Sunday, April 28, 2024 04:04 pm

Subscribe to our YouTube Channel

278,000SubscribersSubscribe
Homeஅரசியல்நீதிமன்றங்களுக்குள் அரசியலை நுழைத்து பாஜக-விற்கு உதவும் நீதிபதிகள்- ஷாருக் ஆலம்

நீதிமன்றங்களுக்குள் அரசியலை நுழைத்து பாஜக-விற்கு உதவும் நீதிபதிகள்- ஷாருக் ஆலம்

தி வயர் இணையதளத்தில் வெளியிடப்பட்ட இந்த கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்தவர் இலக்கியா.

அரசியல் செயல்பாட்டை குற்ற நடவடிக்கையாக்குவதன் மூலம் நீதிமன்றங்களுக்குள் அரசியலை நுழைக்கும் அரசின் முயற்சிக்கு நீதிபதிகள் உதவி செய்துவருகின்றனர்.

அரசியல் செயற்பாட்டாளர்களின் கைது நடவடிக்கையை அரசு கட்டமைப்பின் அரசியல் நடவடிக்கையாக நீதிபதிகள் கருத வேண்டும். அவ்வாறு கருதி, நீதிமன்றங்களுக்குள் அரசியலைக் கொண்டு வர வேண்டாம் என அரசிடம் அறிவுறுத்த வேண்டும். மாறாக, எதிர் மனுதாரருக்கான அறிவுறுத்தலாக அது இருக்கக் கூடாது.

‘வழக்குகள் அனைத்தும் சட்டம் சார்ந்ததாக இருக்க வேண்டும். அதில் அரசியல் இருக்கக்கூடாது’ என்பது நீதிமன்றங்களின் பொதுவான விதி.
ஆனால், பல கைது சந்தர்ப்பங்களில் அரசின் வழக்குத் தொடுக்கும் அணுகுமுறை எந்த விதிகளுக்குள்ளும் கட்டுப்படாமல் இருக்கிறது. ஒரு பக்கம், ‘வேட்கையை விதைத்து வன்முறையை தூண்டிவிடுகிறார்கள்’ என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள அரசியல் செயற்பாட்டாளர்களான ஜோதி ஜக்டப் மற்றும் உமர் காலித்தின் பிணையை கடுமையாக எதிர்க்கிறது.
அதைப்போலவே, பாம்பே உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பேராசிரியர் சாய்பாபவின் பிணை ஆணையை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் சனிக்கிழமை விசாரனை கேட்டு வாங்கியது ஒன்றிய அரசு. அவர் தற்காலிகமாகக் கூட வெளியில் வரக் கூடாது என்று கங்கணம் கட்டி செயல்படுகிறது. ஜனநாயக வழியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அறிவுப்பூர்வமாக விமர்சிக்கிறார் என்பதே அவர் மீதான அரசின் ஒரே குற்றச்சாட்டு.
இன்னொரு பக்கம், வெறுப்பு அரசியலையும் வன்முறையையும் தூண்டிவிட்டு, சாதாரண மக்களைக் கொல்லும் குற்றவாளிகளை இந்த அரசு கண்டுகொள்வதே இல்லை. சில அரசியல் ‘வன்புணர்வாளர்களையும்’ கொலைகாரர்களையும் குற்றத்திலிருந்து வெகு சுலபமாக விடுவித்ததிலேயே அரசின் தன்னிச்சையான போக்கு வெளிப்படுகிறது.

இந்த முரண்பாடுகளை எப்படிப் புரிந்துகொள்வது?
சட்டம் பயின்று கொண்டிருந்த பொழுது, நான் படித்த ‘அரசியல் தத்துவம்: ஓர் அறிமுகம்’ என்ற சிறு புத்தகம் என் அரசியல் பார்வையை இன்று வரை செதுக்கி வருகிறது. அரசியல் பற்றிய புரிதலின் மையமாக இருப்பதாக இரண்டு கேள்விகளை முன் வைக்கிறது அந்தப் புத்தகம். ஒன்று, யாருக்கு என்ன கிடைக்கிறது? மற்றொன்று, யாருக்கு என்ன கிடைக்க வேண்டுமென்பதை யார் தீர்மானிக்கிறார்கள்?

முதற் கேள்வியை, உரிமைகள் மற்றும் வளங்களைப் பகிர்தல் என்ற கோணத்தில் புரிந்து கொள்வோம்: பொருள் வளங்களாக இருக்கும் சுற்றுச்சூழல், கணிமங்களாக இருக்கட்டும் அல்லது கல்வி, சுகாதாரம் போன்றவற்றில் எவையெல்லாம் பொதுச் சொத்தாக/பொது உரிமையாக கருதப்பட்டு அனைவருக்குமானதாக அறிவிக்கப்படவேண்டும்? அல்லது வருமான வரி கட்டுபவர்களுக்கு மட்டும்தான் இவ்வளங்களின் மீதான தார்மீக உரிமையைக் கொடுக்கவேண்டுமா? ஒரு சில சந்தர்ப்பங்களில், பொது சுகாதாரம் ஒரு பொதுச் சொத்தாகக் கருதப்பட்டு அனைவரும் அதன் மீது உரிமை கோரலாம்; அல்லது வேறு சில அரசியல் சந்தர்ப்பங்களில், அத்தகையத் திட்டம் அரசின் பெருந்தன்மையான செயலாகவும், அரசின் புரிதலுக்கு ஏற்றவாறு சில வரைமுறைகளுக்குள் அடங்கும் மக்களுக்கான திட்டமாகவும் அது மாற்றியமைக்கப்படலாம்.

பொருள் வளங்களைப் பற்றிய கேள்விகள் ஒரு புறம் இருக்க, அரசியலிலும் இரண்டு கேள்விகளைக் கேட்க வேண்டியிருக்கிறது:

உரிமைகளும் சுதந்திரமும் எவ்வாறு பகிரப்பட வேண்டும்?
மக்களில் ஒரு பகுதியினருக்கு அதிகமான சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டுமா? கடைசியாக, இப்படித்தான் உரிமைகளும் சுதந்திரமும் பகிரப்பட வேண்டும் என்கிற முடிவு எதன் அடிப்படையில் இருக்க வேண்டும்?

அரசியல் தத்துவத்தைப் பொருத்தவரையில், அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்களே ‘யாருக்கு எது கிடைக்க வேண்டும்?’ என்றும், ‘எவ்வளவு கிடைக்க வேண்டும்?’ என்றும் முடிவு செய்கிறார்கள். சில சமயங்களில், சட்டத்திற்கு பதிலாக அரசியல் அதிகாரமே யாருக்கு எது கிடைக்க வேண்டும் என்பதை முடிவு செய்து, இடஒதுக்கீட்டையும், பாதுகாக்கப்பட வேண்டியவர்களுக்கு சிறப்பு உரிமைகளையும் கொடுக்கிறது. ஆனால் வேறு சில சமயங்களில், ‘பெரும்பான்மை உணர்வு’ என்பதற்காகவோ, பொருளாதார காரணங்களுக்காகவோ மாற்றப்படவும் வேண்டியிருக்கிறது.
அதிகாரத்திற்கான போட்டியில் அரசியலும் கலந்துகொண்டு அனைத்தும் எவ்வாறுப் பகிரப்படவேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறது.
1837-ஆம் ஆண்டு சார்ல்ஸ் டிக்கன்ஸ் ஒலிவர் டிவிஸ்ட் என்ற நாலை எழுதினார். அதில் ஆதரவற்ற சிறுவர் இல்லத்தின் எஜமானர் அங்கிருக்கும் சிறுவர்களுக்கு மிகக் குறைந்த அளவிலேயே உணவு பரிமாறிவிட்டு மீதி இருக்கும் பெரும் பகுதியை தனக்கு எடுத்துக் கொள்வார். ஒரு கட்டத்திற்கு மேல் அதை பொறுத்துக் கொள்ள முடியாமல், தனிமையிலும் விரக்தியிலும், பசியிலும் வாடியிருந்த ஒலிவர் டிவிஸ்ட், தன் எஜமானனிடம் சென்று “தயவுகூர்ந்து எனக்கு கொஞ்சம் அதிகமாக உணவு கொடுக்க முடியுமா, ஐயா?” என்று கேட்பான்.
அதைக் கேட்டவுடன் எஜமானன், கரண்டியால் ஒலிவரின் தலையை ஓங்கி அடித்து, சுவருடன் அவனைக் கட்டிப் போட்டு, அதை வலுப்படுத்த கோபத்தில் கத்துகிறான்.
“நன்றி கெட்டவன் நீ!” என்று சீறுகிறான்.
உடனே அந்த இல்லத்தின் மேற்பார்வையாலர்கள் ஒன்று கூடி மிகவும் தீவிரமாக ஆழ்ந்து பேசுகின்றனர். “என்ன!? இன்னும் அதிகமாக வேண்டும் என்று கேட்டானா?!”
“என்ன ஒரு வில்லத்தனமான புத்தி! அவன் தூக்கிலிடப்பட வேண்டும்!”
ஒலிவர் டிவிஸ்ட் மிகவும் ஆபத்தானவன் என்று அவனுக்கு பட்டம் கட்டி, அவனைத் தனிமை சிறையில் பசியுடனேயே அடைத்தனர்.

