Friday, April 19, 2024 12:04 pm

Subscribe to our YouTube Channel

275,000SubscribersSubscribe
Homeஇந்தியாமுதலாளித்துவத்தை வீழ்த்துவோம்- க.இரா. தமிழரசன்

முதலாளித்துவத்தை வீழ்த்துவோம்- க.இரா. தமிழரசன்


நாட்டை நாசமாக்கும் கூட்டாளிகள் – 10

முதலாளித்துவம் தனக்கான சவக்குழியை தானே தோண்டிக் கொள்ளும்- கார்ல் மார்க்ஸ்
நரேந்திர மோடி குசராத் முதல்வராக இருந்து இந்தியாவின் பிரதமர் வேட்பாளராக முன்மொழியப்பட்டு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட போது அவர் அதிகம் உச்சரித்த வார்த்தைகள் “வறுமையை ஒழிப்பேன், வேலையில்லா திண்டாட்டத்தை போக்குவேன், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவேன், கருப்புப் பணத்தை ஒழிப்பேன்” இவைதான்.

மேடைப்பேச்சில் மயங்கி மக்களும் வாக்களித்து மோடியை பிரதமர் ஆக்கினார்கள், ஆனால் இந்தியாவின் இன்றைய நிலைமை என்ன ?

1. உலக அளவில் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகம் உள்ள நாடுகள், அதை சரி செய்ய முடியாமல் தவிக்கும் நிலை குறித்து நியூ ஆக்ஸ்பாம் நிறுவனம் கள ஆய்வு நடத்தியது.  இந்த ஆய்வில் எடுத்துக் கொண்ட  152 நாடுகளில் இந்தியா 132 வது இடத்தில் உள்ளது.

2. சர்வதேச அளவில் உணவுப் பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து வெளியிடப்பட்ட உலகப் பட்டினிக் குறியீட்டுப் பட்டியலில் ( 121 நாடுகள் அடங்கிய பட்டியலில்) 107-வது இடத்தை இந்தியா பிடித்திருக்கிறது. பாகிஸ்தான் (99), இலங்கை (64) வங்கதேசம் (84), நேபாளம் (81), மியான்மர் (71) போன்ற பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகள் கூட இந்த குறியீட்டில் இந்தியாவை விட முன்னணியில் இருக்கின்றன.

3. இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (சிஎம்ஐஇ) சார்பில் வேலைவாய்ப்பின்மை தொடர்பான விபரங்கள் 2021  டிசம்பரில் வெளியிடப்பட்டது. அதன்படி 2021 டிசம்பரில் இந்தியாவில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 5.2 கோடி.  2020 டிசம்பரில் 3.87 கோடியாக இருந்த மொத்த வேலையற்றோர் எண்ணிக்கை 34 விழுக்காடு உயர்ந்துள்ளதாக அறிவித்தது.

மேலும், இந்தியாவில் நகர்புறங்களில் வேலையின்மை நவம்பரில் 8.21 விழுக்காடாக இருந்தது டிசம்பர் மாதத்தில் 9.3 விழுக்காடாக அதிகரித்துள்ளது. கிராமப்புற வேலையின்மை கடந்த நவம்பரில் 6.44 சதவீதமாக இருந்த நிலையில், டிசம்பரில் 7.28 சதவீதமாக அதிகரித்துள்ளது.
2019-20 இன் படி, கிட்டத்தட்ட 3.2 கோடி மக்கள் விவசாயத் தொழிலுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்,

20-24 வயதுடையவர்களில் 38.41 % பேர் வேலையில்லாதவர்கள், 25-29 வயதுடையவர்கள் 12.71%, 15-19 வயதுடையவர்கள் 54.88% பேர் என்கிறது இந்த ஆய்வு.

உலக அளவில் முறைசாராத் தொழிலாளர்கள் 200 கோடி பேர் உள்ளனர். நைஜீரியா, பிரேசில் மற்றும் இந்தியாவில்தான் உலகிலேயே அதிக முறைசாராத் தொழிலாளர்கள் உள்ளனர். இதில் இந்தியாவில் மட்டும் 40 கோடி பேர் இருப்பதாக இன்னொரு புள்ளிவிவரம் கூறுகிறது.

4. விலைவாசி கடந்த 10 ஆண்டுகளில் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. எடுத்துக்காட்டாக  2012 ஆம் ஆண்டு ஒரு கிலோ அரிசி சராசரியாக 30/- ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது 60 /- ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ கோதுமை 24 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது கோதுமையின் விலை  45 ரூபாய்.  ஒரு கிலோ சுமார் 68 முதல் 70 ரூபாய்க்கு விற்ற உளுந்தம் பருப்பு, தற்போது 122 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனையாகிறது. 76 ரூபாய்க்கு விற்ற பாசிப்பருப்பு  110 ரூபாய் வரை விற்பனையாகிறது. பாலைப் பொறுத்தவரை, பத்தாண்டுகளுக்கு முன்பாக ஒரு லிட்டர் 27 ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. ஆனால் தற்போது ஒரு லிட்டர் பாலின் விலை 50 ரூபாய் வரை விற்பனையாகிறது. சூரியகாந்தி எண்ணையைப் பொறுத்தவரை, ஒரு லிட்டர் 90 ரூபாய்க்கு விற்பனையான எண்ணெய் தற்போது, 180 ரூபாய் வரை விற்பனையாகிறது.

2012ஆம் ஆண்டு ஏப்ரலில் ஒரு லிட்டர் பெட்ரோல் 65 ரூபாய்  என்ற அளவிலும் ஒரு லிட்டர் டீசல் 40 ரூபாய்  என்ற விலையிலும்  விற்பனையானது. ஆனால், தற்போது பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ. 102 என்ற விலையிலும் டீசல் ஒரு லிட்டர் ரூ97  என்ற விலையிலும் விற்பனையாகிறது

மத்திய அரசின் மானியத்திற்குப் பிறகு, நுகர்வோருக்கு ஒரு சிலிண்டர் சுமார் 410 ரூபாய்க்குக் கிடைத்தது. ஆனால், 2014க்குப் பிறகு மானியம் படிப்படியாகக் குறைக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு சிலிண்டரின் விலை 1,100 ரூபாயாக உயர்ந்திருக்கிறது.

5. கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் போடுவேன் என்றார். ஆனால் நடப்பதோ வேறு.

சுவிட்சர்லாந்து மத்திய வங்கி வெளியிட்டுள்ள வருடாந்திர அறிக்கையின் படி, இந்தியர்களின் பணம் சுவிஸ் வங்கிகளில் மொத்தம் ரூபாய் 30,500 கோடி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2020 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது இது சுமார் 10,000 கோடி அதிகம் என்றும் 2020ஆம் ஆண்டில் இந்தியர்களின் பணம் சுவிஸ் வங்கியில் ரூபாய் 20 ஆயிரத்து 700 கோடி இருந்தது என்றும் தெரிவித்துள்ளது.
அந்தவகையில் ஒரே ஆண்டில் மட்டும் 50 சதவீதத்திற்கு அதிகமாக இந்தியர்களின் பணம் சுவிஸ் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.  இந்த தொகை கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய தொகை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது இந்தியாவின் ஒரு புறம். இன்னொரு புறம் வேறு விதமாக உள்ளது.

உலகின் பெரிய செல்வந்தர்களின் பட்டியலான ஃபோர்ப்ஸ் பட்டியலில் 90களில் இந்தியாவிலிருந்து யாரும் இல்லை. 2000ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை ஒன்பதாக இருந்தது. 2017இல் இது 119 ஆக இருந்தது.  2022 இல் இந்த எண்ணிக்கை 166 ஆக உள்ளது. இவர்களின் சொத்து மதிப்பானது ஒரு நாளைக்கு ரூ.3,608 கோடி என்கிற அளவில் உயர்ந்து வந்திருக்கிறது.

இந்தியாவின் 100 பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு 660 பில்லியன் அமெரிக்க டாலர்களை (₹ 54.12 லட்சம் கோடி) தொட்டுள்ளது

இந்தியாவில் உள்ள பணக்காரர்களில் ஒரு சதவீதம் பேரிடம் மட்டுமே நாட்டின் மொத்த செல்வத்தில் 40 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. அதே சமயம் மக்கள் தொகையில் அடிமட்டத்தில் இருக்கும் 50 சதவீதம் மக்கள் ஒட்டுமொத்தமாகவே வெறும் 3 சதவீத செல்வத்தை மட்டுமே பகிர்ந்து கொள்கிறார்கள் என்று ஆக்ஸ்பாம் அறிக்கை கூறுகிறது.

மேலும், இந்தியாவின் முதல் 10 பணக்காரர்கள் மீது 5 விழுக்காடு வரி விதிக்கப்பட்டாலே இந்தியாவில் பள்ளிக்குச் செல்ல முடியாமல் இருக்கும் பிள்ளைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்க முடியும் .

இந்தியாவில் உள்ள பணக்காரர்களின் ஒட்டுமொத்த சொத்துக்கும் 2 விழுக்காடு வரி விதிக்கப்பட்டால், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களின் ஊட்டச்சத்து மேம்பாட்டுக்காக 40,423 கோடி ரூபாய் அளவிலான தேவைப்படும் நிதியை திரட்ட முடியும்

நாட்டில் உள்ள முதல் 10 பணக்காரர்களின்  சொத்துக்கள் மீது ஒரு முறை 5 விழுக்காடு வரி விதிக்கப்பட்டால் 1.37 லட்சம் கோடி ரூபாய் திரட்ட முடியும். இது 2022–-23 ஆம் ஆண்டிற்குச் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் (ரூ. 86,200 கோடி) மற்றும் ஆயுஷ் அமைச்சகம் (ரூ.3,050 கோடி) மதிப்பிட்டுள்ள நிதி தேவையை விட 1.5 மடங்கு அதிக நிதியை திரட்ட முடியும்” என்கிறது.
 

ஏழை இந்தியக் குடும்பங்களின் ஆண்டு வருமானம், 2015-16-ல் இருந்த நிலையை விட அடுத்த ஐந்து ஆண்டு காலத்தில் அதாவது, 2020-21-ம் ஆண்டில் கரோனா பெருந்தொற்றின் தாக்கம் காரணமாக 53 விழுக்காடு சரிந்துள்ளது. இதே ஐந்தாண்டு காலக்கட்டத்தில் 20 விழுக்காடு பணக்காரர்கள் தங்களின் ஆண்டு குடும்ப வருமானத்தில் 39 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளனர் என்பதிலிருந்து இந்தியா ஏழைகள் வாழத் தகுதியற்ற, செல்வந்தர்கள் மட்டும்  தனித்துவமாக வாழும் சமத்துவமற்ற நாடாகவும் மோடி அரசு மாற்றியுள்ளது.

கார்ப்ரேட்களுக்கு லட்சக்கணக்கான கோடிகள் வரிச்சலுகையை கொடுப்பதன் மூலமும் ஏழை மக்களின் மீது கடுமையான வரிச்சுமையை ஏற்றுவதன் மூலமும் இந்த நாட்டை மோடி அரசு உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
அறிக்கை கூறியது.

2017-2021 வரையிலான கௌதம் அதானியின் பெறப்படாத ஆதாயங்களின் மீதான ஒரே வரியானது, ஒரு வருடத்திற்கு ஐந்து மில்லியனுக்கும் அதிகமான இந்திய ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களைப் பணியமர்த்த போதுமானதாக இருந்திருக்கும். இப்படி இந்தியா இரண்டு முகத்தோடு உள்ளது.
கார்ப்பரேட் கொள்ளையர்கள் மகிழ்ந்து வாழவும் ஏழைகள் வாழ்வதற்கே தகுதியற்றதாகவும் மாறிக்கொண்டிருக்கிறது.

கார்ப்பரேட் கொள்ளையர்களே  அரசாங்கக் கொள்கைகளை தீர்மானிக்கும் நிலையிலும், இந்தியாவின் எதிர்காலம் ஏகாதிபத்தியங்களால் எழுதப்படும் நிலையிலும்  பாட்டாளி வர்க்கம் முதலாளிகளுக்கு எதிராக எழாவிட்டால் மொத்தமாக அழிவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை.

தொழிலாளிகளைச் சுரண்டும், உழைக்கும்  மக்களை ஒடுக்கும் இந்த முதலாளி வர்க்கத்தையும், இந்த ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதிகளாக உள்ள அரசு களையும் நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

தன்னுடைய சுரண்டலை மறைக்க மதவெறியைத் தூண்டி இந்துத்துவ கூச்சலிடுகிறது மோடி அரசு.

எனவே, முதலாளிவர்க்கத்திற்கு முடிவுகட்டும் வேலையை தொழிலாளி வர்க்கம் தமது தலைமையில் செய்து முடிக்க வேண்டும். சாதி, மதம், இனம் கடந்த ஒற்றுமை இதற்கு தேவை. அதை நிச்சயம் பாட்டாளி வர்க்கம் செய்யும்.

(முற்றும்)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments