Tuesday, October 8, 2024 09:10 pm

Subscribe to our YouTube Channel

306,000SubscribersSubscribe
Homeதமிழ்நாடுநடிகவேள் எம்.ஆர். ராதா

நடிகவேள் எம்.ஆர். ராதா

பலேபாண்டியா படத்தில் “மாமா மாப்ளே” பாட்டில் முதல்வரியை இப்படித்தான் தொடங்குவார் சிவாஜி, “நீயே என்றும் உனக்கு நிகரானவன்…” இது காட்சிக்கான பாட்டு மட்டுமல்ல. நடிகர் திலகம் சிவாஜி, நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் நடிப்புக்குச் சொன்ன பாராட்டுப் பத்திரமாகும். நடிகவேள் ராதா காலமானபிறகு நடந்த ஒரு அஞ்சலிக் கூட்டத்தில் சிவாஜி சொன்னார், ”ஒரு ஃப்ரேமில் என் முகமும் அண்ணன் ராதாவின் முகமும் அருகருகே வந்தால், நான் ரொம்ப ஜாக்கிரதையாக இருப்பேன். ஒரு நொடியில் சின்ன அசைவில் நம்மை காலி செய்துவிடுவார்.” இது ஒரு மகா கலைஞனின் எடைக்கல் வார்த்தை.

‘பாகப்பிரிவினை’ படத்தை இந்தியில் எடுத்தபோது சுனில்தத் சொன்னாராம், “சிவாஜியின் பாத்திரத்தை திலீப்குமார் செய்கிறார். ஆனால் ராதாவின் ‘சிங்கப்பூர் சிங்காரம்’ பாத்திரத்தைச் செய்ய யாராலும் முடியாது” என்று. பாகப்பிரிவினையைத் தெலுங்கில் எடுத்தபோது இதையேதான் என்.டி.ஆரும் சொன்னார். ராதாபோல் செய்ய தெலுங்கில் ஆள் இல்லை என்று. அந்த ஏற்றமும் இறக்கமும் திடீரெனக் கீழே இறங்கிக் கெக்கலி கொட்டும் மாடுலேஷனும், அந்தக் குரலின் மாயவித்தைகளை முகத்திலும் காட்டத் தெரிந்த பாவனைகளும் யாரிடமும் கற்காத ராதாவின் சொந்தக் கண்டுபிடிப்புகள். ஒரே காட்சியில் மிகை நடிப்பு, யதார்த்த நடிப்பு, கீழ் நடிப்பு என்று எல்லா நடிப்பு வகைகளையும் காட்டிக்கொண்டே எல்லாவற்றையும் கலந்த ஒரு புதுவகை நடிப்பையும் மக்கள் ரசிக்கும்படி வெளிப்படுத்தியதால்தான் அவரை ‘நடிகவேள்’ என்றது தமிழ்நாடு. கவிதையை ஜனநாயகப்படுத்திய புதுக்கவிதை போல, ஓவியத்தில் பார்க்கும்போதெல்லாம் புதிய அனுபவம் தந்த நவீன ஓவியம்போல, நடிப்பில் பல மரபுகளை உடைத்த ‘நவீன நடிப்பு’ அவருடையது. அதனால்தான் எத்தனைமுறை பார்த்தாலும் ராதா நடிப்பு சலிப்பதேயில்லை. சினிமாவில் எல்லா நடிகர்களும் சுத்தத் தமிழ் பேசிய காலத்திலேயே ராதா மட்டும்தான் கொச்சைத் தமிழ் பேசுவார். அந்தக் கொச்சைத் தமிழ் மக்களைச் சுத்தமாக்கியதுதான் வரலாறு.

அவருக்கும் திருச்சிக்குமான உறவு ஆழமானது. அவர் வாழ்ந்ததும் மறைந்ததும் திருச்சியில்தான். “காந்தா” என்ற கரகரத்த குரலை முதன்முதலில் கேட்ட ஊர் திருச்சி. ராதாவைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்ற ‘ரத்தக்கண்ணீர்’ நாடகம் 1949-ம் ஆண்டு ஜனவரி 14-ம் நாள் கி.ஆ.பெ.விசுவநாதம் தலைமையில் திருச்சியில்தான் அரங்கேறியது. 3000 முறை மேடை கண்ட அந்த நாடகத்தைத் திருவாரூர் கே.தங்கராசு எழுதினார். சாகித்ய அகாடமியின் செயலாளராக நேருவால் அமர்த்தப்பட்ட பிரபாகர் மாச்வே ஒரு மராத்தியர். அவர் ரத்தக்கண்ணீர் பார்த்துவிட்டு, சிறந்த உலக மேடை நாடகங்களில் ரத்தக்கண்ணீர் ஒன்று என்றும் எம்.ஆர்.ராதா இந்திய வரலாற்றில் உள்ள முக்கியப் பெயர்களில் ஒன்று என்றும் சொன்னார். ரத்தக்கண்ணீர் நாடகத்தை காங்கிரஸ்காரரான பி.ஏ.பெருமாள் முதலியார் சினிமாவாக எடுத்தார். ராதா முதலியாரிடம் சில நிபந்தனைகள் விதித்தார். சினிமாவுக்காக நாடகம் நடத்துவதை விட முடியாது. நாடகம் முடிந்துதான் ஷூட்டிங் வைக்கணும். நாடகத்தின் உச்சக் காட்சியான தன் மனைவியை நண்பன் பாலுவுக்கு மணமுடிப்பதை மாற்றக்கூடாது. அடுத்ததுதான் அவரின் தனித்துவம், கே.பி.சுந்தராம்பாள்தான் அந்தக் காலத்தில் நந்தனாராக நடிக்க ஒரு லட்சம் சம்பளம் வாங்கியவர். அதைவிட அதிகமாக ரூ.25,000 தரவேண்டும் என்றார் ராதா. பெருமாள் முதலியார் எல்லாவற்றுக்கும் சம்மதித்தார்.

1954 தீபாவளிக்கு வந்த ‘ரத்தக்கண்ணீர்’ படம் சூப்பர் டூப்பர் ஹிட். மூட நம்பிக்கைகளை நகையாடிய படமது. சொல்ல வேண்டிய முறையில் சொன்னால் மக்கள் ஏற்பார்கள் என்பதன் சிறந்த உதாரணம் ரத்தக்கண்ணீர். இன்று தொலைக்காட்சிகளில் போட்டால்கூட 68 ஆண்டுகள் கழிந்தும் மக்கள் ரசித்து, ராதாவின் வசனங்களைப் பேசுகிறார்கள். அதுபோலவே ராதாவின் பெயரோடு ஒட்டி உறவாடும் ‘நடிகவேள்’ பட்டம் தரப்பட்டதும் திருச்சியில்தான். ‘போர்வாள்’ நாடகம் திருச்சி தேவர் ஹாலில் நடந்தபோது பெரியார் முன்னிலையில் பட்டுக்கோட்டை அழகிரிசாமி ‘நடிகவேள்’ என்ற பட்டத்தை எம்.ஆர்.ராதாவுக்கு வழங்கினார்.

எம்.ஆர்.ராதாவின் நாடகங்களில் பெரிய எதிர்ப்பைச் சந்தித்த நாடகம் ‘ராமாயணம்.’ அதில் ராதா ராமனாக நடித்தார். வால்மீகி ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நாடகமது. மேடையின் இரண்டு பக்கமும் தன் நாடக எழுத்துக்கு ஆதாரமான சமஸ்கிருத மொழிபெயர்ப்புப் புத்தகங்களை அடுக்கி வைத்தார். அரசு தடை விதித்தது. நீதிமன்றம் சென்று அனுமதி பெற்று 15-9-1954-ல் பெரியார் தலைமையில் சென்னை ஒற்றைவாடை தியேட்டரில் முதல் முறையாக மேடையேற்றினார். திருச்சி தேவர் ஹாலில் ராமாயணம் நடந்தபோது “உள்ளே வராதே” என்று அதிரடியாக போஸ்டரும் நோட்டீசும் வெளியிட்டார். “என் நாடகத்தால் மனம் புண்படும் என்று கருதுகிறவர்கள் எவராயிருந்தாலும் அவர் எம்மதத்தினராய் இருந்தாலும் அவர்கள் கண்டிப்பாய் வரவேண்டாம். அவர்கள் காசும் எனக்கு வேண்டாம்” என்றார் துணிச்சலோடு. இவருக்காகவே கொண்டுவரப்பட்டதுதான் நாடகத் தடைச் சட்டம்.

ராமாயணம் நாடக போஸ்டர்ராமாயணம் நாடக போஸ்டர்
‘இழந்த காதல்’ நாடகம்தான் ராதாவை அடையாளப்படுத்திய நாடகம். “எம்.ஆர்.ராதாவின் சவுக்கடி சீனைக் காணத்தவறாதீர்கள்” என்று விளம்பரம் செய்யப்பட்ட நாடகமிது. இந்த நாடகம் சேலத்தில் நடந்தபோதுதான் ராதாவின் ஆற்றலைக் கண்டு வியந்த அண்ணா, பெரியாரையும் அழைத்துவந்து நாடகம் பார்க்கவைத்தார். மேலை நாட்டு நடிகர் பால்முனிக்கு ராதாவை அண்ணா ஒப்பிட்டார். ராதாவின் ஒரு நாடகம் தாங்கள் நடத்தும் 100 மாநாடுகளுக்குச் சமம் என்றார் அண்ணா. இந்த நட்பால்தான் ராதாவின் ‘திராவிட மறுமலர்ச்சி நாடக சபா’ உருவானது. ஆனாலும் அண்ணா பெரியாரை அரசியலில் பிரிந்தபோது ‘அண்ணாவின் அவசரம்’ என்று புத்தகம் எழுதி அண்ணாவிடமே கொடுத்து, இதைப் படியுங்கள் என்றவர் ராதா.

‘விமலா அல்லது விதவையின் கண்ணீர்’ என்ற புது நாடகத்தில் பெண்கள் படும் வேதனைகளை ராதா வலிமையாகப் பேசினார். சமூக சீர்திருத்த நாடகம் என்று நாகப்பட்டினத்தில் விளம்பரம் செய்திருந்தார். ஊர் பெரியவர்கள் சிலர் நாடகம் நடத்தத் தடை கேட்டு நீதிமன்றம் சென்றனர். கணேசய்யர் நீதிபதியாக இருந்தார். இவர் சாஸ்திர அறிவு மிக்கவர். பார்க்காமல் தடை விதிக்க மறுத்த கணேசய்யர் ஒருநாள் நாடகம் பார்க்க வந்தார். ராதா தன் சக நடிகர்களிடம் எதையும் மாற்றாமல் அப்படியே நடியுங்கள், வருவது வரட்டும் என்றார். ஒரு காட்சிகூட விடாமல் எல்லாக் காட்சிகளையும் ரசித்த கணேசய்யர் மேடையில் சொன்னார், ”விதவைகள் படும் துன்பம் சாதாரணமானதல்ல. அவர்களுக்கு மறுமணம் செய்து வைக்க வேண்டும் என்னும் இந்த நாடகம் நாட்டுக்குத் தேவையான ஒன்று. விதவைகள் பூ வைக்கக்கூடாது, பொட்டு வைக்கக்கூடாது என்பதெல்லாம் அவளை உடன்கட்டை ஏற்றுவதற்கு சமமல்லவா. நாடகம் எல்லா ஊரிலும் நடக்கட்டும். ராதா நீண்டநாள் வாழ்ந்து தொண்டு செய்யட்டும்” என்றார்.

‘தூக்கு மேடை’ நாடகம் கலைஞர் கருணாநிதி எழுதியது. ‘கலைஞர்’ என்ற அடைமொழிதான் அவரது பெயரான கருணாநிதி என்பதைவிட அதிகமான தமிழர்களால் உச்சரிக்கப்படுகிறது. இந்தக் கலைஞர் பட்டம் அவரை வந்தடைந்ததே ஒரு சுவாரஸ்யமான கதை. புது நாடகம் ஒன்று போட எம்.ஆர்.ராதா விரும்பினார். திருவாரூரிலிருந்து வந்த இளைஞரான கருணாநிதி தஞ்சையிலேயே தங்கி ‘தூக்கு மேடை’ நாடகத்தை எழுதிக்கொடுத்தார். மகிழ்ந்துபோன ராதா, நாடகம் எழுதியவரை ‘அறிஞர் கருணாநிதி’ என்று போஸ்டர்களில் விளம்பரப்படுத்தினார். அண்ணாவுக்கான அடைமொழியைத் தனக்குப் பயன்படுத்தியதை கருணாநிதி ஏற்கவில்லை. “ஏன் உங்க கட்சியில ஒரு அறிஞர்தானா” என்று ஜாலியாகச் சிரித்த ராதா, நாடகத்தின் முதல் நாள் கருணாநிதியை ‘கலைஞர் கருணாநிதி’ என்று அழைத்தார். அன்றுமுதலே தான் கலைஞரானதாகவும் அதுவே தன்னோடு நிலைத்ததாகவும் கலைஞர் 13-9-1989 முரசொலியில் எழுதினார்.

நாடகத்தில் இல்லாத வசனங்களைப் பேசி அதிர்ச்சியூட்டுவது ராதாவின் வாடிக்கை. அதுவே பார்வையாளர்களை ஒரே நாடகத்தைப் பலமுறை பார்க்கவைத்தது. ‘தூக்கு மேடை’ நாடகத்தில் பாண்டியனாக நடித்த கலைஞரிடம் “உங்க அண்ணாவை தளபதி தளபதின்னு சொல்றீங்களே, அவரு எந்தப் போருக்குத் தளபதி” என்று திடீரெனக் கேட்டார் ராதா. கலைஞர் சுதாரித்துக்கொண்டு, “வீணை வாசிக்கப்படும்போது மட்டும் வீணையல்ல. உறையில் இருந்தாலும் வீணைதான். அதுபோலத்தான் போருக்கும் அவர்தான் தளபதி. அமைதிக்காலத்திலும் அவர்தான் தளபதி” என்று சொன்னதாக பின்னாள்களில் கலைஞர் எழுதினார்.

எதையும் எதிர்கொள்ளும் அச்சமே அறியாத மனம் ராதாவின் சொத்து. அந்த நாடகத்துக்குத் தலைமை பெரியார். பாதி நாடகம் முடிந்து இடைவேளை நேரத்தில் பெரியார் பேசுகிறார். பார்வையாளரில் ஒருவர் எழுந்து, “இவரு பேச்சைக் கேட்க நாங்க காசுகொடுக்கலை. நாடகத்தைப்போடு” எனக் கத்துகிறார். மேக்அப் ரூமிலிருந்த ராதாவுக்குச் செய்தி போகிறது. பாதி மேக்கப்போடு வந்த ராதா, கத்தியவரைப் பார்த்து, “நாடகம் முடிஞ்சிடுச்சு, நீங்கள் போகலாம். இனி இவர்தான் பேசுவார்” என்றாரே பார்க்கலாம், பெரியாரே அசந்துவிட்டார். இந்தமாதிரி பதிலை அவரே எதிர்பார்க்கவில்லை.

அவரின் கரகரத்த குரலும் அதிரடியான கருத்துகளும் அவருக்கு முரடர் போன்ற தோற்றத்தைக் கொடுத்ததென்னவோ உண்மை. ஆனால் அன்பும் மனிதமும் நிறைந்த மனிதராகவே அவர் வாழ்ந்தார். என்.எஸ்.கே, பாகவதர், ஏ.பி.நாகராஜன், இசையமைப்பாளர் ஜி.ராமநாதன், டி.ஆர். மகாலிங்கம், வசனகர்த்தா இளங்கோவன், பட்டுக்கோட்டை அழகிரி என்று பலருக்கு அவர்களின் கடைசிக்காலத்தில், அவர்களால் பயன்பட்டவர்களெல்லாம் ஒதுங்கிக்கொள்ள, சத்தமில்லாமல் உதவி செய்தவர் ராதா மட்டும்தான். நாதஸ்வர மேதை டி.என்.ராஜரத்தினம் பிள்ளை மறைந்தபோது அவரின் இறுதிச் சடங்கை முன்னின்று நடத்தியதோடு, அவரின் சமாதியில் 48 அடி உயரத்தில் நாதஸ்வரம் செய்துவைத்தார். அவரின் மகனுக்கு ஒரு மெக்கானிக் பட்டறையும் வைத்துக்கொடுத்தார்.

யதார்த்தம் பொன்னுசாமி பாராட்டு விழாயதார்த்தம் பொன்னுசாமி பாராட்டு விழா
நாடக விவசாயி என்று புகழப்பட்டவர் திருச்சி உறையூரைச் சேர்ந்த டி.பி.பொன்னுசாமி பிள்ளை. ‘யதார்த்தம் பொன்னுசாமி’ என்றே இவரை நாடக உலகம் அழைத்தது. சிவாஜி கணேசன், எம்.ஆர்.ராதா, வி.கே.ராமசாமி, டி.எஸ்.பாலையா, காகா ராதாகிருஷ்ணன் போன்ற மகா நடிகர்களை உருவாக்கியவர் இவர். நாடக உலகம் இவரை மறந்துவிட்ட சூழலில் யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளையின் 40 ஆண்டுக்கால நாடகப் பணியைப் பாராட்டி 4-11-1956-ல் விழா எடுத்து நாடகம் நடத்தி நிதியளித்து நன்றி செலுத்தியவர் எம்.ஆர்.ராதாதான்.

குன்றக்குடி பெரிய அடிகளார் எம்.ஆர்.ராதாவுக்கு ‘கலைத்தென்றல்’ என்ற பட்டத்தைக் கொடுத்தபோது மலைக்கோட்டை மணி அடிக்க ராதாவின் மேல் மலர்மழை பொழிய ஒரே அமர்க்களம். அப்போது அடிகளார், “ராதா மதத்தையும் சமயத்தையும் வெளுத்தெடுப்பதாகச் சொல்கிறார்கள், தூய்மையாக்கவே அவர் வெளுக்கிறார். அதனால்தான் அவரை நான் தென்றல் என்கிறேன்” என்றார்.

“நான் சினிமா உலகத்துக்கு மாறுபட்டவன்-எதிர்ப்பாளன் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படிப்பட்ட நானே ராதா பெயரில் ஒரு மன்றம் நிறுவுகிறேன்” என்று சொல்லி, பெரியார் ‘ராதா மன்ற’த்தை 17-9-1963-ல் திறந்து வைத்தார். அப்போது சொன்னார், “எல்லாக் கலைஞர்களும் ரசிகர்களைத் திருப்திப்படுத்த அவர்களின் பின்னால் செல்வார்கள். ஆனால் ராதாவோ ரசிகர்களின் திருப்தியைப் பற்றிக் கவலைப்படாமல் அவர்களைத் தன் பின்னால் வரவைப்பவர். அதனால்தான் அவருக்கு மன்றம் வைத்தேன்” என்ற பெரியார், ’ராதா வாழ்க’ என்று பேசி முடித்தார்.

இம்பாலா காரை அந்தஸ்தின் அடையாளமாகப் பலர் பார்த்தனர். ஆனால் ராதா தனது இம்பாலா காரில் கேளம்பாக்கத்தில் இருந்த தனது மாட்டுப்பண்ணைக்கு வைக்கோல் ஏற்றி அனுப்பினார். “என்ன இது, வைக்கோல் ஏத்த இம்பாலாவா” என்ற அந்தப் பெரிய நடிகரிடம் ராதா சொன்னார், “இதுவும் ஒரு சாயம் பூசிய தகரம்தான். நம் வேலையை சற்று வேகமாகச் செய்துகொள்ளப் பயன்படும் ஒரு சாதனம் அவ்வளவுதான். இதற்கு மேல் எந்த மதிப்பும் அதுக்கு இல்லை. பசிக்கும் என் மாட்டுக்கு உடனே அனுப்பத்தான் வைக்கோலை இம்பாலாவில் ஏத்தினேன்” என்றாரே பார்க்கலாம். அந்தப் பெரிய நடிகருக்கு முகத்தில் வழிந்த அசடை தன் நடிப்பால் துடைத்துக்கொள்ள முடியவில்லை. இதுதான் பிம்பம் உடைத்தல்!

1975ஆம் ஆண்டு வந்த அவசரநிலை சட்டத்தால் (மிசா) ராதா கைது செய்யப்பட்டார். இந்தச் சட்டத்தால் கைதான இந்தியாவின் ஒரே நடிகர் அநேகமாக ராதா ஒருவர்தான். ஒரு நாள் ராதா விடுதலையானார். போலீஸ் அதிகாரி “சார் நீங்கள் உடனே கிளம்பலாம்” என்றார். ’பழகின இடம். டக்குனு போகமுடியுமா? இருங்க குளிச்சிட்டு வாரேன்’ என்று நிதானமாகவே கிளம்பினாராம் ராதா. இன்பத்தையும் துன்பத்தையும் ஒரே மாதிரி பாவிக்கும் துறவு மனநிலையை ராதா பெற்றிருந்தார்.
சினிமா நாடகம் எதிலும் அவர் பேசிய பல வசனங்கள் உதட்டின் உற்பத்தியல்ல; வாழ்வின் செய்தி. ஒரு படத்தில் எஸ்.வி.சுப்பையாவைப் பார்த்துக் கேட்பார், “அது எப்படி ஜேம்ஸ், நீ நல்லவனா இருந்தும் பணக்காரனா இருக்கே.” இதை வெறும் வசனந்தானே என்று தள்ள முடியுமா? எழுத்தாளர் விந்தனோடு அவர் சிறையில் நிகழ்த்திய உரையாடல் முக்கியமானது. அதில் சொன்னார், “என்னுடைய பெருமை மட்டும் உலகத்துக்குத் தெரிஞ்சாப் போதாது. பலகீனமும் தெரியணும். இல்லைன்னா மக்களை ஏமாற்றுவதா ஆகிவிடும்.” இது சாதாரண நடிகனின் பேச்சா, ஒரு ஞானியின் ஒளிக்கீற்று அல்லவா?! 

கவிஞர் நந்தலாலா

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments