Friday, September 13, 2024 01:09 pm

Subscribe to our YouTube Channel

303,000SubscribersSubscribe
Home Blog Page 2

கோடியில் மிதக்கும் அதானி
கடனில் மூழ்கும் இந்தியா- க.இரா.தமிழரசன்

நாட்டை நாசமாக்கும் கூட்டாளிகள் – 7

அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி சுமார் 11 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் உலகின் 3ஆவது பெரிய பணக்காரர் என்ற இடத்தை பிடித்துள்ளதாக அறிவிப்பு வந்த தருணத்தில் , 2023 மார்ச்சில் நாட்டின் மொத்த கடன் ரூ.152.2 லட்சம் கோடியாக இருக்கும் என்று ஒன்றிய அரசே நாடாளுமன்றத்தில் அறிவிக்கின்றது. இதுதான் இந்தியாவின் நிலை.

கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் மோடி அரசு புதிதாக 50 லட்சம் கோடி ரூபாய் வெளியில் கடனாக வாங்கியுள்ளது. இந்த ஆண்டில் இந்திய அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.16.6 லட்சம் கோடியாக இருக்கும். அதாவது இந்த நிதியாண்டில் ரூ.16.6 லட்சம் கோடியை ஒன்றிய அரசு கடனாக வாங்க போகிறது.

2021-2022 நிதியாண்டில் ரூ.15.9 லட்சம் கோடியையும் 2020-2021ம் நிதியாண்டில் ரூ.18.2 லட்சம் கோடியையும் மோடி அரசு கடனாக வாங்கி உள்ளது.

நேரு காலம் தொடங்கி மன்மோகன் சிங் ஆட்சி காலத்தின் முடிவில் அதாவது 2014ம் ஆண்டு மார்ச்சில் நாட்டின் கடன் சுமை ரூ.53.11 லட்சம் கோடியாக இருந்தது. அதுவே மோடி ஆட்சிக்கு வந்த பின் கடந்த 8 ஆண்டுகளில் கிட்டத்தட்ட கடன் 3 மடங்கு அதிகரித்து ரூ.152.2 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இது நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 59 விழுக்காடு ஆகும்.

ஒன்றிய அரசு கடனுடன் மாநில அரசுகளின் கடன் தொகையையும் சேர்த்தால் நாட்டின் ஒட்டுமொத்த கடன் பொருளாதார ரீதியில் திவாலான பல நாடுகளுக்கு இணையான கடன் தொகையாகும். இந்திய அரசு தமது வரி வருவாயில் கிட்டத்தட்ட சரி பாதியை அதாவது 9.41 லட்சம் கோடியை கடனுக்கான வட்டியாகவே செலவிடும் நிலை இன்று உள்ளது.

ஒவ்வொரு குடிமகன் மீதான கடன் சுமை 43 ஆயிரத்து 124 ரூபாயாக இருந்த நிலையில், கடந்த 9 ஆண்டுகளில் இது ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 373 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் மோடி அரசு வங்கிகளுக்கு அழுத்தம் கொடுத்து அதானிக்கு கடன் மேல் கடன் வழங்க வைக்கிறது.

இதன் பின்னணியில் தான் 2019இல் ஆஸ்திரேலியாவின் க்ரேட் பேரியர் ரீஃப் பகுதியில் கெளதம் அதானியின் நிலக்கரி சுரங்கத்துக்கு இந்திய அரசு வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 1 பில்லியன் டாலர் கடன் கொடுப்பதாக அறிவித்தது

2022 ஆம் ஆண்டு மார்ச் வரையிலான தரவுகளின் படி அதானி குழும நிறுவனங்களின் ஒட்டுமொத்தக் கடன் மதிப்பு ரூ.2.2 லட்சம் கோடி ஆகும்.

நிக்கி நிறுவனத்தின் கணக்கீட்டின்படி,
அதானி குழுமத்தின் 10 நிறுவனங்களுக்கு 3.39 லட்சம் கோடி ரூபாய் கடன் தற்போது இருக்கிறது. டாலர் மதிப்பில் 41.4 பில்லியன் டாலர் கடன் இருக்கிறது

கடந்த ஆண்டு அதானி வாங்கிய ஏசிசி, அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் புது தில்லி டெலிவிஷன் ஆகிய மூன்று நிறுவனங்களும் இதில் அடங்கும்.

இதில் வங்கிகளிடமிருந்து ரூ.80,000 கோடி கடன் பெறப்பட்டுள்ளது. இதில் எஸ்பிஐ 21,375 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளது. மேலும் இண்டஸ்இண்ட் வங்கி ரூ.14,500 கோடியையும், பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.7,000 கோடியும் கடன் வழங்கியுள்ளது, இவையெல்லாமல் ஐடிஎப்சி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளும் கோடிக்கணக்கான பணத்தை அதானிக்குக் கடனாக வழங்கியுள்ளது.

இது மட்டுமல்லாமல் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களை அதானி பங்குகளில் முதலீடு செய்ய சொல்லி கட்டாயப்படுத்துகின்றனர்.

எல்ஐசி நிறுவனம் அதானி குழுமத்தின் பங்குகளில் 36,474.78 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. மேலும்,
எஸ்பிஐ மற்றும் பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களான நியூ இந்தியா, யுனைடெட் இந்தியா, நேஷனல் இன்சூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ் மற்றும் ஜெனரல் இன்சூரன்ஸ் கார்பரேஷன் உள்ளிட்டவைகளும் முதலீடு செய்துள்ளன.

கொரோனா காலத்தில் 2019-ம் ஆண்டில் மட்டும் 32,563 கூலித்தொழிலாளிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த 2020-ம் ஆண்டில் 37,666 தினக்கூலிகளும், 2021-ம் ஆண்டில் 42,004 தினக்கூலி தொழிலாளர்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து 2021-ம் ஆண்டுவரை மொத்தம் 4.56 லட்சம் பேர் தற்கொலை செய்துள்ளனர். இதில் 1.12 லட்சம் பேர் தினக்கூலி தொழிலாளிகள். 66,912 இல்லத்தரசிகள், 35,950 மாணவர்கள், 31,839 விவசாய கூலிகள் பொருளாதார நெருக்கடியில் வாழ முடியாமல் தற்கொலை செய்து கொண்ட அந்த கொரோனா காலகட்டத்தில்

” 2019ஆம் ஆண்டில் விமான நிலைய நிர்வாகம் மற்றும் மேம்பாட்டுப் பணிக்குள் வந்த அதானி ஏர்போர்ட்ஸ் நிறுவனத்துக்கு, அடுத்த இரு ஆண்டுகளில் மும்பை உட்பட நாட்டின் 7 (மும்பை, அகமதாபாத், ஜெய்பூர், லக்னோ, கவுகாத்தி, திருவனந்தபுரம், மங்களூரு) முக்கிய விமானநிலையங்களின் நிர்வாக, பராமரிப்பு, மேம்பாட்டுப் பணிகள் வழங்கப்பட்டன.

இதுபோக, இந்தியாவின் முக்கியமான 15 துறைமுகங்களை தன் கட்டுப்பாட்டில் வைத்தது அதானி குழுமம். இதுதவிர மின் விநியோகம், மின் உற்பத்தி, கட்டுமானம், காஸ் உற்பத்தி, பெட்ரோலியம் எனப் பல நிறுவனங்களிலும் அதானி குழுமத்தின் முதலீடு இந்த அசுர வளர்ச்சி கண்டது.

குறிப்பாக, 2021ம் ஆண்டிலிருந்து அதானிக்கு வாரத்துக்கு ரூ.6 ஆயிரம் கோடி சொத்து சேர்த்துள்ளார். அதாவது நாளொன்றுக்கு ரூ.1,000 கோடி லாபம் வந்துள்ளது.

2020ம் ஆண்டிலிருந்து அதானி டோட்டல் கேஸ், அதானி கிரீ்ன் பங்குகள் 1000 விழுக்காடு உயர்ந்துள்ளன. அதானி என்டர்பிரைசஸ் நிறுனப் பங்கு மதிப்பு 2020ம் ஆண்டிலிருந்து 1400 மடங்கும், அதானி டிரான்மிஷன் 1000 விழுக்காடும் வளர்ந்துள்ளது. அதானி போர்ட்ஸ் பங்கு மதிப்பு 120 மடங்கு உயர்ந்துள்ளது.

2016 ஆம் ஆண்டில் அதானி குழுமத்தின் கடன் 1 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு இருந்தது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1 லட்சம் கோடி கடன் பெற்று அடுத்தடுத்த நிறுவனங்களை துவக்கியும், பிற நிறுவனங்களை வாங்கியும் தனது குழுமத்தின் சாம்ராஜ்யத்தை விரிவாக்கி 10 லட்சம் கோடியில் அதானி மிதக்கிறார். 150 லட்சம் கோடி கடனில் இந்தியா மூழ்கிக் கொண்டிருக்கிறது.

(தொடரும்)

மனித குல எதிரி- அதானி – க.இரா. தமிழரசன்

நாட்டை நாசமாக்கும் கூட்டாளிகள் – 6

“10% லாபம் வரும் என்றால் எங்கு வேண்டுமானாலும் மூலதனம் பயணம் செய்யும்.
20% லாபம் வரும் என்றால் ரொம்பவும் சுறுசுறுப்பாக முதலீடு செய்ய ஓடுகிறது.
50% சதவீதம் லாபம் வரும் என்றால் எல்லா கெடுதலையும் செய்யத் துணிவு கொள்கிறது.
100% லாபம் வரும் என்றால் அனைத்து சட்டங்களையும் காலில் போட்டு மிதிக்கத் தயார் ஆகிறது.
300% லாபம் வரும் என்றால் இதற்காக எந்தக் குற்றத்தையும் செய்யத் துணியும்.
தூக்கிலிடப்படுவோம் என்றாலும் துணிந்து எதையும் செய்யும்.”

என்று மூலதனம் நூலில் மாமேதை கார்ல்மார்க்ஸ் குறிப்பிடுவதற்கு அப்படியே பொருத்தமானவர் அதானி.

முதலாளித்துவம் வளர்ச்சி அடைவதால் நாடு வளம் பெருகும், வேலை வாய்ப்பு பெருகும், பணப்புழக்கம் அதிகரிக்கும் என்பதெல்லாம் முதலாளித்துவ ஆதரவாளர்கள் விடும் வெறும் கட்டுக்கதை. உண்மையில் முதலாளித்துவத்தின் வளர்ச்சி மக்களை வீதியில் கொண்டு வந்து நிறுத்தும், வில நிலங்களை ஆக்கிரமித்து விவசாயிகளை வெளியேற்றும், காடுகளைக் கைப்பற்றி பழங்குடியினரை துரத்தும்.

இதற்கு அதானியின் சில நிறுவனங்களினால் நடந்த மக்கள் விரோதச் செயல்களைப் பார்ப்போம்.

அதானி நிறுவனத்தின் துறைமுகம், குஜராத்தின் சூரத் மாவட்டத்தில் உள்ள ஹஸிரா என்ற பகுதியில் இயங்கி வருகிறது. அந்த துறைமுகம் முதல் கோதன் கிராமம் வரை சுமார் 28 கிலோமீட்டர் தொலைவுக்கு ரயில்களில் சரக்குகளை எடுத்து செல்ல வசதியாக தண்டவாளம் அமைக்கும் பணிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இத்திட்டத்திற்காக 15 கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அதானியின் விழிஞ்சம் துறைமுகம்
கட்டுமானம் தொடங்கிய பிறகு, கடற்கரை மிகவும் பாதிக்கப்பட்டு மீன் பிடிக்கச் செல்ல முடியாமல் 56,000 மீனவ சமூகங்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. .

கடல் அரிப்பு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறி உள்ளன.

விழிஞ்சம் பகுதி கடல் அரிப்பு மிகுந்த பகுதி. கடல் அரிப்பு மிகுந்த மற்றும் அழகிய கடற்கரையை கொண்டுள்ள பகுதிகளில் துறைமுகங்களை உருவாக்க வேண்டாம் என்றும் T’ வடிவத்தைப் போல கடற்கரைக்கு செங்குத்தாக ஓர் அமைப்பை உருவாக்கினால், மணல் மேலும் கீழும் நகரும். கடற்கரையோரம் இயற்கையான மணல் நகர்வை கட்டுமானம் தடை செய்கிறது. இங்கு தென்பகுதியில் மணல் குவிந்து கிடக்கும் அதே நேரத்தில் வடக்குப் பகுதியில் நீங்கள் அரிமானத்தைக் காணலாம்” என்று பேராசிரியர் ஜான் குரியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தத் துறைமுகத்தை எதிர்த்து இன்றும் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.

மேற்கு வங்க மாநிலம் முர்சிதாபாத் மாவட்டத்தில் அதானி பவர் நிறுவனத்தின் உயர் மின் அழுத்த கம்பிகள் விவசாய நிலங்களுக்குள் செல்கிறது. இதனால் விளைநிலங்கள் பாதிக்கபடுவதாக அம்மக்கள் போராடுகின்றன. கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தின் கோடா மாவட்டத்தில் 2,300 ஏக்கர் விவசாய நிலங்களை ஆக்கிரமித்து, இறக்குமதி நிலக்கரி கொண்டு 1,600 மெகாவாட் மின் உற்பத்தியை 60 கிமீ அப்பாலிருக்கும் பங்களாதேஷ் நாட்டுக்கு விற்கும் திட்டம் அதானிக்கு பெற்றுத்தரப்பட்டது. இந்தியாவின் நலித்த மாநிலங்களில் இரண்டாவது இடத்திலிருக்கும் ஜார்கண்டின் கோடா மாவட்டத்தில், அதானியின் அனல் மின் நிலையம் புகுந்ததில் அப்பகுதியின் வாழ்வாதாரமும், நீராதாரமும் வறண்டன. அந்தக் கிராம மக்களுக்காகப் போராடிய அவர்களுடைய சட்டமன்ற உறுப்பினர் பிரதீப் யாதவ் ஐந்து மாதம் சிறையில் அடைத்து அதானிக்கு சேவகம் செய்தது மோடி அரசு.

இப்படி 4 அனல் மின்நிலையங்கள் அவற்றுக்கான நிலக்கரி தேவைக்காக 18 நிலக்கரி சுரங்கங்கள் என இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் கால்பரப்பி நிற்கிறது அதானி குழுமம்.

முந்த்ரா துறைமுகம் 8000 ஹெக்டேர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு தொடங்கப்பட்ட இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகம் இது. இது தொடங்கப்பட்ட ஆறு ஆண்டுகளுக்குள் பல்வேறு சூழலியல் விதிகளை மீறியதாக அதானி குழுமத்தின் மீது வழக்குத் தொடுக்கப்பட்டு, துறைமுகத்திற்கு அருகில் இருக்கும் நவினல் கிராம மக்கள், தற்போதுவரை நீதிமன்றங்களில் முறையிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அதானியின் ஆக்டோபஸ் பிடிக்குள் தமிழகம் மட்டும் தப்பிக்குமா ?

சென்னை, எண்ணூரை அடுத்த அதானியின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம்

330 ஏக்கர் பரப்பளவில் தற்போது இருக்கும் அந்தத் துறைமுகத்தை 6,200 ஏக்கர்களுக்கு விரிவாக்கம் செய்வதே அவர்களின் திட்டம். காட்டுப்பள்ளி துறைமுகம் மட்டும் அறிவித்தவாறு 20 மடங்கு விரிவாக்கம் செய்யப்பட்டால், பல மீனவ கிராமங்கள் கடலுக்குள் போவதோடு, பழவேற்காடு பகுதியே கடல் அரிப்பால் கடுமையாக பாதிக்கப்படும்.

கிட்டத்தட்ட 82 கிராம மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும், 35 லட்சம் மக்களுக்கு வெள்ள அபாயத்தை ஏற்படுத்தும். இப்பகுதியில் பல்லுயிர் பெருக்கம் அதிகரித்து 160 வகையான மீன்களும், 25 வகையான மிதவைப் புழுக்களும், பலவகையான மெல்லுடலிகளும், இறால், நண்டு வகைகளும் அதிகளவில் உற்பத்தியாகின்றன.எண்ணற்ற வலசைப் பறவைகளுக்கும் இயல் பறவையினங்களுக்கும் வாழிடமாக இருக்கின்றது. அவை அழிக்கபட உள்ளது.

கமுதி அருகேயுள்ள செங்கப்படை கிராமத்தில் சூரிய மின் உற்பத்தி வளாகத்தை அமைத்திருக்கிறது அதானி குழுமம். சோலார் பேனல்கள் அமைப்பதற்காக சாயல்குடி, புதூர், காமராஜபுரம் அவற்றைச் சுற்றியுள்ள கிராமங்களில் 6,000-க்கும் மேற்பட்ட பயன்தரும் தறுவாயிலுள்ள பனைமரங்களை வெட்டி அகற்றிவருகின்றனர். கமுதி குண்டாறு அதானிக்கு தாரைவார்க்கப்பட்டது ஒரு நாளைக்கு 2லட்சம் லிட்டர் குண்டாறு ஆறு நதிநீர் சுரண்டப்பட்டு வருகிறது.

8,000 ஏக்கர் விளை நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பாசனக் கிணறுகள் மூடப்பட்டு, 100 க்கு மேற்பட்ட ஏரி,குளங்கள் மேவப்பட்டு 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வாழை, மா, தென்னை மற்றும் பாக்கு மரங்கள் வெட்டப்பட்டு, 500 ஏக்கர் வனப்பகுதிகள் அழிக்கப்பட்டு அவற்றிலுள்ள விலங்கினங்களை சாகடித்து , 10 ஆயிரம் குடும்பங்களை வெளியேற்றி விட்டு எட்டு வழி சாலைத் திட்டத்தை யாருக்காக நிறைவேற்றப் போகிறார்கள் ? அதானிக்காகத் தான்.

இந்தியாவோடு மட்டும் அதானி நிற்கவில்லை

அதானி நிலக்கரி சுரங்கம் அமைக்கும் ஆஸ்திரேலியா குயின்ஸ்லாந்து மாகாணத்தில் வாழும் இருபெரும் பூர்வகுடி மக்கள்தான் வாங்கன், ஜகலிங்கோ (Wangan and Jagalingou) இனக்குழுவினர். இயற்கையையும், நீரூற்றுகளையும் புனிதமாகக் கருதும் இவர்களுக்கு குயின்ஸ்லாந்து பகுதி மட்டுமே ஒற்றை வாழ்விடமாக இருக்கிறது. அங்கிருக்கும் சுமார் 2,47,000 ச.கி.மீட்டர் பரப்பிலான கலிலீ ஆற்றுப்படுகைக்கு அடியில் மிகப்பெரிய நிலக்கரி கையிருப்பு உள்ளது. இவற்றை வெட்டி எடுப்பதன் மூலம் நிலத்தடிநீர் தட்டுப்பாடு, காற்றுமாசுபாடு போன்ற சூழலியல் சீர்கேடுகள் ஏற்படுவதோடு அவர்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் பாதிக்கப்படும்.

அதற்கேற்றபடி, பல விஞ்ஞானிகள் அதானியின் சுரங்கம் செயல்பட ஆண்டுக்கு 12 பில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படும் என்றும், அப்படி செயல்பட்டால் சுமார் 297 பில்லியன் லிட்டர் நிலத்தடி நீர் இருப்பு முற்றிலும் இல்லாமல் போகும் என எச்சரிக்கை விடுத்தனர்.

இதுமட்டுமல்லாமல், தி கிரேட் பேரியர் ரீஃப் (The Great Barrier Reef) கடற்பகுதி வழியாக ராட்சத கப்பல்களில் டன் கணக்கில் நிலக்கரிகளை ஏற்றிச்சென்றால் அங்கிருக்கும் மிகப்பெரிய பவளப்பாறைத் தொகுதிக்கும் பெருமளவு சேதம் உண்டாகும் என சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையின் வடக்கு மாகாணத்திலுள்ள இரண்டு இடங்களில் அதானி குழுமம் மின் உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தம் கடந்த ஆண்டு போடப்பட்டதிலிருந்து ” இலங்கையின் வளம் கொள்ளையிடப்படும், நம் நாட்டின் மின்சார உற்பத்தி முறையும் சீர்குலைந்துவிடும் என்று கூறி அதானி குழுமம் இலங்கையில் கால்பதிக்கக் கூடாது!” என்று தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இவையெல்லாம் வெறும் சில உதாரணங்கள் மட்டுமே.

இப்படி அதானி கால் பதிக்கும் இடங்களில் எல்லாம் உழைக்கும் மக்கள் வீதிக்கு கொண்டுவரப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதற்கு மோடி அரசின் முழு ஆசியும் இருக்கிறது.

(தொடரும்)

நாமக்கல்லில் இன்று நடக்கும் கூட்டத்திலும் தாக்குதல் நடத்த திட்டமா?

சட்ட விரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்கம்

கல் குவாரி தொடர்பாக பல்வேறு முறைகேடுகள் – குவாரியில் நடக்கும் விபத்து என்ற பெயரில் கொலைகள், குவாரி உரிமையாளர்களால் நடத்தப்படும் படுகொலைகள் தொடர்ந்து அம்பலப் படுத்தப்பட்டு வரும் நிலையில்….

09-02-2023 வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு அக்கலாம்பட்டி 1 கல்குவாரி, மாலை 03.00 மணிக்கு கோக்கலை 4 கல்குவாரிக்கு, நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், 5 கல் குவாரி அமைப்பதற்காக ,
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக இணைப்பு கூட்ட அரங்கில், (கோக்கலை சிவக்குமார், ராஜா, ராமாயி, பழனிச்சாமி என4 கல்குவாரி -அக்கலாம்பட்டி செல்வராஜ் கல்குவாரி ) அமைப்பதற்கான
கருத்து கேட்பு கூட்டம் , நடைபெற உள்ளது.

இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் தமிழக சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன்,சட்டவிரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்கம் ஒருங்கிணைப்பாளர்கள் தோழர். சண்முகம் -விஜயன், பூசன், சமூக செயல்பாட்டாளர் வழக்கறிஞர் செந்தில்குமார், தோழர். பொன்னரசு, குன்னமலை குழந்தைவேல், சாமானிய மக்கள் நலக் கட்சி பொதுச்செயலாளர் முனைவர் .குணசேகரன், சூழலியல் செயல்பாட்டாளர் மோகன்ராஜ்-
கொ. நாகராஜன், லா பவுண்டேஷன் வாசுதேவன், சாமானிய மக்கள் நலக்கட்சி நாமக்கல் மாவட்ட செயலாளர் தியாகராஜன்
உள்ளிட்ட பல்வேறு அமைப்பு தோழர்கள், சூழலியல் செயற்பாட்டாளர்கள், தொடர்ந்து அடக்குமுறைக்கு அஞ்சாது சட்டவிரோத கல்குவாரிகளுக்கு எதிராக போராடி பல்வேறு நிலைமைகளை மாற்றி வரும் கோக்கலை ஊர் பொதுமக்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

கடந்த ஓராண்டாக சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களின் தொடர் செயல்பட்டால் தற்போது திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டத்திலிருந்த 64 +18= 82 கல்குவாரிகளும் முறைகேடாக இயங்குகிறது என்று உயர் நீதிமன்றமே அனைத்தையும் மூடி, தவறுக்கு துணை நின்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலியில் இயங்கிய 54 குவாரிகளும் சட்ட விரோதமாக இயங்குகிறது என்றும் 19 கல் குவாரிகள் இயங்க தகுதியில்லை என்றும் மற்ற குவாரிகளுக்கு நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டும், அனைத்து குவாரிகளும் முறைகேடுகள் இருக்கிறது என்று அரசு அமைக்க குழுவின் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள், தங்களது 2021 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில், எண்ணற்ற முறைகேடுகள் நடந்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதால் கிரானைட் குவாரிகளை இனி அரசே ஏற்று நடத்தும் என தெரிவித்திருந்த நிலையில்* நாமக்கல்லில் கல் குவாரிக்காக கருத்து கேட்புக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

சட்டவிரோத கல்குவாரிகளை கடுமையாக ஆதாரபூர்வமாக எதிர்ப்பதாலும், அதனை ஆதாரபூர்வமாக பொதுவெளியில் முன் வைப்பதாலும், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களுக்கு, நாமக்கல்- மரப்பரை;
கரூர்-பரமத்தி காட்டு முன்னூர், கோவை – கிணத்துக்கடவு 10 முத்தூர் உள்ளிட்ட பல இடங்களில், கொலை மிரட்டல், உள்ளிட்ட பல்வேறு அச்சுறுத்தல்கள், தாக்குதல் முயற்சிகள் குவாரி உரிமையாளர்களாலும் அவர்களது அடியாட்களாலும் ஏற்பட்டது.

சென்ற மாதம் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் முன்பாகவே, கொண்டம நாயக்கன்பட்டி கல்குவாரி கருத்து கேட்பு கூட்டத்தில் கல்குவாரி உரிமையாளர்களால் அழைத்து வரப்பட்ட அடியாட்களால், சட்ட விரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சண்முகம் அவர்கள் தாக்கப்பட்டார்.

கரூரில் நான்கு மாதம் முன்பு விவசாயி ஜெகநாதன் குவாரி உரிமையாளர்களால் வாகனம் ஏற்றி படுகொலை செய்யப்பட்டார்.

சில மாங்களுக்கு முன்பு கூட ஈரோடு மாவட்டம் சென்னிமலையில், எக்கட்டாம் பாளையம் கிராமத்தில் உள்ள கல்குவாரி முறைகேடுகளை எதிர்த்து ஆதாரத்தோடு முன்வைத்து வந்த தமிழ்ச்செல்வன் என்பவர், குவாரி உரிமையாளர்கள் ஏவிவிட்ட கூலிப்படையால் கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டு உயிர்தப்பி சிகிச்சை பெற்றார்.

அனைத்து மாவட்டங்களிலும், கடந்த பல ஆண்டுகளாக மிகப்பெரும் சட்டவிரோதமாகவும், சுற்றுச்சூழலை பாதித்தும் குவாரி நடத்தி வரும் கல்குவாரி உரிமையாளர்களால், இன்றைய கோக்கலை – அக்கலாம்பட்டி கல் குவாரிக்காக நடைபெறும் கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்கும் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களுக்கு என்ன நடக்கும் என்று சொல்ல முடியாத அவல நிலையே உள்ளது.

எனவே அனைத்து பத்திரிக்கையாளர்களும்/காட்சி ஊடக நண்பர்களும் இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டு, அங்கு நடக்கும் உண்மையை உலகிற்கு எடுத்துச் சொல்ல வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

ந.சண்முகம்,
தோழர் பூசன்,
தோழர். குழந்தைவேலு
ப. பொன்னரசு
சு.விஜயன்,
ஒருங்கிணைப்பாளர்கள்,
சட்ட விரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்கம்

97919- 78786
73734 – 53038

அதானியின் 17 லட்சம் கோடி மோசடி- செபி, ஆர்பிஐ விசாரிக்க வைகோ வலியுறுத்தல்

அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் முதலீட்டு ஆய்வு நிறுவனம், பங்குச்சந்தையில் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் மேற்கொள்ளும் தில்லுமுல்லுவை அம்பலப்படுத்தி வருகிறது. தற்போது அந்த நிறுவனம் கடந்த வாரம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதில், “உலகின் 4ஆவது பெரும் பணக்காரரும், ஆசியாவின் நம்பர்-1 பணக்காரருமான அதானியின், அதானி குழும நிறுவனத்தின் முறைகேடுகளை அம்பலாக்கியது. அந்த அறிக்கையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்திய ஆய்வில், அதானி குழுமம் பங்குச் சந்தையில் பல்வேறு முறைகேடுகளைச் செய்து, ரூ.17.80 லட்சம் கோடிக்கு மோசடி செய்துள்ளதாக குற்றம் சாட்டி உள்ளது. ‘அதானி குழுமத்தின் மொத்த சொத்து மதிப்பு தோராயமாக 120 பில்லியன் டாலர் (ரூ.9.84 லட்சம் கோடி). இதில், 100 பில்லியன் டாலர் (ரூ.8.2 லட்சம் கோடி) கடந்த மூன்று ஆண்டில் ஈட்டப்பட்டுள்ளது.

இந்தக் காலக்கட்டத்தில் அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட ஏழு நிறுவனங்களின் பங்குகள் 819 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால், பங்குச்சந்தையில் மோசடி செய்து, போலி நிறுவனங்கள் மூலமாக அதானி நிறுவனம் பணத்தை முறைகேடாக ஈட்டியுள்ளது. இதற்காக தாராள வரிச்சலுகை உள்ள மொரீசியஸ், ஐக்கிய அரபு எமிரேட், கரீபியன் தீவுகள் போன்ற நாடுகளில் போலி நிறுவனங்களை தொடங்கியுள்ளது. இவற்றை அதானி குழுமத்தில் உயர் பதவிகளில் உள்ள அதானியின் உறவினர்கள் நிர்வகித்து வருகின்றனர். மொரீசியசில் மட்டுமே 38 போலி நிறுவனங்களை அதானி குடும்பத்தினர் நடத்தி வருகின்றனர்.

மேலும், அதானி குழுமம் வரம்புக்கு மீறி கடன் பெற்றுள்ளது. இதனால் நிலையற்ற தன்மையில் அதானி குழும நிறுவனங்கள் உள்ளன” என ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அதுமட்டுமின்றி, அதானி குழுமத்தின் போலி நிறுவனங்கள் குறித்த புகைப்பட ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளது. அதோடு, அதானி குழுமத்தின் மோசடி தொடர்பாக 88 கேள்விகளையும் ஹிண்டன்பர்க் எழுப்பியுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அதானி குழுமம் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து, வழக்கு தொடர உள்ளதாக எச்சரித்து உள்ளது.

கருப்புப் பண ஒழிப்பு பற்றி பேசும் ஒன்றிய பாஜக அரசு, தனக்கு நெருக்கமான நிறுவனத்தின் இந்த சட்டவிரோதச் செயல்களைப் பார்த்து கண்ணை மூடிக் கொண்டு இருக்கிறதா? இந்த குற்றச்சாட்டுகளை பெயரளவில் விசாரிக்காமல் முழுமையாக செபி விசாரிக்குமா?

அதானி குழுமத்தின் பங்கில் 8 சதவீதத்தை, அதாவது ரூ.74,000 கோடி பங்குகளை எல்ஐசி வைத்துள்ளது. மேலும், அதானி குழுமத்தின் கடனில் 40 சதவீதத்தை ஸ்டேட் பேங் ஆப் இந்தியா வங்கி வழங்கி உள்ளது. எனவே, அதானி குழுமம் முறைகேடு செய்து தனது பங்கு மதிப்பை தன்னிச்சையாக உயர்த்தி, அவற்றை அடமானமாக வைத்து, எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளில் கடன் பெற்றதா? என்பது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி விசாரணை நடத்த வேண்டும். இது உண்மையாக இருந்தால் எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளின் நிதிநிலை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

எனவே, பொதுநலன் கருதி இந்திய பங்குச்சந்தை ஒழுங்கமைப்பான செபி மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியவை உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’

பிரதமர் மோடி – அதானி நட்பு- க.இரா. தமிழரசன்

நாட்டை நாசமாக்கும் கூட்டாளிகள் – 5

2014-ல் நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்காக மோடி,  சுமார் 150 பரப்புரைக் கூட்டங்களில் கலந்து கொண்டார், கிட்டத் தட்ட 2.4 லட்சம் கிலோ மீட்டர் பயணித்தார், அதற்காக அதானி குழும நிறுவனம்  கர்னாவதி ஏவியேஷனின் விமானத்தை மோடிக்கு வழங்கியது.

மோடி குஜராத் முதல்வராக இருந்த போது அதானிக்கு செய்த உதவிக்காக அதானி மோடிக்கு செய்த கைமாறு இது.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான அதே நாளில்,  ஒடிஸாவில், கிழக்குக் கடற்கரைப் பகுதியில் உள்ள ‘தாம்ரா போர்ட்’ துறைமுகம் ரூ.5,500 கோடிக்கு அதானியின் ‘அதானி போர்ட்ஸ்’ நிறுவனத்தின் கைகளுக்குச் சென்றது.

அடுத்த மூன்று மாதங்களில், உடுப்பியிலுள்ள ரூ. 6,000 கோடி மதிப்புள்ள 1,200 மெகாவாட் அனல் மின் உற்பத்தி நிலையத்தை ‘லான்கோ இன்ஃப்ரா’ நிறுவனத்திடமிருந்து அதானி குழுமம் வாங்கியது.

அடுத்த மூன்று மாதங்களில், ரூ. 4,200 கோடி மதிப்புள்ள 600 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தை ‘அவந்தா’ நிறுவனத்திடமிருந்து அதானி குழுமம் வாங்கியது. இதன் மூலம் 11,040 மெகாவாட்டாக அந்நிறுவனத்தின் மின் உற்பத்தித் திறன் உயர்ந்தது. நாட்டின் மிகப் பெரிய தனியார் மின் உற்பத்தி செய்யும் குழுமமாக  அதானி குழுமம் உருவாகியது.

செப்டம்பரில் இன்னொரு சாதனையையும் அவர் படைத்தார். இந்தியாவின் ‘டாப் 10 பணக்காரர்கள்’ பட்டியலில் நுழைந்தார்.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரேசில், ஜப்பான் , இஸ்ரேல் என்று  மோடி எந்த நாடுகளுக்குச் சென்றாலும் அதில் அதானியும் ஒரு அங்கமாக இருந்தார்.

மோடியுடன் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்த அதானிக்கு இஸ்ரேல் நிறுவனத்துடன் இணைந்து, இந்திய ராணுவத்திற்கு ட்ரோன் விமானங்கள் செய்யும் ஒப்பந்தம் கிடைத்தது.

2014ஆம் ஆண்டு நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமர் என்கிற முறையில் பிரிஸ்பன் நகரத்தில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். அவரோடு கெளதம் அதானியும் சென்றார்.

அதானிக்கு மிகப்பெரிய நிலக்கரி சுரங்கம் ஆஸ்திரேலியாவில் கட்டுவதற்கான அனுமதியைப் பெற்றுத் தந்தார்.

அந்த நிலக்கரிச் சுரங்கம் அமைக்கப்படும் இடத்தின் மீது உள்ள எதிர்ப்பு, அதானி மீதுள்ள வாராக்கடன் குற்றச்சாட்டுகள் முதலியவற்றைக் கணக்கிட்டு, வெளிநாட்டு வங்கிகள் அவருக்குக் கடன்தர மறுத்தபோது,
அதற்கான கடனை பொது வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவிடமிருந்து ஏறத்தாழ 6,000 கோடி ரூபாய் பெற்றுக் கொடுத்தார்.

நிலக்கரி சுரங்கம் வாங்கிக் கொடுத்த கையோடு ஒரு டன் ரூ.16,700 என்ற விலையில் 25 லட்சம் டன் ரூ.4,035 கோடி மதிப்புள்ள நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தம் அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இதன் விளைவு நிலக்கரி மூலம் மின்உற்பத்தி செய்வோர் ரூ.20,000 என்ற விலையில் இறக்குமதி நிலக்கரியை வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இது வழக்கமாக டன் ரூ.1700 முதல் ரூ.2000 என்ற விலையில் வாங்கும் உள்நாட்டு நிலக்கரியை விட 7 முதல் 10 மடங்கு விலை அதிகமானது.

அதிக விலை கொடுத்து நிலக்கரியை வாங்க எல்லா மாநில அரசுகளுக்கும் நிர்பந்தம் கொடுக்கப்பட்டது

உதாரணத்திற்கு டெண்டரே விடாமல், இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து அதானி என்டர்பிரைசஸ் இறக்குமதி செய்த  நிலக்கரியை டன்னுக்கு 5008.45 ரூபாயும், ஸ்ரீ ராயல் சீமா என்ற கம்பெனிக்கு டன்னுக்கு 4936.25 ரூபாயும், யாசின் இம்பெக்ஸ் இந்தியாவிற்கு டன்னுக்கு 5098 ரூபாயும் கொடுப்பதற்கு கடந்த அ.தி.மு.க அரசு மோடியின் அழுத்தத்தால் வாங்குவதற்கு ஒப்பந்தம் போட்டது.

அதற்கு முன்பு “கோல் இந்தியா”- விடமிருந்து ஒரு டன் நிலக்கரி 2 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியது முக்கியமானது.

சட்டீஸ்கர் மாநிலத்தின் ராய்கர் மாவட்டத்தில் இருக்கும் நிலக்கரி சுரங்கத்தை இயக்க  மிக முக்கியமான ஒப்பந்தத்தை அதன் துணை நிறுவனமான காரே பால்மா II கோலினரிஸ் பிரைவேட் லிமிடெட்ட நிறுவனத்துடன் இணைந்து மகாராஷ்டிரா மாநில மின்சார உற்பத்தி நிறுவனத்திடம் கைப்பற்றியுள்ளது.

இது சுமார் 34 வருடம் காலம் கொண்ட மாபெரும் ஒப்பந்தமாகும். ராய்கர் மாவடத்தில் இருக்கும் நிலக்கரி சுரங்கத்தில் இருந்து ஆண்டுக்கு 23.6 மில்லியன் டன் நிலக்கரி ஒவ்வொரு வருடமும் உற்பத்தி செய்யப்படுகிறது.

அடுத்து, பாதுகாப்புத் துறை சார்ந்த தயாரிப்புகளை இந்திய நிறுவனங்களே தயாரிக்க வேண்டும் என்றபோது அதானி பாதுகாப்பு கருவிகளைத் தயாரிக்கும் நிறுவனத்தைத் தொடங்கினார்.

2015-ம் ஆண்டுக்குப் பிறகு ராணுவத்துக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கும் பணியையும் அதானி குழுமம் தொடங்கியது. சிறிது காலத்திற்குப் பிறகு, இயற்கை எரிவாயு துறையில் அதன் வணிகம் விரிவடைந்தது. 2017-ல் சோலார் பிவி பேனல்கள் தயாரிக்கத் தொடங்கியது.

இந்தியாவில் மும்பை, அகமதாபாத், மங்களூரு, லக்னோ, ஜெய்ப்பூர் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய 6 விமான நிலையங்களின் பராமரிப்புப் பணிகளும் தனியார்மயமாக்கப்பட்டு, அவை அதானியின் ‘அதானி எண்டர்பிரைசஸ்’ நிறுவனத்துக்கு (Adani Enterprises) வழங்கப்பட்டுள்ளன.

மூன்று வருடங்கள் கழித்து, எரிவாயு துறையை அரசு ஊக்குவித்ததைத் தொடர்ந்து, எரிவாயுவை சில்லரை விற்பனை செய்யும் பெரிய தனியார் நிறுவனமான தன்னை தகவமைத்துக் கொண்டது இந்நிறுவனம்.

சூரிய ஆற்றலையும் அதானி விட்டு வைக்கவில்லை. இந்தியாவிலேயே அதிக அளவில் சோலார் மின்சாரத்தை தயாரிக்கும் நிறுவனங்களில், அதானி க்ரீன் நிறுவனம்தான் முதலிடத்தில் உள்ளது.

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தின் கமுதியில் தான், 2500 ஏக்கர் நில பரப்பில், உலகின் மிகப் பெரிய சோலார் உற்பத்தி நிலையத்தை அமைத்திருக்கிறார் கெளதம் அதானி.

– இப்படி நாம் பட்டியல் போட்டுக்கொண்டே போகலாம்.

2020 ஆம் ஆண்டு 8.9 மில்லியன் டாலராக இருந்த அவரது சொத்து மதிப்பு 2022 ஆம் ஆண்டு ஜனவரியில் 89 பில்லியன் டாலராக உயர்ந்தது. குறிப்பாக 2021 ஆம் ஆண்டில் அதானின் ஒரு நாள் வருமானம் மட்டும் ஆயிரம் கோடியாக இருந்தது.

கடந்த 15 ஆண்டுகளில் அதானியின் வளர்ச்சி அபரிதமாக இருந்துள்ளது. 2006-07 நிதியாண்டில் அதானி குழுமத்தின் வருமானம் ரூ.16,953 கோடி. இதில் கடன் மட்டும் ரூ.4,353 கோடி. இதுவே 2012-13 நிதியாண்டில், வருமானம் ரூ.47,352 கோடி எனவும் கடன் ரூ.81,122 எனவும் இருந்தது.

மோடி 2014-ல் பிரதமராக பதவியேற்கும் போது அதானியின் நிகர மதிப்பு 7.1 பில்லியன் டாலர்கள். அது தற்போது 137 பில்லியன் டாலர்கள் என்றளவிற்கு உயர்ந்துள்ளது.

(தொடரும்)

முதலமைச்சர் மோடி- அதானி நட்பு, ரத்தச் சகதியில் பூத்த நட்பு- க.இரா. தமிழரசன்

நாட்டை நாசமாக்கும் கூட்டாளிகள் – 4

” 2001-ல் அடுத்த கட்டத்தை எட்டினேன். அப்போது குஜராத் மாநில முதல்வராக மோடி இருந்தார். முன் எப்போதும் இல்லாத வகையில் மாநிலத்தில் தொழில் வளங்கள் வளர்ச்சி பெற்றன. அதற்கு அவரது ஆட்சியில் கொண்டு வந்த கொள்கைகள் காரணம்.”- அதானி

2002-ம் ஆண்டு குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்திற்குப் பிறகு, இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை நிகழ்த்தப்பட்டது. இந்த வன்முறையில் 20,000 இஸ்லாமியர்களின் வீடுகள் மற்றும் கடைகள், 360 மசூதிகள் அழிக்கப்பட்டன. 1.5 லட்சம் மக்கள் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தனர். அரசு தகவலின்படி 790 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். கலவரம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட மனித உரிமை அமைப்புகள் இதில் 2,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தெரிவித்தது.

இஸ்லாமியர்கள் மீதான இந்த கொடூர தாக்குதலுக்காக அந்த மாநிலத்தின் முதல்வராக அப்போது இருந்த மோடியை `இந்தியத் தொழில் முனைவோர் கூட்டமைப்பு’ (Confederation of Indian Industry – CII) கண்டித்தது.

இந்தியாவின் வர்த்தக நெட்வொர்க்கின் மிகப்பெரிய கூட்டமைப்பால் மோடி கண்டிக்கப்பட்டபோது, கூட்டமைப்பின் உள்ளிருந்தே அதை எதிர்த்தவர் கௌதம் அதானி. உன் மீது படிந்திருக்கிற ரத்த கறையோடு உன்னை கட்டி தழுவ நான் தயாராக இருக்கிறேன் என்று முதல் நாளாக மோடிக்கு ஆதரவாய் நின்றார்.

குஜராத்தைச் சேர்ந்த சில தொழிலதிபர்களுடன் `குஜராத் மறுமலர்ச்சி குழுமம்’ என்ற வர்த்தகக் கூட்டமைப்பைத் தொடங்கிய அதானி, மோடிக்காக சி.ஐ.ஐ கூட்டமைப்பை விட்டு விலகப்போவதாக பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார். இந்த நிகழ்வுக்குப் பிறகு மோடிக்கும், அதானிக்கும் இடையிலான நட்பு அதிகரித்தது.

2003-ம் ஆண்டு, குஜராத் மாநில அரசு நடத்திய `வைப்ரன்ட் குஜராத்’ என்ற தொழிலதிபர்களுக்கான மாநாட்டில், 15 ஆயிரம் கோடி ரூபாய்வரை முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்து மோடி உடனான நட்பை ஆழப்படுத்தினார்

மோடி ஆட்சி காலத்தில் குஜராத் கட்ச் வளைகுடாவில் முந்த்ரா பகுதியில் துறைமுகம் விரிவாக்கப்பணிக்காக அதானி குழுமத்திற்கு அனுமதி வழங்கியது . ஏறத்தாழ 14 ஆயிரம் ஏக்கர் நிலம் அதானி குழுமத்திற்கு ஒதுக்கப்பட்டது. ஒரு சதுர மீட்டர் நிலத்திற்கு 1 ரூபாய் முதல் 32 ரூபாய் வரை மட்டுமே வசூலிக்கப்பட்டு நிலம் அளிக்கப்பட்டது.

2005-ம் ஆண்டு, முந்த்ரா கிராமத்தில் கால்நடை மேய்ச்சலுக்காகக் கிராம மக்கள் பயன்படுத்தி வந்த 1,200 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட நிலம் குஜராத் அரசால் கையகப்படுத்தப்பட்டு, அதானி குழுமத்திற்குச் `சிறப்புப் பொருளாதார மண்டலமாக’ அளிக்கப்பட்டது. சிறப்புப் பொருளாதார மண்டலமாக அளிக்கப்படும் நிலங்களில் தொடங்கப்படும் தொழிற்சாலைகளுக்கு வரி விலக்கு, மானிய விலையில் மின்சாரம் முதலான சலுகைகள் உண்டு.

இது மற்ற நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதை விட மிகவும் மலிவானது. டாடா மோட்டார்ஸ் அதன் நானோ கார் ஆலைக்கு 1,110 ஏக்கர் சனந்தில் (அகமதாபாத் அருகே) ஒரு சதுர மீட்டருக்கு 900 ரூபாய்க்கு வழங்கப்பட்டது.

ஃபோர்டு இந்தியா ஒரு சதுர மீட்டருக்கு ரூ. 1,100 செலுத்தியது, இந்தியாவின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, ஹன்சல்பூரில் உள்ள 700 ஏக்கரை ஒரு சதுர மீட்டருக்கு 670 ரூபாய்க்கு வாங்கியது.

ரஹேஜா கார்ப் ஒரு சதுர மீட்டர் நிலம் ரூ 470 க்கு விற்கப்பட்டது, அதே நேரத்தில் டி.சி.எஸ். ஒரு சதுர மீட்டருக்கு 1,100 ரூபாய் மற்றும் டோரண்ட் பவர் ஒரு சதுர மீட்டருக்கு 6,000 ரூபாய்க்கு செலுத்த வேண்டியிருந்தது. அதை போல் எந்த பிரச்சனையும் இல்லாத நிலமும் வழங்கப்பட்டது.

2012-ல் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு, முந்த்ரா திட்டத்தின் போது சுற்றுச்சூழல் மீறல்களுக்காக அதானி குழுமத்தின் மீது UPA அரசாங்கம் 200 கோடி ரூபாய் அபராதம் விதித்ததை பின்னாளில் மோடி அரசாங்கம் இந்த அபராதத்தைத் தள்ளுபடி செய்தது.

ஒரு சதுர மீட்டர் நிலத்தை 1 ரூபாய்க்குப் பெற்ற அதானி, அரசு பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு அதே நிலத்தை, ஒரு சதுர மீட்டர் 600 ரூபாய் என்ற மதிப்பில் வாடகைக்கு அளித்தார். துறைமுகம், சிறப்புப் பொருளாதார மண்டலம் என்று, அதானியின் சொத்து மதிப்பு பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியது.

2012 காலகட்டத்தில் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது இரண்டு முக்கிய குற்றச்சாட்டுகளை முன்வைத்து சிஏஜி ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டது. அது, குஜராத் அரசு பெட்ரோலிய நிறுவனத்திடமிருந்து இயற்கை எரிவாயுவை வெளி சந்தையில் வாங்கி, வாங்கிய விலையை விட குறைந்த விலைக்கு அதானி நிறுவனத்திற்கு விற்றது. இதன் மூலம் அந்நிறுவனம் 70.5 கோடி ரூபாய் லாபமடைந்தது. 2009-12 இடையே ஒப்பந்தபடி குஜராத் அரசு மின் நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய மின்சாரத்தை அதானி மின் நிறுவனம் வழங்காததால் 240 கோடி தண்டம் வசூல் செய்ய வேண்டிய இடத்தில் வெறும் 79.8 கோடி மட்டுமே மோடி அரசு வசூல் செய்தது.

2009 – 10-ம் ஆண்டில் மட்டும் அதானி தனித் தனி தொழிலுக்கு மொத்தம் 11 கம்பெனிகளைத் தொடங்கினார்.

குஜராத்தில் 2012-ம் ஆண்டு நாட்டிலேயே மிகப்பெரிய சோலார் மின் உற்பத்தியை அதானி தொடங்கினார்.

“குஜராத்தில் மோடி ஆண்ட 2002-2014 காலகட்டத்தில் மட்டும் ரூ. 3,000 கோடியிலிருந்து ரூ. 40,000 கோடியாக அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு உயர்ந்தது.

அதானியின் தொழில் குஜராத்திற்கு வெளியே, பல மாநிலங்களில் கால் பதிக்கத் தொடங்கியது. இந்தச் சூழலில், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தேர்தல் பிரசாரங்களுக்கு, அதானி குழும விமானங்களில் பயணித்து வாக்கு சேகரித்தார்.

2014-ம் ஆண்டு, மே 16 அன்று, பி.ஜே.பியின் வெற்றி அறிவிக்கப்பட்டு, மோடி பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே நாளில், அதானி குழுமம் ஒடிசாவின் தம்ரா துறைமுகத்தை 6,000 கோடி ரூபாய்க்கு வாங்குவதாகப் பெருமையாக அறிவித்தது.

மோடியும் பிரதமர் வேட்பாளரில் இருந்து பிரதமராக பதவி ஏற்றார். அதானியும் உள்ளூர் முதலாளியிலிருந்து உலக கார்ப்பரேட்டாக உருவெடுத்தார்.

(தொடரும்)

நாட்டை நாசமாக்கும் கூட்டாளிகள் – 3- க. இரா. தமிழரசன்

” 1995-ல் மூன்றாவது கட்டத்தை எட்டினேன். அதற்கு முதல் காரணம் அப்போதைய குஜராத் மாநில முதல்வர் கேஷூபாய் படேல். அவர் தொலைநோக்கு பார்வை கொண்ட வளர்ச்சி சார்ந்த கொள்கைகளை கொண்டு வந்தார். அதில் கடலோர வளர்ச்சிகளும் அடங்கும். அதுதான் முதல் துறைமுகத்தை நிறுவ தூண்டியது ” – அதானி

1991 இல் புதிய பொருளாதாரக் கொள்கை விளைவாக துறைமுகங்கள் தனியார் கைகளுக்கு போய் சேர தொடங்கியது.

1994ல் குஜராத் அரசு புதிய துறைமுகங்களை அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக நிர்வகிக்க முடிவு செய்தது. முந்த்ரா துறைமுகத்தின் பெயர் உட்பட 10 துறைமுகங்களின் பட்டியலை அது முடிவு செய்தது.

முந்த்ரா துறைமுகத்தின் பொருளாதார முக்கியத்துவம் காரணமாக, குஜராத் அரசு முந்த்ரா துறைமுகத்தின் நிர்வாக அவுட்சோர்சிங்கை அறிவித்தது, மேலும் 1995 இல் ஒப்பந்தம் அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்டது. முதல் கப்பல் 1998 இல் முந்த்ரா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது.

அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக 71 விழுக்காடு செயல்பாட்டு வரம்பை எட்டியுள்ளன. ஹசிரா துறைமுகத்தில் எல்என்ஜி அல்லாத முனையத்தை உருவாக்க அதானி குழுமத்தை சிட்டி பேங்க் தேர்வு செய்தது. 2009ல் டெண்டர் எடுக்கப்பட்டு, 2010ல் கட்டுமானம் துவங்கியது. துறைமுகம் 2012ல் செயல்பட துவங்கியது.

தற்போது, அதானி நிறுவனம் ஆந்திராவிலுள்ள கிருஷ்ணபட்டிணம் துறைமுகத்தின் 25 சதவீத பங்குகளை ரூபாய் 2,800 கோடிக்கு வாங்கியுள்ளது. இதனால் அத்துறைமுகத்தில் அதானி நிறுவன பங்குகள் 75 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.

இந்தியாவின் மிகப்பெரிய துறைமுக நிறுவனமான அதானி நிறுவனத்தின் வசம், குஜராத்தில் முந்த்ரா, தஹேஜ், டுனா மற்றும் ஹசிரா, ஒடிசாவில் தம்ரா, கோவாவில் மோர்முகாவோ, ஆந்திராவில் விசாகப்பட்டினம் மற்றும் கிருஷ்ணபட்டணம், மகாராஷ்டிராவில் டிகி மற்றும் சென்னையில் கட்டுப்பள்ளி மற்றும் எண்ணூர் ஆகிய 12 துறைமுகங்கள் உள்ளன. இவை நாட்டின் மொத்த துறைமுகத் திறனில் 24 சதவீதத்தைக் கொண்டுள்ளன.

துறைமுகங்கள் வெறும் சரக்கு ஏற்றுமதி இறக்குமதி செய்யும் இடமாக மட்டும் அது இருக்கவில்லை. போதை பொருளின் மையமாக இருக்கிறது.

குஜராத்தில், கடந்த 2021, செப்டம்பர் 16ஆம் தேதி, பெருந்தொழிலதிபர் அதானிக்கு சொந்தமான முந்த்ரா துறைமுகத்தில், சுமார் 21,000 கோடி ரூபாய் மதிப்பிலான 3,000 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பிடிபட்டது. இந்திய வரலாற்றிலேயே ஒரே சம்பவத்தில் இவ்வளவு பெரிய அளவில் போதைப்பொருள் பிடிபட்டிருப்பது இதுவே முதன்முறையாகும்

அதேபோல், கடந்த 2022, மே மாதத்தில் அதே அதானியின் முந்த்ரா துறைமுகத்தில், ரூ.500 கோடி மதிப்புள்ள 56 கிலோ எடைகொண்ட கொக்கைன் போதைப் பொருளை வருவாய் புலனாய்வு பிரிவினர் பறிமுதல் செய்தனர். அடுத்ததாக, கடந்த ஜூலை 12ஆம் தேதி, ரூ.350 கோடி மதிப்பிலான 70 கிலோ ஹெராயின் போதைப்பொருளை அதே முந்த்ரா துறைமுகத்தில் கைப்பற்றினார்கள். .

கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி, குஜராத்தின் ஹட்ச் மாவட்டத்திலுள்ள பழமையான துறைமுகமான கண்ட்லா துறைமுகத்தில், ரூ.1,439 கோடி சர்வதேச சந்தை மதிப்புள்ள 205.6 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டது.

2021, நவம்பர் மாதத்தில் குஜராத்தின் தேவபூமி துவாரகா மாவட்டத்தில் மூன்று நபர்களிடமிருந்து ரூ.313.25 கோடி மதிப்புள்ள ஹெராயின் மற்றும் மெத்தம்பேட்டமைன் போதைப் பொருட்களை போலீசார் கைப்பற்றினர். கடந்த ஜூன் மாதம், ஒடிசாவிலிருந்து டிரக்கில் கடத்தி வரப்பட்ட ரூ.1.45 கோடி மதிப்பிலான 724 கிலோ கஞ்சாவை குஜராத் மாநிலம் சூரத் நகரில் வைத்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைப்பற்றினர்.

போதைப்பொருள் கடத்தல் தொழிலின் மையப்புள்ளியாக மாறியிருக்கிறது குஜராத். கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் அங்கே 2.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள்கள் பிடிபட்டிருக்கின்றன.

ஆப்கன் உள்ளிட்ட பிற நாடுகளிலிருந்து குஜராத்துக்குக் கடத்திவரப்படும் போதைப்பொருள்கள் கைப்பற்றப்படும் முக்கிய இடமாக இருப்பது அதானியின் முந்த்ரா துறைமுகம் தான்.
இது குஜராத்தின் பட்ஜெட்டைவிட அதிகம்.

சி.பி.ஐ, அமலாக்கப்பிரிவு, மத்திய போதைப்பொருள் தடுப்பு ஏஜென்சிகள் கண்டும் காணாமல் இருக்கின்றன.

குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஸ் சங்க்வி தொகுதியில் மட்டும் மூன்று போதை பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சம்பாதிக்கும் அதானியின் சொத்துகள் எல்லாம் கணக்கில் வருவதில்லை.

ஏனென்றால் இந்திய பிரதமர் மோடியை நட்பாய் பெற்றவருக்கு இது கூட கிடைக்கவில்லை என்றால் அது நியாயமாகாது அல்லவா ?

(தொடரும்)

நாட்டை நாசமாக்கும் கூட்டாளிகள் – 2 – க.இரா. தமிழரசன்

1988ஆம் ஆண்டு தன் சகோதரர்களில் ஒருவரின் பிளாஸ்டிக் ஆலையை நிர்வகிக்க குஜராத் வந்து, தனக்கென சொந்தமாக அதானி எண்டர்பிரைசஸ் என்ற ஒரு வணிக நிறுவனத்தைத் தொடங்கினார். ஆனால், இன்று

இந்தியாவிலேயே சுமார் 300 கிலோமீட்டர் நீளத்துக்கு தனியார் ரயில் பாதைகளைக் கொண்டிருக்கும் ஒரே நிறுவனம் அதானியுடையது தான்.

அதே போல இந்தியாவிலேயே மிகப் பெரிய தனியார் அனல் மின் நிலையம் வைத்திருக்கும் நிறுவனமும் அதானி குழுமம்தான்.

இந்தியாவிலேயே அதிக அளவில் சோலார் மின்சாரத்தை தயாரிக்கும் நிறுவனங்களில், அதானி க்ரீன் நிறுவனம்தான் முன்னிலையில் உள்ளது.

2013-ம் ஆண்டுவரை குஜராத் மாநிலத்தை மையமாகக் கொண்டே செயல்பட்டு வந்த அதானி, இன்று இந்தியா முழுவதிலும் 22 மாநிலங்களில் தங்கள் ஆக்டோபஸ் கால்களை பரப்பியுள்ளது.

இந்தியாவின் இரண்டாவது பெரிய சிமென்ட் நிறுவனத்தை நடத்துகிறார்.

நாட்டின் மிகப்பெரிய துறைமுகமான முந்த்ரா உட்பட 13 துறைமுகங்கள் மற்றும் ஏழு விமான நிலையங்களை நடத்துகிறார். மேலும், டெல்லிக்கும் மும்பைக்கும் இடையே இந்தியாவின் மிக நீளமான விரைவுச் சாலையை உருவாக்கி வருகிறார்.

இன்றைய தேதியில் இந்தியாவின் சுமார் 260 நகரங்களில் அதானி குழுமம், தனது ஏதோவொரு தொழில் நிறுவனத்தை இயக்கி வருகின்றது. நிலக்கரி துரப்பணம் மற்றும் வணிகம், துறைமுகங்கள், மின்சாரம் மற்றும் எரிவாயு உற்பத்தி மற்றும் பகிர்மானம், சமையல் எண்ணெய் உள்ளிட்ட விவசாயப் பொருட்கள், கட்டுமானத்துறை, நிதி நிறுவனங்கள், பொதுப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் துறைக்கான ஆயுத உற்பத்தி என அதானி குழுமம் கடந்த வெகுசில ஆண்டுகளிலேயே தனது ஆக்டோபஸ் கரங்களால் இந்தியாவை விழுங்கிக் கொண்டிருக்கிறது.

அதானியின் வளர்ச்சியை வெறும் மோடியுடன் மட்டும் நாம் பார்த்து விடக்கூடாது. அதானியின் வளர்ச்சியை அரசின் பொருளாதாரக் கொள்கையோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அதை அதானின் நேர்காணலோடு ஒப்பிட்டு புரிந்து கொள்ளலாம்

” எனது தொழில் பயணத்தை மொத்தம் நான்கு கட்டங்களாக பிரிக்கலாம். நான் சொல்வது அனைவருக்கும் கொஞ்சம் சர்ப்ரைஸ் ஆக இருக்கலாம். ஆனால், இதுதான் நிஜம். எனது ஏற்றுமதி தொழில் வளர்ச்சிக்கு ராஜீவ் காந்தி ஆட்சியின்போது கொண்டுவரப்பட்ட கொள்கைகள் முக்கிய காரணமாக இருந்தன.

1991-ல் அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ் மற்றும் மன்மோகன் சிங் கொண்டு வந்த பொருளாதார சீர்திருத்தங்கள் மூலம் தொழில் சார்ந்தவர்கள் பலன் அடைந்தனர். அதில் நானும் ஒருவன்.” இன்று தனியார் சேனலுக்கு கொடுக்கப்பட்ட பேட்டி ஒன்றில் இப்படி அதானி தெரிவித்துள்ளார்.

அதானி சொல்லும் அரசின் கொள்கைகள் என்ன? அதனால் அதானி உள்ளிட்ட முதலாளிகள் அடைந்த லாபம் என்ன ?

1947 இல் இருந்து 1991 வரைக்கும் பின்பற்றப்பட்டு வந்த இந்திய அரசின் பொருளாதாரக் கொள்கையில்
( சோசலிச பாணியில் நம் இந்தியப் பொருளாதாரம் செல்ல வேண்டும் என்று விரும்பினார் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு)1991 க்கு பிறகு பெரும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது.

அந்த மாற்றம் தான் அதானி உள்ளிட்ட பெரும் முதலாளிகளுக்கு கொள்ளை லாபத்தை ஈட்டி தந்தது.

1991 முதல் 1996 வரை மத்தியில் ஆட்சி புரிந்த திரு பி. வி. நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவை புதிய பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்த ஆரம்பித்தது. அதை முன் நின்று நடத்தியவர் அப்போது நிதி அமைச்சராக பணி புரிந்த மன்மோகன் சிங். .

இந்திய மற்றும் வெளிநாட்டு முதலாளிகள் மீதான கட்டுப்பாடுகளை முற்றிலும் நீக்கி அவர்கள் தங்கு தடையின்றி இந்தியாவிற்குள் தொழில் தொடங்குவதற்கு ஊக்குவிப்பதும், பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை/அல்லது பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்பதும், அரசின் பொறுப்பு என்று கருதப்படும் கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளைத் தனியாரிடம் ஒப்படைத்து, லாபத்தின் அடிப்படையில் அவற்றைச் செயல்படுத்துவதும் இதன் அடிப்படை.

நிதி வடிவில் மூலதனம் நாட்டுக்குள்ளே வருவதையும் அதன் விருப்பப்படி நாட்டை விட்டு வெளியே செல்வதையும் தங்கு தடையில்லாமல் அனுமதிப்பதை உறுதி செய்வது தான் இந்தக் கொள்கை வடிவம்.

புதிய பொருளாதாரக் கொள்கை தனியார்மயம் , தாராளமயம் உலகமயம் என மூன்று வடிவங்களில் செயல்படுத்தப்பட்டது.

தனியார் நிறுவனங்களுக்கு பொதுத்துறை பிரிவுகளின் பங்குகள் விற்பனை செய்யப்பட்டது.

பொதுத்துறை உரிமைகளை தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.

அனைத்து வங்கிகளாலும் கடன் அள்ளி வழங்கப்பட்டது.

இந்திய தொழில்கள் மூலப்பொருட்கள் மற்றும் மூலதன பொருட்களை இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது.

அரசு கட்டுப்பாடுகள் ஏதுமின்றி தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது.

பன்னாட்டு நிறுவனங்களுக்கு எவ்வித கட்டுப்பாடும் இன்றி இந்திய சந்தை திறந்து விடப்பட்டது.

எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் எல்லாத் துறைகளிலும் பன்னாட்டு நிறுவனங்கள் இறங்குவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.

குறிப்பாக, 1996 ஆம் ஆண்டில் நிலக்கரியை அடிப்படையாகக் கொண்ட மின் திட்டங்கள் நீர்மின் திட்டங்கள் மரபுசாரா ஆற்றல் மூலாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட திட்டங்கள் ஆகியவற்றில் நூறு விழுக்காடு அந்நிய முதலீட்டுக்கு உடன் ஒப்புதல் வழங்குவது என ஆற்றலுக்கான அமைச்சகம் முடிவு செய்தது.

1996 அக்டோபரில் துறைமுகத்துறையில் தனியார் முதலீட்டுக்கு அரசாங்கம் அனுமதித்தது 74% அந்நிய முதலீட்டுக்கு உடனடியாக அனுமதி வழங்கப்பட்டது.

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் பட்டியல் தயார் செய்யப்பட்டது.

சுரங்கத் தொழில்களிலும் தனியார் முதலாளிகள் ஈடுபட வழிவகை செய்யப்பட்டது. இப்படி எல்லா துறைகளும் நாட்டின் பாதுகாப்பு சார்ந்த 18 துறைகள் தவிர்த்து, அனைத்தும் தனியார் முதலாளிகளுக்குத் திறந்து விடப்பட்டது.

இந்தியப் பெருமுதலாளிகளின் சொத்துகள் பல மடங்கு உயரத் தொடங்கின. டாட்டா குழுமத்தின் சொத்து 1990-ல் ரூ.10,922 கோடி. 2012-13-ல் இது ரூ.5,83,554 கோடியாக உயர்ந்தது. இதேபோல, அம்பானி குழுமத்தின் சொத்துகள் ரூ.3167 கோடியிலிருந்து ரூ.5,00,000 கோடியாக உயர்ந்தது.

முதன் முதலில் பட்டியலிட்ட அதானி எண்டர்பிரைசஸ் நிறுவன பங்கின் விலை கடந்த 1994-ல் 150 ரூபாயாக இருந்தது, கடந்த மார்ச் 2020 நிலவரப்படி 75,000 ரூபாயாக இருக்கிறது.

அதானியின் குடும்பம் உலக கோடிஸ்வரர்களின் பட்டியலுக்கு வந்து சேர்த்தது. அதே நேரம், ஏழை, பணக்காரர்களிடம் மிகப் பெரிய இடைவெளியை தாராளமயமாக்கல் அதிகமாக்கியது.

(தொடரும்)

நாட்டைத் நாசமாக்கும் கூட்டாளிகள் – 1- க.இரா. தமிழரசன்

அமெரிக்காவின் பிரபல ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ” அதானி குழுமம் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு தமது பங்கு விலைகளை மிக அதிக அளவுக்கு விலை ஏற்றி உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

பல்வேறு நாடுகளிலிருந்து போலியாக கம்பெனிகளைத் தோற்றுவித்து அதன் பங்குகளை விலை ஏற்றியதாகப் பல்வேறு சான்றுகளை அந்த ஆய்வறிக்கையில் வெளியிட்டுள்ளது.

அதானி குழுமத்தில் பெரும்பாலான பங்குகள் அந்த நிறுவனத்தின் குடும்பத்தைச் சார்ந்த நபர்களிடம் மட்டும் இருப்பதாகவும் மேலும் , வரவு செலவு அறிக்கையில் மோசடி, வரி ஏய்ப்பு, மோசடியாக பண பரிமாற்றம், போலியான பெயரில் நிறுவனங்கள், உறவினர்களை பயன்படுத்தி போலியான பரிவர்த்தனை அறிக்கை” என பல குற்றச்சாட்டுகளை, அதானி குழுமத்தின் மீது முன்வைத்துள்ளது .

இந்த நிலையில் ஹிண்டன் பர்க் அறிக்கை மூலம் புதன்கிழமை ஒரு நாள் வர்த்தகத்தில் மட்டும் சுமார் 55 ஆயிரம் கோடி ரூபாய் சந்தை மதிப்பீட்டை அதானி குழுமம் இழந்து முதலீட்டாளர்களுக்குப் ( பெரும் பணக்காரர்கள் மட்டும் என்று நினைத்து விட வேண்டாம், நடுத்தர வர்க்கமும்) பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

அதானி குழுமமோ இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. இது தவறான தகவல். இது எங்களின் வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தும் விதமாக வந்த அறிக்கை. எங்களின் வீழ்ச்சியில் ஹிண்டர்ன்பர்க் பலனடைய பார்க்கின்றது. முதலீட்டாளர்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை குறைக்க பார்க்கிறது என்று அதானி சார்பில் கூறப்பட்டுள்ளது.

உலக பணக்காரர்கள் வரிசையில் மூன்றாவது இடம்பிடித்த அதானி தற்போதைய ஹிண்டர்ன்பர்க் அறிக்கையால் ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

மோடி குஜராத் முதல்வரான பின்புதான், அதானியின் தொழிலும் வணிகமும் உயரப் பறக்கத் தொடங்கிது.குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தை நிர்வகிக்கும் ஒப்பந்தத்தைப் பெற்றபின்பு தான் அவருடைய வளர்ச்சி வேகம் பிடித்தது.

மோடியின் நெருக்கத்தால் மட்டுமே அதானி குழுமம் மீண்டும் மீண்டும் அரசாங்கத்தின் மூலம் பெரும் லாபத்தை கடனாகவும், கடன் தள்ளுபடி மூலமும் பெற்று வருகிறது. எனவே இந்த மோசடியை வெறும் அதானி யோடு மட்டும் பார்க்க கூடாது. ஹிண்டன் பர்க் முன் வைக்கும் மோசடியில் மோடியின் பங்கு முக்கியமானது.

முதலாளிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையான கூட்டு எல்லோரும் அறிந்தது தான். காங்கிரசுக்கும் அதானிக்கும் கூட கூட்டு உண்டு தான். ஆனால் அதானி – மோடியின் கூட்டு அதற்கும் மேலானது.

குஜராத்தில் 2012-ம் ஆண்டு நாட்டிலேயே மிகப்பெரிய சோலார் மின் உற்பத்தியை அதானி தொடங்கி கார்ப்பரேட் உலகில் ஆழமாகக் கால்பதித்தார். நாட்டில் எந்த கம்பெனி விற்பனைக்கு வந்தாலும் அதை அதானி விலைக்கு வாங்க ஆரம்பித்தார்.

2014-ம் ஆண்டு அதானியின் சொத்து 7.1 பில்லியன் டாலராக இருந்தது.

2020-ம் ஆண்டு அதானியின் சொத்து 10 பில்லியன் டாலராக உயர்ந்தது. ஆனால், பங்குச் சந்தையில் நடந்த கிடுகிடு வளர்ச்சி காரணமாக அவரின் சொத்து 2022-ம் ஆண்டு 152 பில்லியன் டாலர் அளவுக்கு அதிகரித்து இருக்கிறது. இந்த வளர்ச்சியை தான் மோசடி என்று ஹிட்டன் பர்க் குற்றம் சாட்டுகிறது.

ஹிட்டன் பர்க் நிறுவனம் சரியானது என்று நாம் கூறவில்லை. ஹிட்டன் பர்க்கின் உள்நோக்கம் குறித்து நாம் கவலை கொள்ளவில்லை. அவர்கள் முன் வைத்துள்ள இந்த குற்றச்சாட்டின் தன்மையை நம்முடைய கண்ணோட்டத்தில் புரிந்து கொண்டு இந்தக் கூட்டணி நாட்டை எப்படி திவால் ஆக்கிக் கொண்டிருக்கிறது என்பதை நாம் விரிவாக ஆய்வு செய்ய வேண்டும்.

அதானியின் வளர்ச்சியை வெறும் மோடியோடு மட்டும் நாம் பார்க்கவில்லை. தனியார்மயம், தாராளமயம், உலகமயமாக்களின் விளைவு தான் அதானியின் வளர்ச்சி. 1991 களில் காங்கிரஸ் தொடங்கி வைத்த உலகமயமாக்களின் போதே அதானியின் வளர்ச்சியும் , அம்பானி வளர்ச்சியும் தொடங்கிவிட்டது.

மோடி குஜராத் முதல்வராக இருந்த போதும் இந்தியாவின் பிரதமராக உயர்ந்த பின்பும் அதானி எப்படி நடுவன் அரசைக் கைக்குள் வைத்துக்கொண்டு வங்கிகளில் கடன் பெற்று , அரசின் கொள்கையை தனக்கு சாதகமாக மாற்றி உலகக் கோடீஸ்வரராக மாறினார் என்பதும் அதன் மூலம் எப்படி இந்தியா திவாலாகி கொண்டிருக்கிறது என்பதையும் ,ஏழை எளிய மக்கள் கடும் நெருக்கடி சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் பழங்குடிகள் காடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நாம் விரிவாக பார்க்கலாம்.

க. இரா.தமிழரசன்

(தொடரும்)

கூகுள் CEO சுந்தர்பிச்சை- ஒரு முதலாளித்துவ அடியாள்- பிரபுராம்

 கொரோனா லாக்டவுன் மற்றும் அதற்கு பிறகான காலங்களில் உலக முழுவதும் வளர்ச்சி நிலையில் சென்ற தகவல் தொழிநுட்ப நிறுவனங்களில் பல்வேறு வேலைவாய்ப்புகள்  உருவாகின. புதுப்புது தொழில் நுட்பங்கள் வருகை,  போட்டி நிறுவனங்கள் உருவாகுதல் போன்ற நிகழ்வுகள் பன்னாட்டு நிறுவனஙங்களிடையே போட்டியை அதிகப்படுத்தியுள்ளது. 

ஒரு நிறுவனம் தொடர்ந்து சந்தையில் இருப்பதற்கு நிபந்தனை அதன் உற்பத்தி செலவுகளை குறைப்பது மற்றும் புதிய தொழிநுட்பங்களை செயல்படுத்துவது .ஒவ்வொரு நிறுவனமும் அதன் போட்டி நிறுவனத்தை வீழ்த்த அல்லது போட்டியில் நீடிக்க இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் . இது அனைத்து துறைகளுக்கும் பொருந்தும். நாம் வாழும் இந்த முதலாளித்துவ சமூகத்தின் உற்பத்தி நடைமுறையில் இதை பல துறைகளில் காணலாம். தற்போது இந்த நடவடிக்கை தகவல் தொழில்நுட்ப துறையில் தீவிரம் அடைந்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் தலைவர் சுந்தர்பிச்சை தனது நிறுவனத்தின் ஊழியர்கள் 12,000 பேரை வேலை நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளார். சுந்தர் பிச்சை இந்தியர், தமிழர் என மக்கள் கொண்டாடலாம். ஆனால் அவர் முதலாளித்துவ அடியாள் .முதலாளித்துவத்திற்கு லாபம் ,அதிக லாபம் இது கூடிகொண்டே செல்ல வேண்டும் என்பது மட்டும் அதன் நோக்கமாக இருக்கும்.
அமேசான் நிறுவனம் 18,000 , மைக்ரோசாப்ட் நிறுவனம் 10,000 தொழிலாளர்களை நீக்கியது.
கடந்த ஆண்டு டிவிட்டர் நிறுவனம் 3000 தொழிலாளர்களை நீக்கியது. இது விப்ரோ, நெட்பிளக்ஸ், Spotify, ), என இதன் பட்டியலில் நீண்டுகொண்ட செல்கிறது.

இந்தியா போன்ற நாடுகளில் குறைந்த கூலிக்கு தொழிலாளர்கள் கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் கிடைக்கின்றனர். ஏற்கனவே முதலாளித்துவ கல்வி அதிக அளவில் தொழிலாளர்களை உற்பத்தி செய்து வைத்திருக்கிறது. “நல்லா படிச்சு நல்லா சம்பாதிக்கனும்” என்ற எண்ணத்தை உருவாக்கி அவர்களை ஏக்கத்துடன் இருத்தி வைத்துள்ளது.

இது மேலும் உதிரி பாட்டாளி வர்க்கங்களை உருவாக்கி கொண்டே செல்கிறது. இந்த உதிரி பாட்டாளி வர்க்கங்கள் அமைப்பாக்கப்படாத தொழிலாளர்களாக மிகப்பெரிய அளவில் உள்ளனர் . இவர்கள் மிகவும் குறைந்த கூலிக்கு வேலைபார்க்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இது அமைப்பாக்கபட்ட நிரந்தர தொழிலாளர்களையும் நெருக்கடிக்கு உள்ளாக்குகிறது. இன்றைய சூழலில் நிரந்தர தொழிலாளர்கள் குறைவான எண்ணிக்கையில் உள்ள நிலையில் சிதறி கிடக்கும் தொழிற்சங்க அமைப்புகள் , தொழிலாளர் சட்ட திருத்தங்கள் செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில் முதலாளிகள் தங்களது லாபங்களை அதிகப்படுத்த தொழிலாளர்கள் எண்ணிக்கையை கணிசமாக குறைத்து வருகின்றனர்.

சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப தொழிலாளர்களின் கூலியும் மாற்றங்களை சந்திக்கிறது. எந்தவித முன் அறிவிப்பும் இல்லாத வேலை நீக்கங்கள் தகவல் தொழிநுட்ப துறைகளுக்கு புதிதல்ல. மேலும் தொழிலாளர்கள் துணிவாக போராட முன்வருவதில்லை. தகவல்தொழில்நுட்பத் துறையில் குறைந்த அளவு தொழிலாளர்களே தொழிற்சங்க உரிமைகளுக்காக போராடி வருகின்றனர்.

இது அடுத்தடுத்து மற்ற எந்தெந்த துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை கவனத்தில் கொண்டு தொழிலாளர்கள் தங்களை அமைப்பு ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பலப்படுத்தி கொள்ள வேண்டும் . இந்த முரண்பாடுகள் முற்றும் போது முதலாளித்துவ அமைப்புகளும் நெருக்கடிகளை சந்திக்கும் என்பது இயங்கியல் விதி. அதை எதிர்கொள்ள தொழிலாளர் மக்கள் திரள் அமைப்புகள் நம்மிடையே வலுவாக உள்ளாதா என சிந்திக்க வேண்டும்.

“உலகம் முழுவதும் முதலாளித்துவ அமைப்பு வெற்றி பெற்ற விட்டது ஆனால் இந்த வெற்றி முதலாளித்துவத்தின் மீது தொழிலாளர் காணப் போகும் வெற்றியின் முன்னறிவிப்பே” ஆகும் என
லெனின் தெளிவாக வரையறுத்துள்ளார்.

அசுரபலம் கொண்ட நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் இருந்து தொழிலாளர்களை நீக்கும்போது பெரும்திரளான தொழிற்சங்க அமைப்பு இருந்தால் மட்டுமே நாம் எதிர்த்து நின்று வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது. ஆகையால் அமைப்பாகுங்கள். பெருநிறுவனங்களின் அடாவடி நடவடிக்கையை எதிர்த்து போராட அணியமாகுங்கள். போராடாமலே உங்கள் தோல்வியை ஒத்துக்கொள்ளாதீர்கள். போராடினால் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது.

பிரபுராம்