பேசி வாங்கி வந்து மாணவர்களுக்கு செய்து தருவது. அகழாய்வு செய்யும் லேபர் கூலியேன 10 நபர்களுக்கு கணக்கு காட்டிவிட்டு முழுக்க பயிற்சி மாணவர்களை கொண்டே வேலைவாங்கிக்கொள்வது என துறைத் தலைவர் செய்யும் அகழாய்வு அட்ராசிட்டிகள் படுமோசம் என முணுமுணுக்கிறார்கள் இத்துறையின் முன்னாள் மாணவர்கள் சிலர். அதோடு அகழாய்வுக்கான கருவிகள் எல்லாம் கே.வி இராமன் காலத்து கொடை. அதுவே அருங்காட்சியகத்தில் வைத்து இரசிக்க கூடிய அளவு பழமையானது. ஆனால் அவற்றை கொண்டே அகழாய்வுகள் நடந்து வருகிறது. கேம்ப்புக்காக விரிக்கப்படும் தார்பாய் முதற்கொண்டு 50ஆண்டு தொன்மையினை பறைசாற்றும் என்றால் எண்ணிப்பாருங்கள்.

அகழாய்வு முடித்து கிடைத்த பொக்கிஷங்களை பாதுகாக்க தேவையான அளவிற்கு கூட அருங்காட்சியகம் இல்லை. ஏற்கனவே T.V.மகாலிங்கம் மற்றும் கே.வி இராமன் காலத்து பொருட்களையே நேர்த்தியாக பாதுகாக்கும் முயற்சியை கூட இத்துறை தலைவர் இதுநாள் வரை எடுக்கவில்லை. ஆனால் எதற்கெடுத்தாலும் பணம்‌. மெரிட்டில் சீட் வேண்டுமானாலும் பணம்‌‌. MPhil சீட் வேண்டுமென்றாலும் பணம்‌. PhD சீட் வேண்டுமென்றாலும் பணம்‌. அதேபோல் thesis submission என்றாலும் பணம். அட்டெண்டன்ஸ் இல்லை என்றாலும் 2000ரூ வரை அவருக்கு தண்டம் செலுத்த வேண்டும். இவையெல்லாம் போக பாடம் நடத்த அவர் பெரும்பாலும் வரவேமாட்டார். ஆனால் அத்துறையில் அவர் தான் இப்போது ஒரே நிரந்தர teaching staff. ஆனால் அவருக்கோ தொல்லியல் குறித்த அடிப்படையான புரிதல் கூட இல்லை. Chalcolithic என்பதை அவர் இதுநாள் வரையில் charcoal lithic என்றே எடுத்து வருகிறார் எனில் அவரது தொல்லியல் புரிதலை புரிந்துக் கொள்ளுங்கள்.

அடுத்து போட்டாகிராபி துறை‌. பிரிட்டிஷ் காலத்தில் தொல்லியல் ஆய்வுகளில் பயன்படுத்தப்பட்ட அதே பழைய கேமராக்கள் தான் இன்றும் இத்துறையில் உள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியில் பார்த்தால் மாணவர்கள் கையில் வைத்துள்ள மொபைல் போன் கேமராவை காட்டிலும் பன்மடங்கு குறைவான தொழில்நுட்ப வசதி கொண்ட கேமராக்களிலேயே போட்டாகிராபி செக்ஷன் இயங்கி வருகிறது. தொல்லியல் ஆய்வுகளில் கூட இதுவே படமெடுக்க பயன்படுகிறது.

நிரந்தர துறைத் தலைவர், பேராசிரியர்கள், துணைப் பேராசிரியர்கள், நூலக பணியாளர், அருங்காட்சியக காப்பாளர், போதுமான வகுப்பறை வசதி, உட்காரும் நாற்காலிகள், சுகாதாரமான கழிப்பறை, சுத்தமான குடிநீர், கணினி வசதியுடனான லேப், முழுநேர நூலக வசதி, அழகான அருங்காட்சியகம் என எதுவும் இத்துறையில் இல்லை. அப்படியே இருக்கும் கொஞ்சநஞ்சமும் மிக மிக மோசமான நிலைமையிலேயே இருக்கிறது.

இந்த நிலை நீடிப்பதை தடுக்க பல்கலைக்கழக நிர்வாகமும், அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் தொல்லியல்துறை மாணவர்களின் கோரிக்கையாகும்.

இராசராசன் பார்ப்பன அடிமையா? – தொ.பரமசிவன்

“இராசராசன் காலம் பொற்காலம் அல்ல, அவன் ஏகாதிபத்தியவாதிதான்…. ஆனாலும் ராசராசனை இன்னும் கொண்டாடுவது ஏன்?” – தொ.பரமசிவன்.

உலகெங்கிலுமிருந்து காண வரும் மக்களை மிரளவைக்கும் பிரம்மாண்டம் தஞ்சைப் பெருங்கோயில். ஏகாதிபத்தியத்தின் கலை வெளிப்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். சோழப்பெருமன்னன் முதலாம் ராசராசனால் (கி. பி. 985 – கி. பி. 1012)கட்டப்பட்டது இது. ஆனால் அந்தப்பெருவேந்தனே இக்கோயிலைத் தான் கட்டியதாகக் குறிப்பிடாமல் ‘கட்டுவித்ததாகக்’ குறிப்பிடுகின்றான்.

“ பாண்டியகுலாசநி வளநாட்டு தஞ்சாவூர்க் கூற்றத்து தஞ்சாவூர்
நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீ ராஜராஜீச்வரமுடையார்க்கு
நாங்குடுத்தநவும் அக்கன் குடுத்தநவும் நம் பெண்டுகள் குடுத்தநவும்
மற்றும் குடும்பத்தார் குடுத்தநவும் ஸ்ரீவிமாநத்தில் கல்லிலே வெட்டுக
என்று திருவாய்மொழிஞ்சருள வெட்டிந”
என்பது இக்கோயிலின் முதல் கல்வெட்டு.

உடையார் என்பதுஅக்காலத்தில் அரசனுக்கும் இறைவனுக்கும் பொதுவாக வழங்கிய பெயராகும். அக்காலத்து மன்னர்களின் வழக்கப்படி அரசன் இக்கோயிலுக்கு ராஜராஜேச்வரம் என்று தன் பெயரையே சூட்டியுள்ளான். அக்கன் என்று குறிப்பிடப்படுவது. அவனது தமக்கையாரான ’ஸ்ரீவல்லவரையர் வந்தியத்தேவர் தேவியார் ஆழ்வார் பரநிந்தகன் குந்தவை’யாரைக் குறிப்பிடுவதாகும்.

பெண்டுகள் என்பது மனைவியரையும் பணிமகளிரையும் குறிக்கும். அவனும் அவன் அதிகாரிகளும் கொடுத்த தங்கம்,வெள்ளியால் ஆன நகைகள்,கலங்கள் உலோகத்திருமேனிகள் தவிர இக்கோயில் முழுவதும் கல்லாலேயே ஆக்கப்பட்டது. மலைகளே இல்லாத ஒரு நிலப்பரப்பால் சூழப்பட்ட இக்கற்றளிக்குத்(கற்றளி = கற்கோவில்) தேவையான கற்கள் நார்த்தா மலையிலிருந்து (இன்றைய திருச்சி மாவட்டம்) கொண்டுவரப்பட்டது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
196 அடி உயரமுள்ள இக்கோயிலின் விமானம் (கருவறைக்கு மேல் உள்ள பகுதி) செதுக்கப்பட்ட கற்களை அடுக்கிக் கட்டப்பட்டதாகும்.

ஆயிரமாண்டுக் காலத்தில் எத்தனையோ புயல்,மழை இயற்கைச்சீற்றங்களைக் கண்டபோதும் ஒரு கல் கூட ஒரு சென்டிமீட்டர் அகலம் கூட விலகவில்லை என்பதுதான் இதனுடைய தொழில்நுட்பச்சிறப்பு. வெளியிலிருந்து பார்க்கும்போது கோபுரம் போலத்தெரியும் இந்த விமானம் கற்களை வட்டமாக அடுக்கியே கட்டப்பட்டதாகும். நடுவில் தளங்கள் கிடையாது. கி. பி. 1010 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் நாள் ஆறாண்டுக் காலத்தில் கட்டப்பட்ட- இக்கோயிலில் வழிபாடு துவங்கியது.

உண்மையில் இதன் பெருமையெல்லாம் இதைக்கட்டிய கல்தச்சர்கள்,சிற்ப ஆசாரிகள்,உழைப்பாளிகள் ஆகியோரின் உடல் உழைப்பையும் மதி நுட்பத்தையுமே சாரும். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் இக்கோயிலில் பணியாற்றியுள்ளனர். காவிரிநாட்டின் பல ஊர்களிலிருந்தும் 400 தளிச்சேரிப் பெண்டுகள் ( தளி = கோயில், சேரி = சேர்ந்து வாழும் இடம் ) கொண்டுவரப்பட்டு நியமிக்கப்பட்டனர். இவர்கள் கோயிலில் அலகிடுதல்/மெழுக்கிடுதல் போன்ற பணி செய்பவராகவும் பகலில் விளக்கேற்றுதல் போன்ற பணி செய்பவராகவும் ஆடுமகளிராகவும் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டிருந்தனர்.
விளக்கெரிப்பதற்காக நானூறு இடையர்களுக்கு ஆடுகள், மாடுகள், எருமைகள் ஆகியன வழங்கப்பட்டன. இந்த ஆடுகள் ‘சாவா மூவாப்பேராடுகள்’ என அழைக்கப்பட்டன. இவர்கள் ஒவ்வொருவரும் நாளொன்றுக்கு உழக்கு நெய் விளக்கெரிக்கக் கோயிலுக்குக் கொடுக்க வேண்டும்

நெல் அளக்கும் மரக்காலுக்கும் நெய் அளக்கும் உழக்குக்கும் ’ஆடவல்லான்’ என்று அரசன் பெயரே சூட்டப்பட்டது. கோயிலுக்கான பாதுகாவலர்கள் “திருமெய்க்காப்புகள்” எனப்பட்டனர். தஞ்சைமண்டலத்தின் ஒவ்வொரு ஊர்ச்சபையாரும் ஒரு திருமெய்க்காப்பாளரைப் பெரியகோயிலுக்கு அனுப்ப வேண்டும். தளிச்சேரிப் பெண்டுகளைப்போல இவர்களுக்கும் ஆண்டொன்றுக்கு 100 கலம் நெல் வழங்கப்பட்டது. இக்கோவிலைக்கட்டிய சிற்பிக்கு ’இராஜராஜப்பெருந்தச்சன்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது. கோவிலில் நாவிதப்பணி செய்வாருக்கும் “இராஜராஜப் பெருநாவிசன்” என்ற பட்டம் தரப்பட்டது.

இராஜராஜன் பிறந்த ஐப்பசிமாத சதைய நட்சத்திரத் திருவிழா ஐப்பசி மாதம் இக்கோவிலில் கொண்டாடப்பட்டது. ’ இந்நாட்களில் ஆடியருளும் திருமஞ்சன நீரிலும் தண்ணீர் மீதிலும் ஒருநாளைக்கு ஏல அரிசி ஒரு ஆழாக்கும் பெருஞ்சண்பக மொட்டு ஒரு ஆழாக்கும் இடப்பெற்றுள்ளன ‘ என்று ஒரு கல்வெட்டால் அறியலாகிறது. திருச்சதைய நாள் பன்னிரண்டனுக்கும் ‘திருவிழா எழுந்தருளின தேவற்குத்’ திரு அமுது செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டமையை ஒரு கல்வெட்டுக் காட்டுகின்றது. மன்னன் இக்கோவிலில் உள்ள இறைத்திருமேனிகளுக்குக் கொடுத்த தங்க அணிகலன்களின் எடை மட்டும் 1230 கழஞ்சு 4 மஞ்சாடி ஒரு குன்றி ஆகும். இது சுமார் 2 கிலோ 692 கிராம்களாகும். தங்கத்தாலான கலன்கள் இக்கணக்கில் சேராது.

இக்காலத்தவர் கருதுவதுபோல இக்கோயில் தமிழ்ச்சைவ நெறிப்படிக் கட்டப்பட்டது அன்று. காசுமீரத்துப் பாசுபத சைவ நெறிப்படிக் கட்டப்பட்டதாகும். இக்கோவிலின் கருவறையைச் சுற்றி உள்ள ஊழ்த்திருச்சுற்றில் வாமம்,அகோரம்,சதாசிவம், சத்யோஜாதம் என்ற நான்கு திருமேனிகளைக் காணலாம். மூல லிங்கம் ஈசானதேவராகும். மூலலிங்கம் ஊன்றப்பட்ட ஆவுடையார் 32 முழம் திருச்சுற்று உடையதாகும். என்னதான் வியப்பைத் தந்தாலும் தஞ்சைப்பெருங்கோவில் ஏகாதிபத்தியத்தின் 10ஆம் நூற்றாண்டு வெளிப்பாடு என்று கூறுவதே பொருந்தும். ஏகாதிபத்தியத்துக்கென்று சில கலாச்சார வெளிப்பாடுகள் உண்டு. அவற்றில் ஒன்று அளவின் பிரம்மாண்டம்(133 அடி உருவத்திருவள்ளுவர் சிலை , பிரமிடுகள் போன்றவையும் இப்படித்தான். ) மற்றொரு பண்பு பொருட்களையும் மனிதர்களையும் தரவரிசைப்படுத்தும் நுட்பம்.

ஒரு நகைக்கான வர்ணனையில் முத்துக்களின் தர வரிசை இவ்விதமாக ஒரு கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது:- ‘ஸ்ரீராஜராஜ தேவர் ஸ்ரீபாதபுஷ்பமாக அட்டித்திருவடி தொழுத இரண்டாந்தரத்தில் முத்தில் கோத்த முத்து வட்டமும் அனுவட்டமும் ஒப்பு முத்துங் குறுமுத்தும் நிம்பொளமும் பயிட்டமும் அம்புமுதுங்கறடும் இட்டையுஞ் சப்பத்தியுஞ் சக்கத்துக்குளுர்ந்த நீரும் சிவந்த நீரும் உடைய முத்து ஆயிரத்தைந்நூற்று இரண்டினால் நிறை நாற்பத்தியொரு கழஞ்சே ஒன்பது மஞ்சாடியும். . . . . . ’
ஏகாதிபத்தியத்தின் மற்றொரு பண்பு அளவுகளின் கூர்மை அல்லது ஆணைகளின் துல்லியத்தன்மை)
‘ நிலன் இருபத்தைஞ்சே இரண்டு மா முக்காணி அரைக்காணிக் கீழ்
ஒன்பது மா முந்திரிகைக்கீழ் அரையினால் பொன் இருநூற்று நாற்பத்தாறு
கழஞ்சரையே மூன்று மா முக்காணியும் . . ’ என்று ஒரு ஆணை செல்கிறது.

ஆனால் இந்தப்பேரரசு எளிய மக்கள் வாழ்விடங்களான பறைச்சேரி, கம்மளச்சேரி, வண்ணாரச்சேரி,ஊர் நத்தம்,பாழ் நிலம், ஊடறுத்துப்போகும் வாய்க்கால்கள் ஆகியவற்றை இறையிலி நிலங்களாக அறிவித்திருக்கிறது. அந்த நிலையே ஆங்கிலேயர் ஆட்சிக்காலம்வரை தொடர்ந்தது. எப்படியிருந்தாலும் தீண்டாச்சேரியும் பறைச்சேரியும் வாழ்ந்த காலம்தான் அது. பறைச்சுடுகாடும் கம்மாளச்சுடுகாடும் தனித்தனியாக இருந்த காலம்தான் அது. இந்தப் ‘பொற்காலம்’ பற்றி நிறையவே இன்னும் பேச வேண்டும்.

அப்படியானால் ராசராசனைத் தமிழுலகம் இன்னமும் ஏன் கொண்டாடுகிறது?ராசராசன் தில்லையிலே அவன் காலத்திலேயும் நிலைபெற்றிருந்த பார்ப்பன மேலாதிக்கத்துக்கு எதிராகவே இக்கோவிலைக் கட்டியிருக்கிறான். தேவாரத்திருப்பதியங்களைப் பாட நாற்பத்தியெட்டுப்பேரை நியமித்திருக்கிறான். அதன் விளைவாகத்தான் தில்லைக்கோவிலின் மேன்மையைக் கொண்டாடிய சேக்கிழார் தஞ்சைப்பெருங்கோவிலைப்பற்றி மறைமுகமாகவேனும் ஒரு சொல் பாடவில்லை.

இத்துடன் “Royal shrines and the growth and expansion of Cola power” Geeta Vasudevan என்ற தலைப்பில் ஆய்வு செய்த முனைவர் கீதா வாசுதேவன் அவர்களுடைய கருத்தையும் இணைத்திருக்கிறேன். பல்லவர்களைப் போலல்லாமல் சோழர்கள் தங்கள் தமிழ் மரபை வலியுறுத்தினார்கள் என்று சொல்லும் முனைவர் கீதா, அரசர்கள் கட்டிய மாபெரும் கோயில்கள் அவர்கள் இறப்புக்குப் பிறகு மக்களிடம் நிலைத்து நிற்கவில்லை என்கிறார். அரச கோயில்களுக்கும் பாடல் பெற்ற கோயில்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைச் சுட்டுகிறார். அதை இத்துடன் இணைத்துள்ளேன்.

மணி மணிவண்ணன்

மனுஸ்மிருதியும் இந்திய நீதித்துறையும்!

இன்றைய இந்து மதத்தின் புனித நூலாக அறியப்படும் தர்மசாஸ்திரங்களில் ஒன்றான மனுஸ்மிருதியானது தொடக்கத்தில் ஆதி சங்கரரை தலைமையாக கொண்ட ஸ்மார்த்த பிராமணர்களால் மட்டுமே கடைபிடிக்கப்பட்டது அல்லது ஸ்மார்த்த மதத்தின் முக்கிய தர்ம சாஸ்திர நூலாக மட்டுமே இருந்து வந்தது. அது எவ்வாறு கட்டமைக்கப்பட்ட இந்து மதத்தின் புனித நூலாக மாறியது என்பது குறித்த பதிவுகளை ஏற்கனவே எழுதியிருந்தேன். (அதன் சுட்டி மறுமொழியில்)

இப்பதிவில் மனுஸ்மிருதி கூறும் தர்மங்களும் அது இன்றைய நீதித்துறைகளில் அங்கீகரிக்கப்படுவதையும் அதனை ஏன் எதிர்க்க வேண்டும் என்பதை பற்றியும் பார்ப்போம்.

முதலில் மனுஸ்மிருதி என்பது ஒவ்வொரு காலத்திற்கும், அந்தந்த பிராந்தியத்திற்கும், அதனை ஆண்ட அரசுக்கும் ஏற்ப ஒன்றுக்கொன்று மாறுபட்டு தான் கிடைத்தது. அவையனைத்தும் ஒரே நூலாக தொகுக்கப்பட்டது ஆங்கிலேயர் காலத்தில் தான்.

அப்படி தொகுக்கப்பட்ட அந்நூலை கொண்டே ஆங்கிலேயர் காலத்தில் நீதித்துறை செயல்பட்டது. தீர்ப்புகளையும் வழங்கியது. பின் டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் இயற்றிய இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு தான் பழைய ‘மனுநீதி’ முறை ஒழிக்கப்பட்டது.

மதசார்பற்ற அரசியலமைப்பு சட்டமானது சாதி,பாலின, வர்ணபேதங்களையும் அனைவருக்கும் சம உரிமையையும், மனிதத்தன்மைமிக்க வகையில் அனைவருக்கும் ஒரே மாதிரியான நீதியையும் தண்டனையையும் கொண்டு வந்தது. இப்படி தடாலடியாக வேறு கோணத்திற்கு மாறிய நீதித்துறை முற்றிலும் பழைய நடைமுறையை விட்டுவிட்டதா? என்றால் அது தான் இல்லை.

1950 முதல் 2019 வரை இந்தயாவின் பல்வேறு உயர்நீதிமன்றங்களும் (Especially Madras, Bombay & Allahabad) உச்சநீதிமன்றமும் இதுவரை 38 முறை மனுஸ்மிருதியை மேற்கோள் காட்டி அதன்வழியே தீர்ப்பு கூறியிருக்கிறது. இந்த 38 முறையில் 26முறை (கிட்டத்தட்ட 70%) கடந்த பத்தாண்டுகளில் வழங்கப்பட்டது என்பது தான் அதிர்ச்சிகரமான உண்மை.

இந்துத்துவா இந்தியா முழுக்க வேரூன்றிய வரலாற்றையும் இதனுடன் இணைத்து கவனிக்க வேண்டியது அவசியமானது. அதேசமயம் 1989 முதல் 2019 வரை கடந்த 20 ஆண்டுகளில் உச்சநீதிமன்றம் மட்டும் 7 முறை மனுஸ்மிருதியை மேற்கோள் காட்டி தீர்ப்பு வழங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. முதன்முதலில் உச்சநீதிமன்றம் மனுஸ்மிருதியை குறிப்பிட்டது 1989ல் தான் (Supreme court judgement passed Date 22.12.1989. Vimla Bai v. Hiralal gupta {[1990] 2SCC 22}. அவ்வழக்கில் உச்சநீதிமன்றம் மனுஸ்மிருதியை குறிப்பிட்டாலும் மனுநூலுக்கு முரணான தீர்ப்பே வழங்கப்பட்டது. இதுபோல் மூன்று முறை மட்டுமே மனுநூல் மேற்கோள் காட்டப்பட்டும் அதன் வழியே தீர்ப்பு வழங்கப்படாமல் இருந்துள்ளது. ஏனைய 35 வழக்குகளிலும் மனுநூலின் வழியேதான் ‘நீதி’ கிடைத்திருக்கிறது. அப்படியான வழக்குகளில் சில வழக்கின் ‘நீதிகளை’ மட்டும் பார்ப்போம்.

6.8.2008ல் உச்சநீதிமன்ற வழக்கு ஒன்றில் (Rajbir singh dalal v. Chaudhari Devilal Lal university, Sirsa & Anr. (2008) 9SCC 284) ஜைமினியின் பூர்வ மீமாம்சம், மனுஸ்மிருதி, சங்கராச்சாரியார் போன்றோர் எல்லாம் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளனர். அவ்வழக்கில் இறந்த பெண்ணின் சொத்துக்கள் அவரது கணவருக்கு உரித்தானதா அல்லது பெற்றோருக்கு உரித்தானதா எனும் சிக்கலுக்கு மீமாம்ச வழியில் மனு மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. அதில்,

“Of women married according to the Brahma, Daiva, Arsha, Gandharva, Prajapatya form, the property shall go to her husband if she dies without issue. But her property, given to her on marriage in the form called Asura, Rakshasa and Paisacha, on her death, shall become property of her parents.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (இவ்வகையான திருமணங்கள் குறித்த மேலதிக தகவலுக்கு மறுமொழியில் காண்க) இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியவரில் ஒருவர் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ என்பது கவனிக்கத்தக்கது.

இதேபோல் 2009ஆம் ஆண்டு கேரளாவின் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு (Kerala High Court (VV Verghese v. The Kerala State Election Commission & Anr. 2009 SCCOnline Ker 2541)) இந்திய ஜனநாயகத்திற்கு முற்றிலும் புறம்பானது. அதில் கிராம சபை பஞ்சாயத்துகள் குறித்த ‘தகுதிகள்,ஒழுக்கங்கள்’ விவாதிக்கப்படும்போது ரிக் வேதத்தின் ‘சபா’, ‘சமிதி’ போன்றவையும் இராமாயணமும் மகாபாரதமும் மனுஸ்மிருதியும் மேற்கோள் காட்டப்பட்டு அதுவே இந்திய ஜனநாயகத்தின் தகுதியாகவும் ஒழுக்கமாகவும் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.

இதேபோல் 2012ல் கர்நாடகத்தின் பட்டியலின மக்களுக்கும் பழங்குடிகளுக்கும் இடையிலான வழக்கு ஒன்றில் Justice Vikramjit Sen (as he then was), in GM Venkatareddy v. Deputy Comm., Kolar (2012 SCC OnLine Kar 7533) மனுஸ்மிருதி 8.149 மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. அது கூறுவதாவது, “A pledge, a boundary, the property of infants, an (open) deposit, a sealed deposit, women, the property of the King and the wealth of a Srotriya are not lost in consequence of (adverse) enjoyment”. இவ்வழக்கு நிலம் சம்பந்தப்பட்டது தான் என்றாலும் மேற்கோள் காட்டப்பட்ட ஸ்லோகத்தில் பெண்களை மிகவும் அவமதித்திருப்பது நோக்கத்தக்கது. இவ்வரியினையும் சேர்த்தே நீதித்துறை ஆமோதிக்கிறது என்று தானே பொருளாகிறது?

இதேபோல் 2014ல் கர்நாடக நீதிமன்றம் ஒரு வழக்கிற்கு (Mehrunnisa v. Syed Habib 2014 SCC OnLine Kar 11926) மனுஸ்மிருதி 9.3ஐ மேற்கோள் காட்டுகிறது. அது முழுக்க முழுக்க ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடு. அதாவது
‘The father guards her during virginity, the husband guards her in youth, the sons guard her in old age; the woman is never fit for independence.’

இந்த வரியினை தான் சமீபத்தில் டாக்டர் தொல்.திருமாவளவன் மேற்கோள் காட்டி பேசியிருந்தார். அவரது காணொளியின் ஒருபகுதி மட்டும் வெட்டப்பட்டு தற்போது சமூகவலைதளங்களில் சுழன்றுக்கொண்டிருக்கிறது. அவர் கூறிய அதே வரிகள் நீதிமன்றத்தின் தீர்ப்புகளிலேயே வந்துள்ளது வருந்தத்தக்கது.

இதைவிட கொடூரம் இந்த வழக்கை போட்டது இஸ்லாமிய பெண். ஒரு இஸ்லாமிய பெண்ணின் வழக்கிற்கு இந்து மதத்தின் புனிதநூல் வழியே நீதி வழங்கப்பட்டிருப்பதை காட்டிலும் ஒரு கொடூரம் வேறெந்த மதசார்பற்ற நாட்டிலாவது நடக்குமா? சிறுபான்மையினருக்கு எதிரான இந்துத்துவ அமைப்புகளின் வழியே இந்தியா ஒரு இந்து நாடு எனும் கட்டமைப்புக்குள் நீதித்துறையும் சென்றுக்கொண்டிருக்கிறது என்பதற்கு இதைவிட வேறென்ன சிறந்த உதாரணத்தினை தரமுடியும்?

அடுத்து கவுகாத்தி நீதிமன்றம் அப்பா-மகன் இடையிலான ஒரு வழக்குக்கு (Das V.Das 2016 SCC Online Gau 709) மனுஸ்மிருதியை மேற்கோள் காட்டியுள்ளது.

Paragraphs 12 and 13 of the last mentioned Gauhati High Court Judgment of 2016.

“In Hindu law, inheritance is linked with spiritual responsibility. A son has pious liability to discharge debts of his father and so he has right to inherit his assets. Conversely, inheritance presupposes existence of spiritual liability. A son absolves a father from his liability of debt and consequently fosters his spiritual upliftment by emancipating from hell called “Pu” and this is the reason according to Manusmriti for coinage of the word “Putra”. For reference one can have a look at verse No. 135 of Chapter IX of Manusmriti which is quoted below:

“Pu Namno Narakachhsmattrayte Pitaram Sutah
Tasmatputra Iti Proktah Swaymeva  Swayamvut”

The meaning of the above shloka is that one who salvages someone from the hell called ‘pu’ is called as ‘putra’. This is because it is the ‘putra’ alone who gives oblation after death of a Hindu for salvation of his soul. Under such circumstances, a person can pay oblation for one father only. This is why when adoption takes place, the adopted son can no longer pay oblation for his biological father. The result is that all spiritual relationships with his biological parents get snapped the moment a child is given in adoption to somebody else. The adoptive father becomes the father not only for religious purposes but also for other incidents of life including inheritance.”

இவ்வழக்கில் இன்னொரு கொடுமையான விடயமென்னவென்றால் 1915ல் நடைபெற்ற ஒரு வழக்கை இதில் மேற்கோள் காட்டுகிறார்கள். அவ்வழக்கு பாலகங்காதர திலகருக்கும் ஶ்ரீநிவாஸ் பண்டிதருக்கும் நடந்த வழக்கு (Balgangadhar Tilak v. Sreenivas Pandit AIR 1915, PC 7) இதில் ‘கோத்திரம்’ குறித்த விவாதம் நடந்திருக்கிறது. சாதி-வர்ண ரீதியான கட்டமைப்புக்கு காரணமாகவும் அதன் அடிப்படையாகவும் அறியப்படும் ‘கோத்திரம்’ அவ்வழக்கில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதில் ‘சூத்திரர்களுக்கு கோத்திரம் இல்லை’ என்பதும் விளக்கப்பட்டுள்ளது.

இதற்கெல்லாம் ஒருபடிமேலாக 1976ல் உத்தரபிரதேசத்தில் ஒரு தீர்ப்பில் Kushma v. Baldeo etc ( 1975 SCC OnLine BoR (UP) 53)  மனுஸ்மிருதி குறிப்பிடும் நால்வர்ண பெயர்களை அப்படியே மேற்கோள் காட்டி வழங்கியிருக்கிறது.

2018 மற்றும் 2019ல் இருவழக்குகள் சபரிமலை கோவிலில் பெண்கள் நுழைவது குறித்து உச்சநீதிமன்றத்தில் 5பேர் கொண்ட அமர்வில் தொடரப்பட்டது. அவ்விரு வழக்கிலும் பெண்கள் குறித்து மனுஸ்மிருதி கூறும் தர்மங்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. அவை,

1.Joseph Shine v. Union of India ((2019) 3 SCC 39 and (2018 SCC OnLine SC 1676)
2.Indian Young Lawyers Association & Ors.  ((2019) 11 SCC 1)

இதையெல்லாம் விடவும் ஒரு கொடுமை இராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நீதிமன்றம் முன்பு நடந்தது. அந்நீதிமன்றத்தின் முகப்பில் ‘மனு’ வின் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றில் குப்பையில் தூக்கி போட்டால் கூட அது குப்பைக்கு அவமானமாகும் ஒரு மனிதத்தன்மையற்ற தர்மங்களை கூறும் ஒரு நூல் நாம் நம்பும் உச்சநீதிமன்றம் முதல் உயர்நீதிமன்றம் வரை கடந்த 20 ஆண்டுகளில் எத்தனை முறை மேற்கோள் காட்டப்பட்டுள்ளது பாருங்கள். அதுவும் மதசார்பற்ற நாடு என சொல்லிக்கொள்ளும் ஜனநாயக நாட்டில், வர்ணாசிரம தர்மத்திற்கும் சாதி ரீதியான கட்டமைக்கப்பட்ட தீண்டாமைக்கு முழு முதற்காரணமான மனுஸ்மிருதியை அங்கீகரித்து வழங்கப்படும் தீர்ப்புகளுக்கு எதிராக எந்த நீதிமன்றத்தின் கதவினை தட்ட முடியும்? அப்படியே தட்டினாலும் மீண்டும் அதே மனுஸ்மிருதியில் இருந்தல்லவா அதற்கும் ‘நீதி’ வழங்கப்படும்?

1927, டிசம்பர் 25 அன்று மனுஸ்மிருதி பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கரால் எரிக்கப்பட்டது. அவரே இந்திய அரசியலமைப்பு சட்டத்தினை இயற்றினார். ஆனால் அந்த சட்டத்தையும் மீறி மனுஸ்மிருதியே மீண்டும் ‘நீதி’களை வழங்குகிறது என்றால் இது உண்மையிலேயே மதசார்பற்ற ஜனநாயக நாடுதானா? எனும் சந்தேகம் எழுகிறது. இந்துராஷ்ட்ரா நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கும் ஆர் எஸ் எஸ் அமைப்பும் அதன் நிறுவனரான சாவர்க்கரும் ஒருபோதும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தினை ஏற்றுக்கொண்டவர்கள் அல்ல. மாறாக மனுஸ்மிருதியை வலியுறுத்தி சட்டத்திருத்தம் கொண்டுவர எத்தனிப்பவர்கள். சாவார்க்கர் இதுகுறித்து எழுதியதாவது,

‘Manusmriti is that scripture which is most worship-able after Vedas for our Hindu Nation and which from ancient times has become the basis of our culture-customs, thought and practice. This book for centuries has codified the spiritual and divine march of our nation. Even today the rules, which are followed, by crores of Hindus in their lives and practice are based on Manusmriti. Today Manusmriti is Hindu Law…’ – [VD Savarkar, ‘Women in Manusmriti’ in “Savarkar Samagar” (collection of Savarkar’s writings in Hindi), Prabhat, Delhi, vol 4, p 415.]

விக்கி கண்ணன்

Original source : Manusmriti and Judiciary – A Dangerous Game by Atindriyo Chakraborty

துறைமுகம்- தலையங்கங்கள்

ஆற்றுத்துறைகளில் கலங்களை இறக்கி மீன்பிடித்தல், வாணிபம் என கடலையும் கடந்து நாகரிகங்களையும், இவ்வுலகையும் செழித்து வளரச்செய்ததில் துறைமுகங்களின் பங்கு அளப்பரியவை. ஆனால் இந்நாளில் துறைமுகம் எனும் பெயரில் மக்களின் வாழ்வதனை அழிக்க வளர்ச்சி திட்டங்கள் எனும் முகமூடியணிந்து வந்ததொரு திட்டத்திற்கு எதிராக மக்களுக்கு அறிவூட்ட கிளர்ந்ததுதான் துறைமுகம் இதழ்.

குளச்சல் பின்னர் இனயம் என்று குமரி மாவட்டத்தின் பசுமைச்சூழலையும் பன்னெடுங்காலமாக தழைத்து நிற்கும் 50- க்கும் மேற்பட்ட கடற்கரை மற்றும் உள்நாட்டு கிராமங்களை, அவர்களது வாழ்வாதாரங்களையும் அழிக்க கிளம்பியதுதான் ஒன்றிய அரசின் கடல்மாலை திட்டத்தின் அங்கமான இனயம் பெட்டக துறைமுக திட்டம். இப்பெருந் திட்டத்தினை எதிர்ப்பதற்கு எளிய கடற்கரை மக்களிடம் போராயுதங்கள் கிடையாது. அரசியல் கட்சிகளின், அரசியல்வாதிகளின் துணை கிடையாது. ஆனால் கிராம தலைவர்கள், மக்கள், சமுக ஆர்வலர்கள் திரண்டு இனயம் பெட்டக துறைமுக எதிர்ப்பு நடவடிக்கைகளை துவங்கிய சமயத்திலே, தக்க சமயத்திலே துறைமுகம் இதழும் களம் கண்டது.

மக்களிடையே கருத்துக்களை, போராட்ட அனுபவங்களை , வழிமுறைகளை கொண்டு சேர்க்கவும், ஒரு நீண்ட போராட்டத்திற்கு தயார் செய்யவும் துறைமுகம் இதழ்க் குழு தீர்மானித்தது. அவ்வண்ணமே விரைவில் போராட்டக்காரர்கள் மற்றும் மக்கள் மத்தியிலே “துறைமுகம்” வலிமையான கருத்தாயுதமாக மாறியது.

மகத்தான இனயம் துறைமுக பெட்டக எதிர்ப்பு காலகட்டங்களில் வீச்சோடு செயல்பட்ட துறைமுகம் இதழின் தலையங்கங்களை தொகுத்து நூலாக கொண்டு வர வேண்டும் என நூலின் ஆசிரியர் கூறியபோதே அந்த செய்திகள் தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் சென்று சேர வேண்டும் என்ற ஆர்வத்தோடு உடனடியாக வேலைகளை துவங்கினோம்.

போராட்டத்தின் பாதையில் பல்வேறு வெற்றி- தோல்விகளுக்கிடையில் மக்களின் மன உறுதியான கலைத்திட அரசும், ஆட்காட்டிகளும் முயன்று கொண்டிருந்தனர். அந்த நெருக்கடியான தருணத்திலும் தூத்துக்குடி வர்த்தக துறைமுக விவகாரங்கள், வல்லார்பாட துறைமுக அனுபவங்கள், ஆய்வுகள், விழிஞம் துறைமுக போராட்ட தோல்வி அனுபவங்கள் என துறைமுக ஆசிரியர் ஆன்றனி கிளாரட்டும், இதழ் குழுவினரும் அந்த இடங்களுக்கு பயணம் செய்து, மக்களை சந்தித்து உண்மைகளை கேட்டறிந்து ஆய்வு செய்து விரிவான கட்டுரைகளை துறைமுகத்தில் வெளியிட்டனர். இந்த தலையங்கங்களும், கட்டுரைகளும் துருவ நட்சத்திரம் போல போராடியவர்களுக்கு உறுதுணையாக இருந்தது என்பதை மறுப்பதற்கு எவருமிலர்.

இனயம் பெட்டகத் துறைமுக திட்டத்திற்கு அலுவலகம் திறந்தது, நிலங்களை அளக்க முனைந்தது, போராடியவர்களை சாதி, மதம், ஊர் சொல்லி பிரிக்க முனைந்தது, என்ற அத்துணை எதிர்வேலைகளையும் முறியடித்த மக்களின் வீரஞ்செறிந்த வரலாற்றையும் இந்த தலையங்கங்கள் அழுத்தமாகவே பதிவு செய்கின்றன. சபதம் செய்த அமைச்சர்கள், மிரட்டி பார்த்த அரசியல்வாதிகள், ஒப்பந்தங்களுக்கு அலைந்த பெரிய மனிதர்கள் என இந்த தலையங்கங்கள் யாரையும் விட்டுவைக்கவில்லை.

போராட்டத்தின் அவசியம் உணர்ந்து பெருந்திரளாக இளைஞர்கள் களமிறங்கியது இனயம் பெட்டக துறைமுக எதிர்ப்பு போராட்டத்தில் களமிறங்கியது ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இளைஞர்களின் எழுச்சியை ஒருங்கிணைத்ததில் துறைமுகம் இதழ் முகாமையான பங்கு வகித்தது என்பதை இங்கே பதிவு செய்யப்பட வேண்டும்.

மக்களின் போராட்டம் ஓய்ந்துவிடும் என எதிர்பார்த்து தோல்வியடைந்த அரசு இனையத்தில் இனி முடியாதென்று குமரிக்கு அருகிலுள்ள கோவளம் பகுதிக்கு மாற்றப்பட்டது. இடம்தான் மாறியது, போராட்டம் ஓயவில்லை. குமரிப் பகுதி மக்களும் ஒன்றுதிரண்டு போராடினர். அதிகார சதிகளுக்கு இணங்க அரசு விதித்த தடையினையும் மீறி , அரசின் பல்வேறு தடுப்பு திட்டங்களையும் உடைத்து மக்கள் வெற்றிகரமாக, நாகர்கோவிலில் மக்கள் களமாடிய நிகழ்வினை தலையங்கம் சிறப்பாக பதிவு செய்திருக்கிறது.

கடற்கரையோர மக்களுக்காக குறிப்பிட்ட போராட்டச் சூழலில் துறைமுகம் இதழ் உருவெடுத்தாலும் இதன் தலையங்கங்கள் காஷ்மீரில் ஆசிபா என்னும் குழந்தை மதவெறியர்களால் வேட்டையாடப்பட்டதை, தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் மக்கள் மிருகங்களை போல சுட்டுக்கொல்லப்பட்டதை, பணமதிப்பிழப்பு அறிவிப்பால் மக்கள் சொல்லொண்ணா இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டதையும் பதிவு செய்திருப்பது துறைமுகம் இதழ் தான் வரித்துக் கொண்ட பணியினை தாண்டியும் மக்களுக்கு பணியாற்றி வந்திருப்பதை அறிய முடிகிறது.

தமிழ்நாட்டில் 2009 ஆம் ஆண்டு துவங்கி பல பெரும் போராட்டங்கள் நடந்தேறியதை நாம் அறிவோம்.ஆனால் அநேக போராட்டங்கள் தத்தம் இலக்கினை எட்டாமல் முடிவுக்கு வந்தது. அந்த போராட்டங்கள் வெற்றி பெறவில்லையே தவிர அவை மக்களுக்கு பெரும் அனுபவமாக மாறிப் போயின.

ஆனால் இனயம் பெட்டக துறைமுக எதிர்ப்பு போராட்டமோ மிகப்பெரிய வெற்றி பெற்ற போராட்டமாகும். 28000 கோடிக்கும் மேல் மதிப்பு கொண்ட திட்டம் எளிய கடற்கரை மக்களால் விரட்டியடிக்கப்பட்டது என்பது வரலாற்று சிறப்புமிக்க ஒரு பாடமாகும். இந்தப் போராட்டத்தின் நுணுக்கமான நகர்வுகளை, செழுமையான அனுபவங்களை, இடைவிடா இன்னல்களை, செயல்திறனுடைய உத்திகளை இந்தத் தலையங்கங்கள் மூலமாக நாம் அறிவதென்பது போராட்டத்தின் உள்நுழைந்து அவற்றை உணர்வுபூர்வமாக அறியும் அனுபவமாக மாறிவிடுகிறது.

ஆதலால் இந்தத் தலையங்கங்களை தொகுத்து தமிழ்நாட்டின் பரந்துப்பட்ட மக்களுக்கு அளிப்பதன் வாயிலாக போராட்டத்தின் அனுபவங்களையும் வரலாற்றையும் பரவச்செய்ய வேண்டும் என்னும் அவா, இந்த நூலினை ஆய்தம் வெளியீட்டகமே வெளியிடும் வாய்ப்பு உருவாகியது. இந்த தொகுப்பு நூலினை வெளியிடுவதில் ஆய்தம் வெளியீட்டகம் பெரும் மகிழ்வடைகிறது.

ஆய்தம் வெளியீட்டகம்

நீதிமன்றங்களுக்குள் அரசியலை நுழைத்து பாஜக-விற்கு உதவும் நீதிபதிகள்- ஷாருக் ஆலம்

தி வயர் இணையதளத்தில் வெளியிடப்பட்ட இந்த கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்தவர் இலக்கியா.

அரசியல் செயல்பாட்டை குற்ற நடவடிக்கையாக்குவதன் மூலம் நீதிமன்றங்களுக்குள் அரசியலை நுழைக்கும் அரசின் முயற்சிக்கு நீதிபதிகள் உதவி செய்துவருகின்றனர்.

அரசியல் செயற்பாட்டாளர்களின் கைது நடவடிக்கையை அரசு கட்டமைப்பின் அரசியல் நடவடிக்கையாக நீதிபதிகள் கருத வேண்டும். அவ்வாறு கருதி, நீதிமன்றங்களுக்குள் அரசியலைக் கொண்டு வர வேண்டாம் என அரசிடம் அறிவுறுத்த வேண்டும். மாறாக, எதிர் மனுதாரருக்கான அறிவுறுத்தலாக அது இருக்கக் கூடாது.

‘வழக்குகள் அனைத்தும் சட்டம் சார்ந்ததாக இருக்க வேண்டும். அதில் அரசியல் இருக்கக்கூடாது’ என்பது நீதிமன்றங்களின் பொதுவான விதி.
ஆனால், பல கைது சந்தர்ப்பங்களில் அரசின் வழக்குத் தொடுக்கும் அணுகுமுறை எந்த விதிகளுக்குள்ளும் கட்டுப்படாமல் இருக்கிறது. ஒரு பக்கம், ‘வேட்கையை விதைத்து வன்முறையை தூண்டிவிடுகிறார்கள்’ என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள அரசியல் செயற்பாட்டாளர்களான ஜோதி ஜக்டப் மற்றும் உமர் காலித்தின் பிணையை கடுமையாக எதிர்க்கிறது.
அதைப்போலவே, பாம்பே உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பேராசிரியர் சாய்பாபவின் பிணை ஆணையை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் சனிக்கிழமை விசாரனை கேட்டு வாங்கியது ஒன்றிய அரசு. அவர் தற்காலிகமாகக் கூட வெளியில் வரக் கூடாது என்று கங்கணம் கட்டி செயல்படுகிறது. ஜனநாயக வழியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அறிவுப்பூர்வமாக விமர்சிக்கிறார் என்பதே அவர் மீதான அரசின் ஒரே குற்றச்சாட்டு.
இன்னொரு பக்கம், வெறுப்பு அரசியலையும் வன்முறையையும் தூண்டிவிட்டு, சாதாரண மக்களைக் கொல்லும் குற்றவாளிகளை இந்த அரசு கண்டுகொள்வதே இல்லை. சில அரசியல் ‘வன்புணர்வாளர்களையும்’ கொலைகாரர்களையும் குற்றத்திலிருந்து வெகு சுலபமாக விடுவித்ததிலேயே அரசின் தன்னிச்சையான போக்கு வெளிப்படுகிறது.

இந்த முரண்பாடுகளை எப்படிப் புரிந்துகொள்வது?
சட்டம் பயின்று கொண்டிருந்த பொழுது, நான் படித்த ‘அரசியல் தத்துவம்: ஓர் அறிமுகம்’ என்ற சிறு புத்தகம் என் அரசியல் பார்வையை இன்று வரை செதுக்கி வருகிறது. அரசியல் பற்றிய புரிதலின் மையமாக இருப்பதாக இரண்டு கேள்விகளை முன் வைக்கிறது அந்தப் புத்தகம். ஒன்று, யாருக்கு என்ன கிடைக்கிறது? மற்றொன்று, யாருக்கு என்ன கிடைக்க வேண்டுமென்பதை யார் தீர்மானிக்கிறார்கள்?

முதற் கேள்வியை, உரிமைகள் மற்றும் வளங்களைப் பகிர்தல் என்ற கோணத்தில் புரிந்து கொள்வோம்: பொருள் வளங்களாக இருக்கும் சுற்றுச்சூழல், கணிமங்களாக இருக்கட்டும் அல்லது கல்வி, சுகாதாரம் போன்றவற்றில் எவையெல்லாம் பொதுச் சொத்தாக/பொது உரிமையாக கருதப்பட்டு அனைவருக்குமானதாக அறிவிக்கப்படவேண்டும்? அல்லது வருமான வரி கட்டுபவர்களுக்கு மட்டும்தான் இவ்வளங்களின் மீதான தார்மீக உரிமையைக் கொடுக்கவேண்டுமா? ஒரு சில சந்தர்ப்பங்களில், பொது சுகாதாரம் ஒரு பொதுச் சொத்தாகக் கருதப்பட்டு அனைவரும் அதன் மீது உரிமை கோரலாம்; அல்லது வேறு சில அரசியல் சந்தர்ப்பங்களில், அத்தகையத் திட்டம் அரசின் பெருந்தன்மையான செயலாகவும், அரசின் புரிதலுக்கு ஏற்றவாறு சில வரைமுறைகளுக்குள் அடங்கும் மக்களுக்கான திட்டமாகவும் அது மாற்றியமைக்கப்படலாம்.

பொருள் வளங்களைப் பற்றிய கேள்விகள் ஒரு புறம் இருக்க, அரசியலிலும் இரண்டு கேள்விகளைக் கேட்க வேண்டியிருக்கிறது:

உரிமைகளும் சுதந்திரமும் எவ்வாறு பகிரப்பட வேண்டும்?
மக்களில் ஒரு பகுதியினருக்கு அதிகமான சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டுமா? கடைசியாக, இப்படித்தான் உரிமைகளும் சுதந்திரமும் பகிரப்பட வேண்டும் என்கிற முடிவு எதன் அடிப்படையில் இருக்க வேண்டும்?

அரசியல் தத்துவத்தைப் பொருத்தவரையில், அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்களே ‘யாருக்கு எது கிடைக்க வேண்டும்?’ என்றும், ‘எவ்வளவு கிடைக்க வேண்டும்?’ என்றும் முடிவு செய்கிறார்கள். சில சமயங்களில், சட்டத்திற்கு பதிலாக அரசியல் அதிகாரமே யாருக்கு எது கிடைக்க வேண்டும் என்பதை முடிவு செய்து, இடஒதுக்கீட்டையும், பாதுகாக்கப்பட வேண்டியவர்களுக்கு சிறப்பு உரிமைகளையும் கொடுக்கிறது. ஆனால் வேறு சில சமயங்களில், ‘பெரும்பான்மை உணர்வு’ என்பதற்காகவோ, பொருளாதார காரணங்களுக்காகவோ மாற்றப்படவும் வேண்டியிருக்கிறது.
அதிகாரத்திற்கான போட்டியில் அரசியலும் கலந்துகொண்டு அனைத்தும் எவ்வாறுப் பகிரப்படவேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறது.
1837-ஆம் ஆண்டு சார்ல்ஸ் டிக்கன்ஸ் ஒலிவர் டிவிஸ்ட் என்ற நாலை எழுதினார். அதில் ஆதரவற்ற சிறுவர் இல்லத்தின் எஜமானர் அங்கிருக்கும் சிறுவர்களுக்கு மிகக் குறைந்த அளவிலேயே உணவு பரிமாறிவிட்டு மீதி இருக்கும் பெரும் பகுதியை தனக்கு எடுத்துக் கொள்வார். ஒரு கட்டத்திற்கு மேல் அதை பொறுத்துக் கொள்ள முடியாமல், தனிமையிலும் விரக்தியிலும், பசியிலும் வாடியிருந்த ஒலிவர் டிவிஸ்ட், தன் எஜமானனிடம் சென்று “தயவுகூர்ந்து எனக்கு கொஞ்சம் அதிகமாக உணவு கொடுக்க முடியுமா, ஐயா?” என்று கேட்பான்.
அதைக் கேட்டவுடன் எஜமானன், கரண்டியால் ஒலிவரின் தலையை ஓங்கி அடித்து, சுவருடன் அவனைக் கட்டிப் போட்டு, அதை வலுப்படுத்த கோபத்தில் கத்துகிறான்.
“நன்றி கெட்டவன் நீ!” என்று சீறுகிறான்.
உடனே அந்த இல்லத்தின் மேற்பார்வையாலர்கள் ஒன்று கூடி மிகவும் தீவிரமாக ஆழ்ந்து பேசுகின்றனர். “என்ன!? இன்னும் அதிகமாக வேண்டும் என்று கேட்டானா?!”
“என்ன ஒரு வில்லத்தனமான புத்தி! அவன் தூக்கிலிடப்பட வேண்டும்!”
ஒலிவர் டிவிஸ்ட் மிகவும் ஆபத்தானவன் என்று அவனுக்கு பட்டம் கட்டி, அவனைத் தனிமை சிறையில் பசியுடனேயே அடைத்தனர்.

ஒலிவரின் கோரிக்கை ஒரு அரசியல் நடவடிக்கை. அதேபோல், அவன் வேண்டுதலுக்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட விரிவான எதிர்வினையும் ஒரு அரசியல் நடவடிக்கையே.

சமமாகப் பங்கிடப் படவேண்டும் என்ற ஒலிவரின் கோரிக்கைக்கு அவர்கள் வெளிப்படுத்திய அதிர்ச்சியும் அச்சமும், அவன் நன்றிகெட்ட குற்றவாளி என்று பட்டம் கட்டப்பட்டதும், அவனுடைய செய்கை மற்றவர்களை தூண்டிவிடும் என்ற குற்றச்சாட்டும், அவனுடைய உறுதிப்பாடு எஜமானனை ஆத்திரமூட்டியதும், கடைசியாக ஒலிவர் சிறையில் அடைக்கப்பட்டதும் என அனைத்துமே எதிர் அரசியல் நடவடிக்கைகளே.

எனவே, அரசியல் என்பது உரிமைகளும் வளங்களும் சமமாகப் பங்கிடப் படவில்லை என்பதைப் புரிந்து, அந்தப் புரிதலை சமூக செயல்பாட்டின் மூலமாக மக்களிடம் பரப்பி அவர்களை அணிதிரட்டுவதாகும். அதேசமயம், சமூக மாற்ற அரசியலைத் தடுத்து, அவநிலையில் எந்த மாற்றமும் நடந்து விடாமல் பார்த்துக் கொள்வதும், சமூக மாற்ற அரசியலை சமூக விரோதம், தேச விரோதம் என்று குற்றம்சாட்டுவதும் ஒருவித அரசியலே.

ஜோதி ஜக்தப்பின் பிணையை மறுத்த ஆணையில் வரும் ஒரு பத்தி இதனை எடுத்துக்காட்டுகிறது:
“கபிர் காலா மன்ச்சின் நபர்கள் அரங்கேற்றிய மேடை நாடகத்தின் நகலை முழுமையாக படித்துவிட்டோம். அதைப்படித்தவுடன் எங்களுக்கு தோன்றியது என்னவென்றால், குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் கபிர் காலா மன்ச்சின் செயற்பாட்டாளர்கள் நடத்திய நாடகம், தீவிரமாகவும், பிறரைத் தூண்டும் வகையிலும், வெறுப்பையும் வேட்கையையும் விதைக்கும் வகையிலும் நிகழ்த்தப்பட்டுள்ளது. ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட அரசாங்கத்தை நகைத்து, அதற்கு எதிராகப் போராடி தூக்கி எறிய வேண்டும் என்ற கோணத்தில் பல்வேறு மறைமுக வார்த்தைகளும், காட்சிகளும் கபிர் காலா மன்ச்சின் உறுப்பினர்களால் அரங்கேற்றப்பட்டுள்ளது. அவற்றில் சிலவற்றை மேல் முறையீட்டாளரின் தகவலுக்காகக் குறிப்பிடுகிறோம். ‘அச்சே தின்’, ‘பசு மூத்திரம்’, ‘மாமிசம் உண்ணாமை’, பிரதமரைக் ‘கைக்குழந்தை’ என்று அழைத்துள்ளது, ‘பிரதமரின் பயணக் குறிப்பு’, ‘ஆர்.எஸ்.எஸ். உடை’, ‘பணமதிப்பிழப்பு’ கொள்கை, ‘சனாதன தர்மம்’, ‘ராமர் கோவில்’ போன்ற வார்த்தைகளும், வாக்கியங்களும் அவர்களின் பாடல்களில், கேள்வி பதில்களில் வெளிப்படையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.”
இந்தத் தீர்ப்பில் வெளிப்பட்டுள்ள உணர்வு ஒலிவரின் கோரிக்கையால் ஆத்திரமடைந்த எஜமானனின் மனநிலையைப் போலவே உள்ளது.

இதன் பின் இருக்கும் அரசியல் வெளிப்படையாகப் புலப்படாது. ஆனால், அரசு கட்டமைப்பு அரசியலுக்கு எதிராக ஆக்கப்பூர்வமாக எதிர்வினையாற்றும் செயல்கள் அனைத்தையும் பித்தலாட்டம் என்பதும், அதற்கு பணம் கொடுத்து தூண்டப்படுகிறது என்றும் கூறுவது அரசியல் தான். அவை குற்ற வழக்குகளாக ஜோடிக்கப்பட்டு நீதிமன்றங்களுக்கு கொண்டு வரப்பட்டாலும் அதில் இருக்கும் ஒரு சார்பு அரசியல் மாறிவிடாது.

மனித வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் அரசியல் நிறைந்திருக்கிறது. தீர்ப்புகளுக்கும் இந்த நிலை பொருந்தும். அவை சில சமயங்களில் வளங்களையும் உரிமைகளையும் சமமாகப் பிரிப்பதை உறுதி செய்யும். அல்லது மாற்றங்களற்ற நிலையே தொடர உதவி செய்யும். வளங்கள் அல்லது உரிமைகளை பங்கிட்டுக் கொடுத்த வழக்குகள்/தீர்ப்புகளுக்கு நிறைய உதாரணங்கள் உள்ளன (இடஒதுக்கீட்டு முறையின் வழி கல்வி மற்றும் வேலைவாய்ப்பு, ஆயுதப் படையில் பெண்களுக்கான நிரந்தர இடம் என சில).

சட்டங்களுக்கே உரிய அரசியல் தன்மையைத் தவிர்த்துப் பார்த்தால், இன்றைய நீதிமன்றங்களுக்குள் ஒரு புது விதமான அரசியல் மொழியை உணர முடிகிறது. எதற்கும் பயப்படாத, யாரைப் பற்றியும் கவலைப்படாத அந்த மொழி, அரசியல் செயல்பாட்டை குற்றச் செயலாக மாற்றுகிறது.

ஒலிவர் டிவிஸ்டில் வரும் நிர்வாகச் சபையின் முடிவைப் போல, சமூக நிலைமையை மாற்றும் அரசியல் அறிவை மக்களிடம் கொண்டு செல்லும் எவராயினும் அவர் மீது வழக்குப் போட்டு அவரைக் குற்றவாளியாக்க வேண்டும் என்ற வாதத்தை எந்த வித வெட்கமும் இல்லாமல் முன்வைக்கிறது அரசு. ஏனென்றால், அத்தகைய அரசியல் செயல்பாடு சமூகத்தைப் பிளந்து மக்களை வன்முறையில் தள்ளும் என்கிறது. எஜமானனை ஆத்திரமூட்டியதற்காக ஒலிவரைத் தனிமைச் சிறையில் அடைத்த சபையைப் போன்றே செயல்படுகிறது இந்த அரசு. சமூக மாற்ற அரசியலை ஒரு குற்றமாகக் கருதி மக்களை ஒடுக்கும் அரசின் அரசியல் மொழியே இது. அதே சமயம், இன்றைய வெறுப்பு அரசியலை ஊக்குவிக்கும் வகையில் நடக்கும் நேரடியான வன்முறைச் சம்பவங்களைக் கண்டுகொள்ளாமல் அடக்கிவாசிக்கிறது இந்த அரசு.

மக்களுக்கான அரசியல் செயல்பாடு சம்பந்தப்பட்ட ஒவ்வொரு வழக்கிலும், முக்கியமான குற்றமாக சொல்லப்படுவது “அவர்களின் அரசியல் பிரச்சாரத்தை வளர்க்க சதி செய்கிறார்கள்” என்பதே. அதாவது, வளங்கள் மற்றும் உரிமைகள் பங்கீட்டில் இருக்கும் பாகுபாட்டின் காரணத்தினால், அவற்றை சமன் செய்வதற்காக மக்களைத் திரட்டும் போது அரசுக்கு சில சங்கடங்கள் ஏற்படுகிறது. அதனால், அரசியல் செயல்பாட்டை ஒரு சதியாகப் பார்க்கிறது அரசு.
அதிகாரம் ஒரு இடத்தில் மட்டும் அதிகமாகக் குவியும் பொழுது, அதை எதிர்த்து போராடுவது குடிமக்களின் அரசியல் கடமை எனக் கொள்ளலாம்.

சமூகத்தில் மாற்று அரசியல் உரையாடலுக்கும் செயல்பாட்டுக்கும் அரசுகள் இடம் கொடுக்கும் பொழுது, சமூகப் பிளவோ வன்முறையோ நிகழாது. ஜனநாயக பண்பாடு கொண்ட சமூகங்கள், எவருக்கும் எந்த ஒன்றையும் மறுப்பதற்கான உரிமையையும், எதிர்ப்பு அரசியல் செய்வதற்கான வாய்ப்பையும் கொடுத்து அதை அச்சமூகத்தின் இயல்பாக மாற்றியுள்ளன.

அதற்கு மாறாக, அனைவரும் சமமாக கருதப்படவேண்டும், உரிமைகளும் வளங்களும் சமமாகப் பங்கிடப்பட வேண்டும் என்ற கருத்தைத் தாங்கி வரும் அரசியல் செயல்பாட்டை, மக்களின் எதிர்ப்பு உணர்வை ஒரு பெரிய ஆபத்து விளைவிக்கும் தீவிரவாதச் செயல் எனப் பார்க்கிறது இந்த அரசு. இவை எதுவும் சட்ட வாதங்கள் கிடையாது; சிறந்த சட்ட நிபுணர்களால் முன்வைக்கப்படும் அரசியல் வாதங்களே.

நீதிமன்றங்கள் சில வழக்குகளில் இத்தகைய குழந்தைத்தனமான வாதங்களை நிராகரித்து எந்தெந்த வழக்குகளில் பிணை வழங்க முடியுமோ அங்கு வழங்கியுள்ளது. ஆனால், அவற்றோடு நில்லாமல், அரசியல் செயற்பாட்டாளர்களின் கைது நடவடிக்கையை அரசு கட்டமைப்பின் அரசியல் நடவடிக்கையாக நீதிபதிகள் கருத வேண்டும். அவ்வாறு கருதி, நீதிமன்றங்களுக்குள் அரசியலைக் கொண்டு வர வேண்டாம் என அரசிடம் அறிவுறுத்த வேண்டும்.

சாருக் ஆலம் – உச்சநீதிமன்ற வழக்கறிஞர்
மொழிபெயர்ப்பு- இலக்கியா

நன்றி- தி வயர்.

மனிதர்களை தேடி- காமராசன் மண்டகொளத்தூர்

மாடு மேய்க்கறப்போ
நாய்க்கமூட்டு தாத்தாதான்
சொன்னாரு
“வேகுற வேக்காட்ல சாயங்காலம்
மழை பொத்திக்கினு
ஊத்தப்போதுனு”

அந்த செவுலுகெடேரி மட்டும்
எங்கயாவது திருட்டு
மேய்ச்சலுக்கு போயிடும்
பார்த்துக்கினே இருக்கனும்!

பாவம் அதுவும் என்னசெய்யும்
வாய் எட்ற அளவுக்குகூட
புல்லுபூண்டு இல்ல
எல்லாம் தீய்ஞ்சிபோயி கெடக்குது!

சின்னகுட்டிதான் அப்பப்போ
போயி மாட்ட மடக்கினு வருவான்
கத்தாயமூட்டா கரும்பு தோட்டத்துல
போச்சுனா ஊரையே கூட்டி
பஞ்சாயத்து வச்சிருவாங்க!

அஞ்சுகிளாஸ் சித்தப்பாவும்
அல்ராஜி கண்ணனும்
பெரியாகுட்டி முள்தோப்பாதாண்டதான்
ஒக்காந்து கதசொல்வாங்க
அவங்க மாட்டலாம்கூடா
நாங்கதான் மடக்குவோம்
இல்லனா கத சொல்ல மாட்டாங்க!

ஏரிக்கரை ஓடைலதான்
திட்டு திட்டாய் கொஞ்சகொஞ்சம்
தண்ணியிருக்கும்
வாயில்லா ஜீவனுக்கு
அந்த சேத்துத்தண்ணிதான்
தாகம் தீர்க்கும்!

உச்சிவெயில் மெதுமெதுவா
மேற்கால சாய்ஞ்சது
வெள்ளை மேகமெல்லாம்
திடுதிப்புனு கருப்பா மாறுச்சு
எங்கிருந்தோ வந்த ஈரக்காத்து
நெஞ்சாங்குழிய நெறச்சது!

கண்ணமூடி கண்ண
தெறக்குறதுக்குள்ள
சடசடன்னு பேரிரைச்சலோடு
பெருமழை!
மண்வாசனை வெட்டவெளி
எங்கும் தெறித்தது!

செவுலுகெடேரி கருப்புசேங்கன
மொட்டக்கொம்பு எருது
எல்லாம் ஒரே ஓட்டமா ஓடுதுங்க
வீட்டுக்கொட்டாய நோக்கி!
கூடவே சின்னக்குட்டி பன்னீரு
எல்லாரும்தான் ஓடுனாங்க

நான்மட்டும் இன்னமும்
அந்த பெரியாங்குட்டி ஓடையில்;

புதுவெள்ளத்தோடு குதுகலித்த
அந்த மண்வாசனை துள்ளிவரும்
நீரோடு கரைந்திருந்தது!

நாளை பச்சைபுற்கள்
தலைநீட்டும்
காளான்கள் குடைவிரிக்கும்
நண்டுகள் ஊர்வலம் போகும்
ஈசல்கள் சிறகடிக்கும்
வானம்பாடிகள் கானம்பாடும்!

அதோ அந்த புதியவிடியலின்
கனவுகளோடு அந்த இரவுப்பொழுதுகள்
விடிந்திருந்தது
மஞ்சள்வெயில் கூரைகளிலெல்லாம்
வண்ணம் தீட்டியிருந்தது!

பட்டியிலிருந்த ஆடுகளும்
கொட்டகையில் இருந்த மாடுகளும் அந்த ரோபதியம்மன்
களத்துமேட்டில்
ஒன்றையொன்று வருடிக்கொண்டும்
உரசிக்கொண்டும்!

இதோ சொரட்டுக்கொம்பை
தோள்மீது போட்டுக்கொண்டு
கெளம்பிவிட்டார் முனிரத்தினம்
பெரியப்பா
அந்த வம்பலூர் ஏரிக்கரை நோக்கி
அவருக்கான உலகமது

ஏரியின் ஒவ்வொரு அங்குலமும்
அவருக்கு அத்துப்படி
வாழ்க்கையின் ஒவ்வொரு
மணித்துளிகளையும் அந்த
பனைமரங்களோடும்
ஈச்சைமரங்களோடும்
சப்பாத்திக் கள்ளிகளோடும்
கைகோர்த்து நடந்தவர்

இன்று அவரது கால்கள்
முடக்கப்பட்டிருக்கிறது
முதுமையின் கொடுங்கரங்களால்
பாரதக்கொட்டகையின் மூன்று
சுவர்களுக்குள்
அந்த வெட்டவெளியை
அண்ணாந்து பார்த்தபடி!

இதோ நகர வீதியிலிருந்து
புறப்படுகிறது என்கால்கள்
அந்த கற்றாழை வாசங்களை
நோக்கியும்
எங்கள் மண்வாசனை மனிதர்களைத்தேடியும்!

கொத்திகொத்தி தின்னப்பட்டிருக்கிறது
எங்கள் ஆறுகள் ஏரிகள்
குளங்களைப்போலவே
எங்கள் மண்வாசனை மனிதர்களையும்
முதுமையெனும் கோரக்கரங்கள்!

காமராசன் மண்டகொளத்தூர்

தமிழீழ விடுதலை போராட்டத்தின் நோக்கும் போக்கும்.- பேராசிரியர் ராமு.மணிவண்ணன்

ஈழத்தமிழர் வரலாறு, தமிழ் மொழி, தமிழ் இனம் மேலும் தமிழ் பண்பாடு போலவே மிகத் தொன்மையானதும், சிறப்பு மிகுந்ததுமாகும். இலங்கைத் தீவும் ஈழத்
தமிழ் பூர்வீகக்குடிகள் பற்றிய அரசியல் விவாதங்களுக்கு பூகோள சான்றுகளும், நிலப்பரப்பு பற்றிய வரலாற்று அறிவியல் தடயங்களும், இலெமூரியா கண்டம் குறித்த சாட்சியங்கள் கூட போதுமானது.
ஆனால், பூகோள மாற்றங்கள் நிகழ்ந்த பிறகு புவியியல் மாற்றங்களாலும் இலங்கைத் தீவு இந்தியாவுடன்
இருந்தும் தென் தமிழகத்தில் இருந்தும் சில இருபது கடல் மைல்களுக்கு அப்பால் நகர்ந்ததும், இன அரசியல் காரணங்களுக்காக மானுடவியல் கோட்பாடுகளையும், பூகோள அறிவியல் கூட சிங்கள பெரும்பான்மையும்
புதிய உலக அரசியல் கட்டமைப்புகளும் ஈழத் தமிழர்களின் உரிமைகளை அறிவியல் வழியாக பார்க்கவும்,
பரிசிலிக்கவும், ஏற்றுக்கொள்ளவும் மறுத்து
வருகின்றனர்.

நவீன கால அரசியல் கி. பி. 15ஆம் நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்ட உலக அரசியல் மாற்றங்கள்,அரசியல் கோட்பாடுகள்,  இறையாண்மைத் தத்துவங்கள் என அரசியல் சித்தாந்தங்களை கருத்தாக்கங்களாக நாம்
கையாண்டாலும் ஈழத்தமிழர் நிலம், மொழி, பண்பாடு மேலும் இறையாண்மை சார்ந்த வரலாற்றுச்சான்றுகள் ஈழத்தமிழரின் அரசு – அரசியல் கட்டமைப்புகளோடு உறுதி செய்யப்பட்டுள்ளது. குடியேற்ற ஆதிக்கம்
உலகெங்கும் பல்லாயிரக்கணக்கான மக்களின் நிலஉரிமைகளைப் பறித்ததோடு மட்டுமல்லாமல் இனம், மொழி, பண்பாட்டு அடையாளங்களைக் கூட மறைத்துவிட்டது.
அத்தகைய கொடுமையான குடியேற்ற வல்லாண்மை இருந்தும்கூட ஈழத்தமிழர்கள் தங்களுடைய மொழியையும் பண்பாட்டையும்
இறையாண்மையையும் இழந்து விட்ட நிலையில்கூட பாதுகாத்து வந்தனர்.

இலங்கைத் தீவில் 16ஆம்
நூற்றாண்டில் துவங்கிய குடியேற்ற ஆதிக்கம் போர்ச்சுகீசிய, டச்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் என 20 ஆம் நூற்றாண்டு வரை இயங்கிய குடியேற்ற
வல்லாண்மை ஈழத்தமிழர்களிடமிருந்து பறித்த இறையாண்மையை சிங்களப் பெரும்பான்மைக்கு அடிபணிந்து அரசியல் வெகுமதியாக தாரை வார்த்து
கொடுத்துவிட்டனர். 19ஆம் நூற்றாண்டில் இலங்கைத்தீவில் தமிழர்கள், சிங்களவர் என்ற சமூக இன நிலப்பரப்புகள் கடந்து நிர்வாக ரீதியாக ஒருங்கிணைந்த அரசியல் காரணங்களுக்காகக்
கட்டமைத்தனர் 20-ஆம் நூற்றாண்டில் இலங்கை விடுதலையை நோக்கி நகரும் காலத்தில் கூட தமிழர்களின் ஆளுமையும் இறையாண்மை பார்வையும் அரசியல் சலசலப்புகள் மட்டுமே நிலவியது சிங்கள
பெரும்பான்மை மொழி, மதம், இனம் இவற்றை அடிப்படையாகக் கொண்டு சிங்களவர்கள் ஆளுமையோடு மகாவம்சம் பேரினவாதக் கோட்பாடுகளை விட்டு விலகாமல் இலங்கைத் தீவின் முழுமை
யாகத் தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தார்கள்

1948இல் குடியேற்ற வல்லமையிலிருந்து
விடுதலை பெற்ற நாடு இலங்கை என்று நாம் ஏற்றுக்கொண்டால்கூட தமிழர்களின் இறையாண்மை போர்ச்சுகீசிய காலத்திலிருந்து பறிக்கப்பட்டதும்
விடுதலைப் பெற்ற இலங்கையில் சிங்களவர்களின் ஆளுமையின் கீழ் புதைக்கப்பட்டமுறை யாராலும்
மறுக்கமுடியாது பழந்தமிழர்களின் இறையாண்மையையும் இலங்கை அரசியலின் மாற்றங்களையும்
சிங்களது தலைமை மிகத் திறமையாக உள்வாங்கி அரசியல் சாசனத்தையும் உருவாக்கி விட்டார்கள்,

அதோடு மட்டுமல்லாமல், தமிழர்களின் நிலம், மொழி,பண்பாடு இவற்றை மக்கள் தாயக பண்புகள் சிறுபான்மையினர் என்னும் ஒரு குமுக அரசியல்
முத்திரையையும் குத்திவிட்டனர். மேலும் சிங்களவர்களின் தொலைநோக்கு அரசியல் பார்வைக்கு உறுதி
செய்யும் வகையில் மலையகத் தமிழர்களின் குடியுரிமையைப் பறித்தார். மலையகத் தமிழர்களின் குடியுரிமையை 1948-லேயே பறிப்பதற்கு முக்கிய காரணம்
அப்போது மட்டுமல்லாமல் எப்போதும் இலங்கை அரசியலில் தமிழர்களின் எண்ணிக்கை கணிசமாகக்கூடாது என்பதோடு வலிமையான அரசியல் சக்தியாக உருவாகக்கூடவே கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர் . மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறித்தல் ஏதோ ஒரு துயர நிகழ்வு மட்டுமே கிடையாது.
விடுதலைக்குப் பின் இலங்கையில. ஈழத்தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுரமான அநீதிகளுக்கு எல்லாம் தொடக்கமாகும்.சிங்கள அரசியல்வாதிகளின் தொலைநோக்குப் பார்வையும் சுதந்திர அரசியலும் ஈழத்தமிழர்களைப் பெரும் அளவிற்கு மௌனித்துவிட்டது

சிங்களம் மட்டும் என்ற மொழி வெறிக் கொள்கையும் ,பண்டாரநாயக்க செல்வநாயகம் உடன்படிக்கைக்குப் பிறகு ஏஎஸ்டபிள்யூ பண்டாரநாயகே பவுத்தமத தீவிரவாதிகளால் 1959-ல் கொல்லப்பட்டதும் ,தமிழர்களின் கல்வி உரிமை திட்டமிட்டு மறுக்கப்பட்டதும் இலங்கை தீவில் மிக ஆழமான இனச்சிக்கல்களுக்கு சிங்களப் பேரினவாதத்தை அடையாளம் காட்டியது.

1948 முதல் 1970 ஆண்டுகள் வரை ஈழத்தமிழர்கள் அதிகாரப் பகிர்விலும் அறப்போரிலும் மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருந்தனர். சிங்களப் பேரினவாதத்தின் கோரமுகம் பெருமளவிற்குத் தெரியத் தொடங்கியது இரண்டு முக்கியமான நிகழ்வுகள். ஈழத்தமிழர்களின் தேசியப் பார்வையையும் இறையாண்மை சார்ந்த அரசியல் கோட்பாடுகளையும் திரும்பக் கொண்டு வந்தனர். முதலாவதாக மே மாதம் 14 ஆம் நாள் 1976 ஆம் ஆண்டில் நிறைவேற்றிய வரலாற்று சிறப்புமிக்க வட்டுக்கோட்டைத் தீர்மானமும்,இதே காலகட்டத்தில் அறப்போர் முறைகளில் இருந்து ஆயுதப் போர்க்களத்திற்கும் ஈழத்தமிழர்கள் தயாராக இருப்பதை உணர்த்தும் வகையில்  தமிழீழம் விடுதலை கோரி உருவான தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கமும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் மாற்றங்களாகும். அதற்குப் பிறகு செயவர்த்தனே தலைமையிலான சிங்கள அரசாங்கத்தின் மேற்பார்வையில் நடத்தப்பட்ட கருப்பு சூலை இனக்கலவரமும்,தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடூரமான வன்முறைகளும் மிகப்பெரிய தாக்கத்தை உலகெங்கும் உருவாக்கியதோடு மட்டுமல்லாமல்,ஈழத்தமிழர்களின் எதிர்காலம் தமிழீழ விடுதலையையும் அதற்கான ஆயுதமும்  அரசியலும் இரண்டறக் கலந்தன. இத்தகைய முக்கியமான அரசியல் மாற்றங்கள் இலங்கையில் நடந்துகொண்டிருந்த காலத்தில்  இந்திய அரசியலில் நிகழ்ந்த தலைமை மாற்றங்களும் இந்திரா காந்தி அம்மையாரின் மறைவுக்குப் பிறகு இராசிவ் காந்தியின்  ஆட்சியில் இந்திரா காந்தி அம்மையாரின் அரசியல் அணுகுமுறைகளும் தமிழர் குறித்து கையாளப்பட்ட அரசதந்திரக் கோட்பாடுகளும் புறந்தள்ளப்பட்டன. இவ்வாறு தமிழர் நிலைப்பாட்டை எதேச்சையாகக் கையாண்டதில் அமெரிக்காவின்  பொருளாதார புவிசார் அரசியலும் ,இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளின் ஆதிக்கமும் மிகப்பெரிய பங்காற்றின. 1987 ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் ஈழத்தமிழர்க்கும் மிகப்பெரிய துயர திருப்பு முனைகளுக்கு அச்சாணியாக விளங்கிய காலம் ஆகும். இந்திய அமைதிப்படை இலங்கைக்குச் சென்றதோடு,இந்திய இராணுவத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமான போராக மாற்றியதில் அன்றைய இலங்கை அதிபர் செயவர்தனேவின் நரித்தனமும் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளின் கபடநாடகங்களும் முக்கியப்  பங்காகும் . 1991இல் நடந்தேறிய இராசிவ் காந்தியின் கொலையும் 2001ஆம் ஆண்டு நிகழ்ந்த இரட்டைக்கோபுரத் தாக்குதலும் தமிழீழ விடுதலைக்கான நகர்வுகளை தளர்த்தியதோடு சிங்களவரின் அரசதந்திர வலைப்பின்னலில் இந்திய மற்றும் உலக நாடுகள் அனைத்தையும் தமிழர்களுக்கு எதிராக ஒரே நேர்க்கோட்டில் நிறுத்தியது . இந்திய அரசாங்கத்திற்கும் ஈழத்தமிழர்களுக்குமான இடைவெளியும் உலக அரசியல்  மாற்றங்களையும் ஒருங்கிணைத்து சிங்கள அரசு நீண்டதொரு போருக்கு அடித்தளமிட்டதோடு இந்திய அரசாங்கத்தின் துணையோடு மேற்கத்திய நாடுகளை ( நோர்வேவின் ஊடாக) நடுவண் பார்வையாளராக வேண்டியது . இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இடையிலுமான 2002இல் நிகழ்ந்த அமைதிக்கான ஒப்பந்தம்  விடுதலைப்புலிகளுக்கு புதியதொரு அரசியல் பன்னாட்டு உறவு பாலத்தை உருவாக்கினாலும்,இலங்கை அரசும் அதன் அரசதந்திரக் கோட்பாடுகளும் அமைதி ஒப்பந்தத்தை ஊடுருவு பாதையாகத்தான் பார்த்தார்கள் . அதன்படி புதிய போர்முறைகளையும் , சிங்கள இராணுவ ஊடுருவல்களையும் , ஆயுதப் பெருக்கத்தையும் உலக நாடுகளின் மேற்பார்வைகளோடு இலங்கை அரசு முன்னெடுத்துச் சென்றது. 2004 ஆம் ஆண்டு இந்திய அரசியலில் சோனியா காந்தியின் நிழல் தலைமையின்கீழ் ஆட்சிக்கு வந்த காங்கிரசு அரசாங்கமும்,2005இல் இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த இராசபட்சவின் வெற்றியும், உலக நாடுகளின் தொடர் மெளனமும் 2009இல் ஈழத்தமிழர்களுக்குகெதிராக நடத்தப்பட்ட கொடுமையான போருக்கும்,இன அழிப்பிற்கும் வித்துகளாக அமைந்துவிட்டன.
மே 2009 இல் முடிவுக்குக்  கொண்டு வரப்பட்ட ஆயுதப்போர் இலங்கையின் இனப்பிரச்சினையை கடுகளவும் தீர்க்கவில்லை. அதோடு சிங்களப் பேரினவாதத்தை முழுமையாக  வெளிப்படுத்தியது . ஈழத்தமிழரும்,தாய்த் தமிழகமும் உலகத் தமிழரும் முன்பைவிட இப்பொழுது தெளிவான அரசியல் தீர்வுவேண்டி உறுதியாக நிற்கிறோம். தமிழ்ஈழ விடுதலைப் போராட்டம் அறப்போர்,ஆயுதப்போர் என்ற நிலைப்பாடுகளைக் கடந்து அரசியல் புவிசார்-அரசதந்திர வியூகங்களைச் சீர்செய்து, செம்மைப்படுத்துவதற்கான, பிராந்திய-உலக அரசியலையும் திறனாய்வு  செய்ய வேண்டிய காலத்திற்குள் நுழைந்து கொண்டிருக்கின்றது.

இதற்காக ஈழத்தமிழர்கள் மிகப்பெரிய அர்பணிப்புகளையும்,உயிர் கொடைகளையும் , துயர இழப்புகளையும் மேற்கொண்டார்கள் .இத்தகைய துயரமான காலத்திலும் ஈழத்தமிழரின் வீரமும் ,எதிரியிடம் மண்டியிடாத மானமும் தமிழ் ஈழத்தின் இறையாண்மை வேர்களைக் கண்டெடுத்ததோடு சில நூறு ஆண்டுகளுக்குப் பிறகு ஈழத்தமிழரின் இறையாண்மைக் கோட்பாடுகள் புத்துயிர் பெற்றன.
                 இன்றைய இலக்கை அரசியலில் இராசபக்ச குடும்பத்தினரின் மறுவருகையும், கோத்தபய இராசபட்சேவின் 2019 அதிபர் தேர்தலில் வெற்றியும்,சிங்கள பேரினவாதத்தின் எழுச்சியாகத்தான் பார்க்க வேண்டும் . இதன் எதிர்மறையாக ஈழத்தமிழர்கள் உறுதியான தலைவனும் தீர்க்கமான தலைமையும் இல்லாமல் பரிதவித்து கொண்டிருக்கின்றனர். தமிழீழ விடுதலைப் போராட்டம் புதிய அரசியல் பரிமாணங்களையும் ,புவிசார் – அரசதந்திரக் கோட்பாடுகளையும்,இந்தியப் பெருங்கடலில் தமிழீழத்தின் புவியியல் – அரசியல் பார்வையும் , உலகளவில் தமிழர்களின் மனித வளங்களையும் , ஒருங்கிணைத்து அசைபோடும் பாலைவனத்து ஒட்டகத்தின் பயணம்போல் விடுதலைக் கனவுகளை சுமந்து வானத்து விண்மீன்களின் வழிகாட்டுதலோடும் ஆயிரம் கைகள் மறைத்தாலும் மறையாத விடுதலை என்ற ஆதவனின் வெளிச்சத்தை நோக்கி நடக்க வேண்டும்.

தமிழ்க்குரல் ஊடகம்! ஏன்? எதற்காக?

உலகெங்கும் பரந்து வாழ்ந்திடும் தமிழர்களை இணைத்திட, அவர்தம் உரிமைகளை ஓங்கி ஒலித்திட உருவாக்கப்பட்டதுதான் நமது ‘ தமிழ்க்குரல்’.

தமிழன் இல்லாத நாடில்லை’ ஆனால் தமிழனுக்கு என்று ஒரு நாடில்லை என்ற கூற்றிற்கேற்ப தமிழர்களின் உரிமைகள் தொடர்ச்சியாக பறிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சூழலில் , தமிழ்ச்சமூகத்தின் உரிமைகளையும், வாய்ப்புகளையும் தமிழர்கள் விளங்கிக்கொள்ளும் வண்ணம் கருத்துக்களை ஏந்தி களமாட உருவானதுதான் தமிழ்க்குரல்.

அரசியல், வரலாறு, பொருளாதாரம், பண்பாடு, மொழி, கல்வி, உலக அறிவு, சுகாதாரம், வணிகம், மருத்துவம், இலக்கியம், சட்டம், நடப்பு அரசியல் அனைத்து துறைகளிலும் அரசியல் ஆட்கொண்டு நிற்பதை தக்க ஆதாரங்களோடும், விவாதங்களோடும் தமிழ்ச்சமுகத்திற்கு எடுத்தியம்பும், தமிழர்களின் சிறப்பான எதிர்காலத்தை தீர்மானிக்க உதவும் ஊடகமாக இது விளங்கும்.

இன்றைக்கு அனைத்து முன்னணி ஊடகங்களும் இந்துத்துவ- தேசியவாத பெருநிறுவனங்களால் கைப்பற்றப்பட்டுவிட்டன. எஞ்சியிருப்பவைகளை அடக்குமுறை மூலமாகவும், பணபலம் மூலமாகவும் கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்துக்கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலான ஊடகங்கள் அதிகார மையங்களால் கட்டுப்படுத்தப்பட்டு, தமிழர்கள் மீது தொடர்ந்து வன்மத்தை கக்குவது நாம் அறிந்ததே.

இந்தப் பின்னணியில்தான் தமிழ்ச்சமூகத்திற்கான ஒரு சுதந்திர ஊடகத்தை நிறுவுவதற்கான தேவை முன்னெப்போதையும் விட அவசியமாக மாறியிருக்கிறது

துணிவோடு நிற்பதால் நாம் எதிர்க்கொள்ளும் இன்னல்கள் பல. இருப்பினும் தமிழ்ச்சமூகத்தின் ஏற்றத்திற்கும், வலிமைக்கும் தேவையான ஊடகத்தை சுதந்திரமாக அழுத்தமில்லாமல் செயல்படுத்திட வேண்டுமென்றால் தமிழ்ச்சமூகம் தனது ஆதரவை வழங்கிடல் வேண்டும்.

தமிழ்ப் புரவலர்கள், சான்றோர்கள், ஆன்றோர்கள், பற்றாளர்கள் தமிழ்க்குரல் ஊடகத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து இதனை வலிமையான ஊடகமாக கட்டியமைக்க முழுமையான ஒத்துழைப்பையும், உதவிகளையும் வழங்கினால் தமிழ்க்குரல் தமிழ்ச்சமூகத்திற்காக உறுதியாக நின்று பாடுபட, போராட இயலும். வாள் முனையை விட வலிமையானது பேனா முனை என்பார்கள், ஆயதத்தில் சிறந்த ஆயுதம் கருத்தாயுதமாகும். தமிழ்ச்சமூகத்தின் நலனுக்காக தமிழ்க்குரல் தொடர்ந்து ஒலித்திட தமிழர்கள் அனைவரும் தங்களது பேராதரவினை நல்கி துணை நிற்குமாறு கேட்டுக் கொள்கிறோம்

நன்றி.