ஒலிவரின் கோரிக்கை ஒரு அரசியல் நடவடிக்கை. அதேபோல், அவன் வேண்டுதலுக்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட விரிவான எதிர்வினையும் ஒரு அரசியல் நடவடிக்கையே.

சமமாகப் பங்கிடப் படவேண்டும் என்ற ஒலிவரின் கோரிக்கைக்கு அவர்கள் வெளிப்படுத்திய அதிர்ச்சியும் அச்சமும், அவன் நன்றிகெட்ட குற்றவாளி என்று பட்டம் கட்டப்பட்டதும், அவனுடைய செய்கை மற்றவர்களை தூண்டிவிடும் என்ற குற்றச்சாட்டும், அவனுடைய உறுதிப்பாடு எஜமானனை ஆத்திரமூட்டியதும், கடைசியாக ஒலிவர் சிறையில் அடைக்கப்பட்டதும் என அனைத்துமே எதிர் அரசியல் நடவடிக்கைகளே.

எனவே, அரசியல் என்பது உரிமைகளும் வளங்களும் சமமாகப் பங்கிடப் படவில்லை என்பதைப் புரிந்து, அந்தப் புரிதலை சமூக செயல்பாட்டின் மூலமாக மக்களிடம் பரப்பி அவர்களை அணிதிரட்டுவதாகும். அதேசமயம், சமூக மாற்ற அரசியலைத் தடுத்து, அவநிலையில் எந்த மாற்றமும் நடந்து விடாமல் பார்த்துக் கொள்வதும், சமூக மாற்ற அரசியலை சமூக விரோதம், தேச விரோதம் என்று குற்றம்சாட்டுவதும் ஒருவித அரசியலே.

ஜோதி ஜக்தப்பின் பிணையை மறுத்த ஆணையில் வரும் ஒரு பத்தி இதனை எடுத்துக்காட்டுகிறது:
“கபிர் காலா மன்ச்சின் நபர்கள் அரங்கேற்றிய மேடை நாடகத்தின் நகலை முழுமையாக படித்துவிட்டோம். அதைப்படித்தவுடன் எங்களுக்கு தோன்றியது என்னவென்றால், குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் கபிர் காலா மன்ச்சின் செயற்பாட்டாளர்கள் நடத்திய நாடகம், தீவிரமாகவும், பிறரைத் தூண்டும் வகையிலும், வெறுப்பையும் வேட்கையையும் விதைக்கும் வகையிலும் நிகழ்த்தப்பட்டுள்ளது. ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட அரசாங்கத்தை நகைத்து, அதற்கு எதிராகப் போராடி தூக்கி எறிய வேண்டும் என்ற கோணத்தில் பல்வேறு மறைமுக வார்த்தைகளும், காட்சிகளும் கபிர் காலா மன்ச்சின் உறுப்பினர்களால் அரங்கேற்றப்பட்டுள்ளது. அவற்றில் சிலவற்றை மேல் முறையீட்டாளரின் தகவலுக்காகக் குறிப்பிடுகிறோம். ‘அச்சே தின்’, ‘பசு மூத்திரம்’, ‘மாமிசம் உண்ணாமை’, பிரதமரைக் ‘கைக்குழந்தை’ என்று அழைத்துள்ளது, ‘பிரதமரின் பயணக் குறிப்பு’, ‘ஆர்.எஸ்.எஸ். உடை’, ‘பணமதிப்பிழப்பு’ கொள்கை, ‘சனாதன தர்மம்’, ‘ராமர் கோவில்’ போன்ற வார்த்தைகளும், வாக்கியங்களும் அவர்களின் பாடல்களில், கேள்வி பதில்களில் வெளிப்படையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.”
இந்தத் தீர்ப்பில் வெளிப்பட்டுள்ள உணர்வு ஒலிவரின் கோரிக்கையால் ஆத்திரமடைந்த எஜமானனின் மனநிலையைப் போலவே உள்ளது.

இதன் பின் இருக்கும் அரசியல் வெளிப்படையாகப் புலப்படாது. ஆனால், அரசு கட்டமைப்பு அரசியலுக்கு எதிராக ஆக்கப்பூர்வமாக எதிர்வினையாற்றும் செயல்கள் அனைத்தையும் பித்தலாட்டம் என்பதும், அதற்கு பணம் கொடுத்து தூண்டப்படுகிறது என்றும் கூறுவது அரசியல் தான். அவை குற்ற வழக்குகளாக ஜோடிக்கப்பட்டு நீதிமன்றங்களுக்கு கொண்டு வரப்பட்டாலும் அதில் இருக்கும் ஒரு சார்பு அரசியல் மாறிவிடாது.

மனித வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் அரசியல் நிறைந்திருக்கிறது. தீர்ப்புகளுக்கும் இந்த நிலை பொருந்தும். அவை சில சமயங்களில் வளங்களையும் உரிமைகளையும் சமமாகப் பிரிப்பதை உறுதி செய்யும். அல்லது மாற்றங்களற்ற நிலையே தொடர உதவி செய்யும். வளங்கள் அல்லது உரிமைகளை பங்கிட்டுக் கொடுத்த வழக்குகள்/தீர்ப்புகளுக்கு நிறைய உதாரணங்கள் உள்ளன (இடஒதுக்கீட்டு முறையின் வழி கல்வி மற்றும் வேலைவாய்ப்பு, ஆயுதப் படையில் பெண்களுக்கான நிரந்தர இடம் என சில).

சட்டங்களுக்கே உரிய அரசியல் தன்மையைத் தவிர்த்துப் பார்த்தால், இன்றைய நீதிமன்றங்களுக்குள் ஒரு புது விதமான அரசியல் மொழியை உணர முடிகிறது. எதற்கும் பயப்படாத, யாரைப் பற்றியும் கவலைப்படாத அந்த மொழி, அரசியல் செயல்பாட்டை குற்றச் செயலாக மாற்றுகிறது.

ஒலிவர் டிவிஸ்டில் வரும் நிர்வாகச் சபையின் முடிவைப் போல, சமூக நிலைமையை மாற்றும் அரசியல் அறிவை மக்களிடம் கொண்டு செல்லும் எவராயினும் அவர் மீது வழக்குப் போட்டு அவரைக் குற்றவாளியாக்க வேண்டும் என்ற வாதத்தை எந்த வித வெட்கமும் இல்லாமல் முன்வைக்கிறது அரசு. ஏனென்றால், அத்தகைய அரசியல் செயல்பாடு சமூகத்தைப் பிளந்து மக்களை வன்முறையில் தள்ளும் என்கிறது. எஜமானனை ஆத்திரமூட்டியதற்காக ஒலிவரைத் தனிமைச் சிறையில் அடைத்த சபையைப் போன்றே செயல்படுகிறது இந்த அரசு. சமூக மாற்ற அரசியலை ஒரு குற்றமாகக் கருதி மக்களை ஒடுக்கும் அரசின் அரசியல் மொழியே இது. அதே சமயம், இன்றைய வெறுப்பு அரசியலை ஊக்குவிக்கும் வகையில் நடக்கும் நேரடியான வன்முறைச் சம்பவங்களைக் கண்டுகொள்ளாமல் அடக்கிவாசிக்கிறது இந்த அரசு.

மக்களுக்கான அரசியல் செயல்பாடு சம்பந்தப்பட்ட ஒவ்வொரு வழக்கிலும், முக்கியமான குற்றமாக சொல்லப்படுவது “அவர்களின் அரசியல் பிரச்சாரத்தை வளர்க்க சதி செய்கிறார்கள்” என்பதே. அதாவது, வளங்கள் மற்றும் உரிமைகள் பங்கீட்டில் இருக்கும் பாகுபாட்டின் காரணத்தினால், அவற்றை சமன் செய்வதற்காக மக்களைத் திரட்டும் போது அரசுக்கு சில சங்கடங்கள் ஏற்படுகிறது. அதனால், அரசியல் செயல்பாட்டை ஒரு சதியாகப் பார்க்கிறது அரசு.
அதிகாரம் ஒரு இடத்தில் மட்டும் அதிகமாகக் குவியும் பொழுது, அதை எதிர்த்து போராடுவது குடிமக்களின் அரசியல் கடமை எனக் கொள்ளலாம்.

சமூகத்தில் மாற்று அரசியல் உரையாடலுக்கும் செயல்பாட்டுக்கும் அரசுகள் இடம் கொடுக்கும் பொழுது, சமூகப் பிளவோ வன்முறையோ நிகழாது. ஜனநாயக பண்பாடு கொண்ட சமூகங்கள், எவருக்கும் எந்த ஒன்றையும் மறுப்பதற்கான உரிமையையும், எதிர்ப்பு அரசியல் செய்வதற்கான வாய்ப்பையும் கொடுத்து அதை அச்சமூகத்தின் இயல்பாக மாற்றியுள்ளன.

அதற்கு மாறாக, அனைவரும் சமமாக கருதப்படவேண்டும், உரிமைகளும் வளங்களும் சமமாகப் பங்கிடப்பட வேண்டும் என்ற கருத்தைத் தாங்கி வரும் அரசியல் செயல்பாட்டை, மக்களின் எதிர்ப்பு உணர்வை ஒரு பெரிய ஆபத்து விளைவிக்கும் தீவிரவாதச் செயல் எனப் பார்க்கிறது இந்த அரசு. இவை எதுவும் சட்ட வாதங்கள் கிடையாது; சிறந்த சட்ட நிபுணர்களால் முன்வைக்கப்படும் அரசியல் வாதங்களே.

நீதிமன்றங்கள் சில வழக்குகளில் இத்தகைய குழந்தைத்தனமான வாதங்களை நிராகரித்து எந்தெந்த வழக்குகளில் பிணை வழங்க முடியுமோ அங்கு வழங்கியுள்ளது. ஆனால், அவற்றோடு நில்லாமல், அரசியல் செயற்பாட்டாளர்களின் கைது நடவடிக்கையை அரசு கட்டமைப்பின் அரசியல் நடவடிக்கையாக நீதிபதிகள் கருத வேண்டும். அவ்வாறு கருதி, நீதிமன்றங்களுக்குள் அரசியலைக் கொண்டு வர வேண்டாம் என அரசிடம் அறிவுறுத்த வேண்டும்.

சாருக் ஆலம் – உச்சநீதிமன்ற வழக்கறிஞர்
மொழிபெயர்ப்பு- இலக்கியா

நன்றி- தி வயர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments