Saturday, November 2, 2024 12:11 am

Subscribe to our YouTube Channel

316,000SubscribersSubscribe
Homeதமிழ்நாடுகல்வி, நீதியை காவு வாங்கும் சாதி- எவிடென்ஸ் கதிர்

கல்வி, நீதியை காவு வாங்கும் சாதி- எவிடென்ஸ் கதிர்

பக்கத்தில் வராதீர்கள்.நாற்றம் அடிக்கிறது.சாக்கடை நாற்றம்.படிக்க வரிங்களா? யாரையாவது காதலித்து இழுத்து கொண்டு போக போறிங்களா? உங்கள் ஆளுங்களுக்கு எதற்கு படிப்பு? உங்களை பார்த்தாலே அருவருப்பாக இருக்கிறது.

இந்த வார்தைகளை சொன்னது ஏதோ ஒரு சாதி இயக்கத்தின் சாதி வெறியன் அல்ல.பள்ளிக்கூடத்தின் ஆசிரியை.இதனால் மன ரீதியாக வேதனை அடைந்த ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் இரண்டு தலித் மாணவிகள், கடந்த 15 பிப்ரவரி 2023 அன்று பள்ளிக்கூடத்தின் கழிவறையில் இருந்த பினாயிலை குடித்து உள்ளனர்.

சின்னாளப்பட்டி தேவாங்கர் – பெண்கள் உயர் நிலை பள்ளிக்கூடத்தில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது.சிகிச்சை எடுத்துவரும் இரண்டு தலித் மாணவிகளையும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சந்தித்தேன்.இந்த துயரம் நேற்று இன்று நடக்கவில்லை.கடந்த இரண்டு மாதமாகவே நடந்து வருகிறது.மற்ற மாணவிகளிடத்திலும் எங்களிடம் பேச கூடாது.அவர்களிடம் பேசினால் கெட்டு போய்விடுவீர்கள். அவர்கள் எல்லாம் காலணியிலிருந்து வருபவர்கள்.அவர்கள் மீது நாற்றம் அடிக்கும் என்று கூறி கொண்டே இருப்பார்.எங்களது மகிழ்ச்சியை நிம்மதியை முற்றிலும் அந்த ஆசிரியர் குலைத்து விட்டார். நாங்கள் அருகில் சென்றால் கிட்டே வராதீர்கள் என்று கூறி தள்ளி நிற்பார்.எவ்வளவு காலம் பொறுத்து கொள்ளுவது? இந்த அவமானத்தை எதிர்கொண்டு எப்படி உயிர் வாழ்வது? விளையாட்டு போட்டியில் முதல் பரிசும் இரண்டாம் பரிசும் வாங்கினாலும் எங்களை பாராட்ட மாட்டார்.அடுத்த நிலை விளையாட்டில் எங்களை விளையாட அனுமதிக்க மாட்டார் என்றும் கூறிய அந்த குழந்தைகளை எப்படி தேற்றுவது என்று தெரியாமல் அமைதியாக நின்று கொண்டு இருந்தேன்.இதுவரை சம்பந்தப்பட்ட ஆசிரியை கைது செய்யப்படவில்லை.

அவர்கள் வாசிக்க கூடிய தொப்பம்பட்டி கிராமத்தில் உள்ள மற்ற மாணவிகளிடத்திலும் விசாரித்தேன்.சில சமயம் அந்த ஆசிரியை கோபத்தில் கன்னடத்தில் திட்டுவார்.அந்த வார்த்தைகள் புரியாது.ஆனால் பறைச்சி ,சக்கிலிச்சி என்று சாதியை கூறுவார் என்கிற குற்றச்சாட்டும் வைக்கின்றனர்.இதனை கன்னடம் எதிர் தமிழ் என்று எடுத்து கொள்ள கூடாது.இந்த ஆசிரியர் மற்ற பிற்படுத்தப்பட்ட தமிழ் சாதி மாணவர்களிடம் கண்ணியமாகத்தான் நடந்து கொண்டு உள்ளார்.

இந்த பள்ளிக்கூடத்தில் 48 ஆசிரியர்கள் உள்ளனர்.இதில் ஒருவர் கூட தலித் ஆசிரியர்கள் இல்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.கல்வி கூடங்கள் சாதி கூடாரங்களாக உள்ளன என்பதை எவரும் மறுக்க முடியாது.பள்ளிக்கூடம் மட்டும் அல்ல.கல்லூரிகளும் அப்படிதான் இருக்கின்றன.சவ்ராஸ்ட்ரா கல்லூரி,யாதவர் கல்லூரி,மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி,பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி,வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி இப்படி பல்வேறு சாதி பெயர்களில் மதுரையில் கல்லூரிகள் மட்டும் அல்ல.பள்ளிக்கூடங்களும் உள்ளன.தமிழ் நாட்டில் எல்லா இடங்களிலும் இந்த அவலம்தான்.தமிழக அரசு பேருந்துகளில் இருந்த சாதி அடையாளத்தை உத்தரவு போட்டு ஒழித்த தமிழக அரசு கல்வி கூடங்களில் தாங்கி இருக்கும் இந்த சாதி அடையாளத்தை எப்போது ஒழிக்க போகிறது.தேவாங்கர் செட்டியார் பள்ளிக்கூடம் என்று வருகிறபோது இயல்பாகவே அந்த சாதியின் பெருமிதமும் ஆதிக்கமும் அங்கு மேலோங்கி நிற்கிறது.எந்த சாதி பெயரை தாங்கி நின்றாலும், அது எல்லா நிலைகளிலும் தலித் மாணவர்களையே ஒடுக்குகிறது என்பதுதான் உண்மை.

காடு இருந்தால் பறித்து கொள்ளுவார்கள்.பணம் இருந்தால் பிடுங்கி கொள்ளுவார்கள்.கல்வியை பறிக்க முடியாது என்று அசுரன் படத்தில் வசனம் வரும்போது எல்லோரும் ஓங்கி கைகளை தட்டினோம் .ஆனால் சாதி கல்வியை மட்டும் அல்ல உயிரையும் பறிக்கிறது.

கல்வி என்பது எழுத்து அறிவு மட்டும் அல்ல.அது சமத்துவ பண்பு என்பதை எப்போது சொல்லி கொடுக்க போகிறோம்.ஆகவே காடு,பணம்.கல்வி எல்லாவற்றையும் பறிக்க முடியும்.மானுடத்தையும் சமத்துவத்தையும் பறிக்க முடியாது என்கிற நீதி கல்வி வளர்ந்தால்தான் சாதி கல்வி ஒழியும் .

எவிடென்ஸ் கதிர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments