Sunday, May 5, 2024 09:05 am

Subscribe to our YouTube Channel

279,000SubscribersSubscribe
Homeஇந்தியாஆரியரும் தமிழரும் - பாகம் 6- விக்கி கண்ணன்

ஆரியரும் தமிழரும் – பாகம் 6- விக்கி கண்ணன்

இதுவரை சங்க இலக்கிய தரவுகளை கொண்டு ஆரியத்தையும் தமிழையும் தனித்தனியாக பார்த்தோம். இந்த பதிவில் சமீபத்தில் வெளியான இராக்கிகடி ஆய்வு முடிவினை கொண்டு ஆரியத்தையும் தமிழையும் கூடவே சிந்துவெளியையும் எவ்வாறு புரிந்துகொள்வது என பார்ப்போம்.

உலகில் மனிதன் முதன்முதலில் ஓரிடத்தில் தோன்றி தான் உலகம் முழுவதும் பரவியிருக்க முடியும் என்பது அறிவியல் ஏற்றுக்கொண்ட கருத்து. தோன்றிய இடமாக ஆப்ரிக்காவை கூறுவர். ஆனால் ஒரேயொரு முறை மட்டுமே இந்த இடப்பெயர்வு ஆப்ரிக்காவில் இருந்து உலகம் முழுமைக்கும் நடந்துவிடவில்லை. பல மில்லியன் ஆண்டுகள் இடைவெளியில் தொடர்ச்சியாக வெவ்வேறு இனக்குழுக்களாக இந்த இடப்பெயர்வு நடந்துள்ளது என்பது தான் அறிவியல் கூறும் உண்மை. ஒரு இடப்பெயர்வுக்கும் அடுத்த இடப்பெயர்வுக்கும் இடைப்பட்ட காலத்தில் இடம்பெயர்ந்த குழுக்கள் தாங்கள் குடிபெயர்ந்த இடம், அங்குள்ள தட்பவெப்ப நிலை, உணவு போன்றவைகளை கொண்டே அதன் மரபணு வளர்ச்சி அடையும். இதுவே பல மில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு, தான் வெளியேறிய இடத்தில் இருக்கும் இனக்குழுவின் மரபணுவிற்கும் இடம்பெயர்ந்த இனக்குழுவின் மரபணுவிற்குமான மாற்றங்கள் எளிதில் வித்தியாசம் காணும் வகையில் அமையும். இதுவே உடற்கட்டு, மூளையின் எடை, அறிவுத்திறன், தோல் நிறம் முதல் பண்பாட்டு, கலாச்சார மாற்றத்தினை வேறுபடுத்தி காட்டும். இந்த அடிப்படையை புரிந்துக்கொண்டால் அடுத்து நாம் பார்க்க போகும் விடயங்கள் புரியலாம்.

கடந்த ஆண்டு பேராசிரியர் வசந்த் ஷின்டே உட்பட பல அறிஞர்கள் இணைந்து வெளியிட்ட ஆய்வு முடிவினை கொண்டு இதனை பார்ப்போம். ஹரப்பா நாகரீகத்தில் ஆரிய இனக்குழுவிற்கான ‘ஸ்டேப்பி’ DNA கிடைக்கவில்லை. இது தான் அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கும் பல முக்கியமான செய்திகளில் ஒன்று. பின் ஹரப்பா நாகரீகம் யாருடையது? எனும் கேள்வி எழலாம்.

கிமு 12000-10000 வாக்கில் அனத்தோலியாவில் இருந்து ஒரு இனக்குழு மத்திய தரைக்கடல் ஊடாக கிழக்கு பாகிஸ்தான், தெற்கு ஆப்கானிஸ்தான், மேற்கு இந்தியாவை உள்ளடக்கிய பகுதியை நோக்கி வருகிறது. அந்த இனக்குழு மரபுடன் ஏற்கனவே தெற்காசியாவில் இருந்த இனக்குழு ஒன்றுடன் ஒன்று கலந்து உருவானது தான் சிந்துவெளி நாகரீகம். இந்த கலப்பை எவ்வாறு கண்டறிந்தனர்? எனும் கேள்வி எழலாம். அனத்தோலியா (Iranian) DNA எங்கெல்லாம் இருந்து எடுக்கப்பட்டது என்பதனை மறுமொழியில் 87:13 என்கிற படத்தில் காணவும், அதில் Belt Cave, shahr-i-sokha போன்ற இடப்பெயர்கள் அடைப்பில் குறிக்கப்பட்டிருக்கும். அந்த இடங்களில் கிடைத்த மரபணு மாதிரிகளுடன் இராக்கிகடி மரபணு ஒத்துப்போகிறது.

அனத்தோலியாவில் வேட்டை சமூகம் விவசாய சமூகம் என இரண்டுமே இருந்தது. அதுபோல் தெற்காசியாவிலும் வேட்டை சமூகம் விவசாய சமூகம் என இருந்தன. இவை கிமு 10000 முதல் கிமு 5000 வரையில் ஒன்றுடன் ஒன்று (87%:13%) கலந்து, அதன் பின்னரே கிமு 3500(Early Harappan Phase) வாக்கில் ஹரப்பா நாகரீகம் மெல்ல வளர்ச்சியுற்றது.

இவை கிமு 2800 – 1900 வரை செழிப்பான (Matured Harappan phase) ஒரு நாகரீகத்தினை கொண்டிருந்தது. அதன்பின்னர் கிமு 1100 வாக்கில் (Late harappan) முழுவதுமாக அந்நாகரீகம் வீழ்ச்சியுற்றது. இதில் கிமு 1500 அல்லது அதற்கு பின்னான காலத்தில் தான் ஈரானின் ஸ்டெப்பி புல்வெளியில் இருந்து மீண்டும் ஒரு இனக்குழு சிந்துவெளி வளர்ச்சியுற்றிருந்த இடத்தினை நோக்கி வருகிறது. இந்த இனக்குழு வருவதற்கு முன்பே சிந்துவெளியின் வீழ்ச்சி தொடங்கியிருந்தது. சிந்துவெளியின் வீழ்ச்சியானது இயற்கை பேரிடரால் நடந்தது என்பதே பலரும் இதுநாள் வரை முன்வைக்கும் கருத்து. ஆகவே இந்நாகரீகம் வீழ்ந்த பின்னர் அம்மக்கள் தென்னிந்தியா, தென்கிழக்காசியா நோக்கி பெருமளவு நகரத்தொடங்கினர். ஏற்கனவே சிறிய அளவில் தெற்காசிய வேட்டை சமூகமும் விவசாய சமூகமும் அனத்தோலிய இனக்குழுவுடன் கலந்திருந்தனர் என பார்த்தோம் அல்லவா. இந்நாகரீகம் வீழ்ந்த பின்னர் பெருமளவு தென்னிந்திய (தெற்காசிய) இனக்குழுக்களுடன் சிந்துவெளி மக்கள் கலந்துவிட்டனர். இப்படி உருவானதே (ASI) என கூறப்படும் தென்னிந்திய சமூகம்.

கிமு 1500க்கு பின் வந்த ஸ்டெப்பி இனக்குழுவை சேர்ந்த ஆரியர்களும் சிறிய அளவில் சிந்துவெளி(late harappan peoples) மக்களும் இன்றைய வடக்கு இந்தியாவில் அன்றிருந்த தெற்காசிய வேட்டை சமூகத்துடனும் கலந்து உருவானதே (ANI) என கூறப்படும் வட இந்திய சமூகம். ஆகவே தான் சங்க இலக்கியங்களில் விந்தியத்திற்கு வடக்கேயுள்ள பகுதியை ஆரிய தேசம் என்றும், அங்குள்ள மன்னர்களை ஆரிய மன்னர்கள் என்றும் பதிவு செய்கிறது.

மற்றொன்றையும் கவனித்தால் சிந்துவெளி மக்கள் பயன்படுத்திய முத்திரைகளும் இதுநாள் வரை படித்தறிய முடியாமல் இருக்கிறது. அதேசமயம் ஸ்டெப்பி இனக்குழு இந்தோ-ஈரானிய மொழிக்குடும்பமாக அறியப்படுகிறது. ஈரானிய கடவுள்கள் பெருமளவு வேத கடவுள்களுடன் தொடர்புடையவையாக இருக்கின்றன.

இவையனைத்துக்கும் ஆதாரமாக தான் இராக்கிகடியில் கிமு 2300-2500 ஆண்டை சேர்ந்த Matured harappan நாகரீக காலத்தில் கிடைத்த எலும்புகூட்டில் ஸ்டெப்பி DNA காணப்படவில்லை என ஆய்வறிஞர்கள் தங்களது முடிவை வெளியிட்டார்கள். அதாவது கிமு 3000-4000 காலத்திலேயே ஸ்டெப்பி மரபணுவானது ஈரானில் கிடைக்கிறது. ஆனால் ஆரிய நாகரீகமாக முன்மொழியப்பட்ட ஹரப்பா நாகரீகத்தில் ஆரியத்துக்கான ஸ்டெப்பி DNA கிடைக்கவில்லை.

இன்றைய வட இந்திய மக்களின் மரபணுவில் ஸ்டெப்பி டிஎன்ஏ கிடைக்கிறது. தென்னிந்திய மக்களின் மரபணுவில் இல்லையா? என்றால் நிச்சயமாக இருக்கும். ஏனெனில் ஆரிய இனத்தின் தாக்கம் இங்குமே உண்டு. ஆனால் வட இந்திய மக்களின் மரபணுவில் அதிகளவில் கிடைக்கும் ஸ்டெப்பி DNA வின் சதவீதமானது தென்னிந்திய மக்களின் மரபணுவில் மிகமிக குறைவானதாகவோ அல்லது அரிதாகவோ கிடைக்கும். ஆதலால் தான் மொழியியலில் வட இந்திய மொழிகளை Indo-European மொழி என்றும், தென்னந்திய மொழிகளை Dravidian மொழிகள் என்றும் கூறுவர் (மறுமொழியில் காண்க). ஏனெனில் இனங்களின் கலப்பு தான் மொழி கலப்பிற்கும் வித்திடுகிறது என்பதை விளக்க வேண்டியதில்லை.

ஆகவே ஆரிய குடியேற்றம் என்பது நிச்சயமாக நிகழ்ந்த ஒன்றே! அது சிந்துவெளி வீழ்ந்த பின்னரே நிகழ்ந்தது! சங்க இலக்கியங்கள் விந்தியத்திற்கு வடக்கே இருந்த பகுதிகளை ஆரியமாக கூறியது முற்றிலும் சரி.

தொடருவோம்..

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments