Wednesday, February 28, 2024 04:02 am

Subscribe to our YouTube Channel

251,000SubscribersSubscribe
Homeஇந்தியாஆரியரும் தமிழரும் - பாகம் 8- விக்கி கண்ணன்

ஆரியரும் தமிழரும் – பாகம் 8- விக்கி கண்ணன்

இதுவரையில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இலக்கிய/ கல்வெட்டு / மானுடவியல் ஆய்வுத் தரவுகளை பார்த்தோம். இக்கட்டுரையில் ஆரியருக்கும் தமிழருக்குமான நுணுக்கமான அரசியலையும் அதில் மக்கள் எவ்வாறு திசைதிருப்ப பட்டனர் என்பதையும் காண்போம்.

பொதுவாக அனைவருக்குமே பொன்னியின் செல்வன் நாவல் பற்றி தெரிந்திருக்கும். பெரும்பான்மையானோர் அதனை வாசித்து மகிழ்ந்திருப்பர். அந்த முழு நாவலின் சாரமே ஆதித்த கரிகாலனின் கொலையை சுற்றி கட்டமைக்கப்பட்டிருக்கும். பாகுபலி முதல் பாகத்தின் முடிவில் “Why Kattappa killed bahubali?” எனும் திருப்பத்துடன் இராஜமௌலி முடிந்திருப்பதே, கல்கி கட்டமைத்த “Who killed Aditha Karikala?” எனும் plot-ல் இருந்து தான். ஆனால் கல்கி மிக நேர்த்தியாக அந்த விடயத்தினை கையாண்டிருப்பார்.

அதாவது கிபி 10 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், முதலாம் பராந்தக சோழன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து இராஜசிம்ம பாண்டியனை தோற்கடிக்கிறார். தோற்ற பாண்டியன் ஈழத்தில் தஞ்சமடைகிறான். பராந்தகன் விடுவதாக இல்லை. ஈழத்தையும் வெற்றிக்கொள்கிறார். அதனால் ‘மதிரையும் ஈழமும் கொண்ட கோப்பரகேசரி’ எனும் பட்டம் தரிக்கிறார். பாண்டியனுக்கு இந்த படுதோல்வி உறுத்துகிறது. இராஜசிம்ம பாண்டியனின் மகனான வீரபாண்டியன் சோழத்தின் மீது போரிடுகிறான். முடிவில் சோழனின் தலையை கொய்து ‘சோழன் தலைக்கொண்ட வீரபாண்டியன்’ என பட்டம் தரிக்கிறான். இந்த தலைவாங்கப்பட்ட சோழன் , பராந்தக சோழனின் இளைய மகனான உத்தமசீலி என கருதப்படுகிறது.

இது சோழத்துக்கு இழுக்காக அமைகிறது. பாண்டியனின் தலையை வாங்கியே தீர வேண்டும் எனும் தீரா பகை சோழ நாட்டுக்கு ஏற்படுகிறது. பராந்தகனுக்கு பிறகு குறுகிய கால இடைவெளியில் நான்கு சோழ அரசர்கள் ஆண்டுவிட்டார்கள். ஆனால் ஒருத்தரும் பாண்டியனை பழிதீர்க்கவில்லை. ஏறத்தாழ 20 ஆண்டுகால பழியை தீர்க்க முற்படுகிறார் ஆதித்தகரிகாலன். நினைத்ததை போலவே ‘வீரபாண்டியன் தலைக்கொண்ட கோப்பரகேசரி’ ஆகிறார். இதன்பிறகு தொண்டைமண்டலத்தை தனியே 5 ஆண்டுகாலம் ஆட்சி செய்ததாக கல்வெட்டுகள் பகர்கின்றன. ஆனால் திடீரென கொல்லப்படுகிறார் ஆதித்தகரிகாலன். இந்த கதையை படிக்கும் வாசகர்களுக்கு “Who killed aditha karikala?” என்று கேட்டால் என்ன பதில் வரும்? பெரும்பான்மையானோர் நாவலை ஆழ்ந்து படித்துக்கொண்டிருக்கும் மனநிலையில் “பாண்டியநாட்டு ஆபத்துதவிகள்” தான் இந்த வஞ்சக செயலை செய்திருக்க வேண்டும் என கூறுவார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. நாவலுக்கும் வரலாற்றுக்குமான வேறுபாடு இங்கே தான் தொடங்குகிறது.

இராஜராஜன் கிபி 985இல் பட்டத்திற்கு வருகிறார். தனது இரண்டாவது ஆட்சியாண்டில் காட்டுமன்னார்கோவில் அருகே உடையார்குடி கல்வெட்டில் , “பாண்டியன் தலைக்கொண்ட கரிகால சோழனை கொன்ற #துரோகிகளான சோமன் , இவன் தம்பி இரவிதாசனான பஞ்சவன் #பிரம்மாதிராஜனும், இவன் தம்பி பரமேஸ்வரனான #இருமுடிசோழ #பிரம்மாதிராஜனும் இவன் உடன்பிறப்பு மலையனூரானும்” என கல்வெட்டு நீள்கிறது. (முழு கல்வெட்டு மறுமொழியில்)

இவர்கள் எல்லாம் எப்போதோ கண்டுபிடிக்கப்பட்டு, தண்டனைகள் தரப்பட்டுவிட்டது. ஆனால் எப்போது? யாரால்? என்ன தண்டனை தரப்பட்டது? போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்க எவ்வித சான்றுகளும் இல்லை. ஏன்? எதற்கு கொன்றார்கள்? என்பதற்கும் எவ்வித சான்றுகளும் இல்லை. ஆனால் கட்டாயமாக இவர்களுக்கு கடுமையான தண்டனையே வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை சொல்ல முடியும். கூடவே பாண்டியர்களால் அனுப்பப்பட்ட ஆபத்துதவிகள் இவர்கள் இல்லை என்று காட்டமாக மறுத்துவிடவும் முடியும். அதைவிட ஆணித்தரமாக ஆதித்த கரிகாலனை கொன்றது, தங்களை தனித்துவமான ஆரிய இனம் என இத்தனை காலமாக காட்டிக்கொண்டுவரும்  பிராமணர்களே என்பதையும் கூறமுடியும்.

அதாவது உடையார்குடி கல்வெட்டு என்பது, இராஜராஜன் ஆட்சியில் உடையார்குடி ஊர்சபைக்கு அம்மன்னனால் அனுப்பப்பட்ட ஶ்ரீமுகம் (ஓலை) தான். அதில் கரிகாலனை கொன்ற துரோகிகளின் பெயர்கள் காணப்படுகிறது. அவர்களுக்கு உடந்தையாக இருந்த உடன்பிறந்தோர், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், அவர்களுக்கு பெண் கொடுத்து பெண் எடுத்த பங்காளிகள், மாமன் மச்சான்கள் என எல்லாருடைய சொத்துக்களும் வீடுகளும் அரசாங்கத்தால் எப்போதோ கைப்பற்றப்பட்டு விட்டது. அதாவது இராஜராஜன் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே கூட இது நடந்துவிட்டிருக்கலாம். இராஜராஜன் காலத்தில் அப்படி கைப்பற்றப்பட்ட சொத்துக்கள் ஏலம் விடப்பட்டு அன்றைய தேதியில் என்ன விலைக்கு அது போகுதோ அந்த விலைக்கு அதனை விற்றுவிட கூறி ஓலை அனுப்புகிறார். இவ்வளவு தான் அதில் இருக்கும் விடயம். ஆனால் கைப்பற்றப்பட்ட நிலம் எங்குள்ளது என்றால் “வீரநாராயண சதுர்வேதிமங்கலத்தில்” இருக்கிறது. அதுமட்டுமின்றி கல்வெட்டிலேயே நேரடியாக ‘இவர் பிராமணிமார் பேராலும்’ எனும் வரி (2வது வரி) மூலம் கொன்றவர்கள் யார் என்றும் அப்பட்டமாக தெரிந்துவிடுகிறது.

அதாவது கொலை செய்தவர்களின் அங்கம் பங்காளிகள், மாமன் மச்சான்களின் நிலைமையே இத்தனை மோசமாக இருக்க, கொன்றவர்களின் நிலையை யோசித்து பார்க்கவும். பலர் மனுதர்மத்தை மீறாக்கூடாது என பிராமணர்களின் சொத்தை மட்டும் வாங்கிக்கொண்டு சோழர்கள் விரட்டியிருக்க வேண்டும் என எழுதுகிறார்கள். ஆனால் அது ஒரு பச்சை கட்டுக்கதை. ஏனெனில் இராஜராஜனும் இராஜேந்திரனும் சாளுக்கிய சத்யாசிரியனுடனான போரில் பிராமணர்களை கொடூரமாக கொன்றதை சாளுக்கிய மன்னனே தனது கல்வெட்டில் பதிவு செய்திருக்கிறான் (Hottur Inscription). ஆகையால் ‘மனுதர்மமாவது மண்ணங்கட்டியாவது’ என்று தான் சோழர்களின் ஆட்சி இருந்திருக்கிறது என்பதை அறியலாம்.

அதுபோக இந்திய வரலாறு நெடுகிலும் வாரிசுரிமை சண்டையால் பல அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். ஆனால் ஒருபோதும் எதிரி நாட்டு மன்னர்களை இப்படி கூலிப்படை (ஆபத்துதவிகள்) அனுப்பி கொன்றதாக வரலாறே இல்லை. குறிப்பாக தமிழக மூவேந்தர்கள் வரலாற்றில் இல்லவே இல்லை. இதற்கு பல எடுத்துக்காட்டுகளை தரமுடியும்.

1. கண்ணகிக்கு நீதி வழங்காத பாண்டியன் உயிர் துறந்தான். பாண்டியன் நீதி வழுவியதை சேரன் கொண்டாடுகிறான். கண்ணகிக்கு கோவில் எடுத்து பாண்டியனின் நீதிவழுவிய செயலை ஆவணப்படுத்த துடிக்கிறான். (ஆனால் பாண்டியன் சோழனை கொன்ற இழிசெயலை இராஜராஜன் பதிவு செய்யவில்லை என்பது முரண்)

2. பராந்தக சோழனால் துரத்தப்பட்ட இராஜசிம்ம பாண்டியனின் மகன் கூலிப்படை அனுப்பி சோழனின் தலையை வாங்கவில்லை. அவனே நேருக்கு நேர் நின்று வெற்றிப்பெற்று தான் அந்த புகழை பெறுகிறான். இத்தனைக்கும் சோழம் அப்போது பாண்டிய நாட்டை காட்டிலும் பன்மடங்கு பலமானது.

3. இடைக்கால சோழர்கள் பாண்டிய நாட்டை சின்னாபின்னமாகி வைத்தாலும் பிற்கால பாண்டியன் (மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்) தஞ்சையை தீக்கிரையாக்கினான். கூலிப்படையோ ஆபத்துதவிகளையோ அனுப்பி புறமுதுகில் குத்தவில்லை.

இப்படி ஓராயிரம் சான்றுகள் தமிழக மூவேந்தர்களின் நேருக்கு நேரான வீரத்தினை குறித்து காட்ட முடியும். அதையும் தாண்டி பாண்டியன் இப்படி ஒரு செயலை செய்திருப்பான் என்றால் அது சோழர்களால் தொடர்ச்சியாக சொல்லிக்காட்டப்பட்டிருக்கும். அது கடைசி வரை பாண்டய குலத்திற்கே அவமான அடையாளம். ஆனால் இராஜராஜன் கல்வெட்டில் ‘துரோகிகளான’ என்று குறிப்பிட்டுவிட்டு ‘பஞ்சவன் பிரம்மாதிராஜன்’, ‘இருமுடி சோழ பிரம்மாதிராஜன்’ என சோழர்களின் உயர் பொறுப்பில் இருக்கும் அரசு அதிகாரிகளின் பட்டங்களையும் சேர்த்தே குறிக்கிறான். எங்குமே பாண்டியனை பற்றி இல்லை. துரோகிகள் என குறித்து சொல்லும் போதே அது உள்நாட்டு பிரச்சனை என்பதாகிவிடுகிறது. இதனை விளக்க வேண்டியதே இல்லை.

ஆனால் ஏன் கொல்லனும்? அதற்கு ஆயிரம் அனுமானங்களை முன்வைக்கலாம். எத்தனையோ காரணங்களை கற்பிதம் செய்யலாம். அதையெல்லாம் விடுத்து கல்கி ஏன் “பாண்டிய ஆபத்துதவிகள்” என்று எழுதினார் என்பதை உங்கள் புரிதலுக்கே விட்டுவிடுகிறேன். அவர் அப்படி எழுதியதின் விளைவே இன்று வரை பாண்டியநாட்டு ஆபத்துதவிகள் என்று ஒரு மாபெரும் கேடுகெட்ட வரலாற்று பழியை பாண்டிய மன்னனுக்கு கொடுத்துவிட்டார்கள். இத்தனைக்கும் அதற்கு முகாந்திரமே இல்லை. இதுவே பிராமணர்கள் அல்லாது வேறு சமூகம் இந்த செயலை செய்திருக்குமானால் இந்த வரலாற்று பழி இதே கோணத்தில் மட்டுமே பிண்ணப்பட்டிருக்குமா? அனைத்தும் உங்கள் அனுமானத்திற்கே விட்டுவிடுகிறேன்.

மங்காத புகழ் படைத்த பாண்டியனின் வரலாற்றை எந்தவித முகாந்திரமும் இல்லாமல் பழியை மொத்தமாக சுமத்தி மீண்டும் ஒருமுறை எழுத்தால் முதுகில் குத்தியிருக்கிறார்கள். கத்தி முனையைவிட பேனா முனை கூர்மையானதல்லவோ!

தமிழர்களான மூவேந்தர்களும் தங்களுக்குள்ளாக நேருக்கு நேர் மோதிக்கொண்டதும் அதில் தோற்றவர்கள் பழிதீர்ப்பதும் போர்களத்தில் நடந்ததே ஒழிய புறமுதுகில் நடத்தப்பட்டதல்ல. ஆனால் ஆரிய அரசர்களின் வரலாற்றை எடுத்துப்பாருங்கள். மௌரியனின் உடனிருந்து வீழ்த்தியவன் ஆரியனான சுங்கன். சுங்கனை கூட இருந்தே காலி செய்தவன் ஆரியனான கண்வன்.

தமிழர்களையும் தமிழ்நாட்டையும் இதுவரை நேருக்கு நேர் நின்று வெற்றிக்கொண்ட கடைசி வேற்று மொழியினன் மேலை சாளுக்கியன் மட்டுமே! அதற்கு பிறகு துரோகத்தால் மட்டுமே வீழ்ந்தது தமிழினம்!!

தொடருவோம்..

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments